அலசல்
Published:Updated:

கிராமங்களில் நிகழும் கொரோனா மரணங்கள் கணக்கில் வருவதில்லை! - ரவிக்குமார் எம்.பி

ரவிக்குமார் எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
News
ரவிக்குமார் எம்.பி

தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய 35,000 கோடி ரூபாயை எப்படிச் செலவு செய்தீர்கள்?

கொரோனா முதல் அலையில் தொடங்கி தற்போது வரை மத்திய, மாநில அரசுகளுக்குப் பல ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்துவருகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார். தற்போது அவர், ‘சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘சுகாதாரம் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வேண்டியதன் அவசியம் என்ன?’’

‘‘கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில், நோயால் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் அரசு தலைமை மருத்துவமனைகளில் குறைவான அளவில்தான் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இருக்கின்றன. அதன் காரணமாக, தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால், அங்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு எச்சரித்தும்கூட, வெவ்வேறு பெயர்களில் அதிக கட்டணத்தை வசூலித்துவிடுகிறார்கள். அரசுக் காப்பீட்டுத் திட்டமும் அனைத்து மருத்துவ மனைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால், கடன் வாங்கி மக்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, தங்கள் வருமானத்தில் சுகாதாரத்துக்குத்தான் அதிகமான தொகையை மக்கள் செலவுசெய்துவருகிறார்கள். சுகாதாரம் அடிப்படை உரிமை ஆக்கப்பட்டால், குறிப்பிட்ட அளவுக்கான சுகாதார வசதியை மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவாகும். அதற்கேற்ப, பட்ஜெட்டில் அதிகமான நிதியை ஒதுக்கிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்படும். அதனால்தான், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துவருகிறோம்.’’

கிராமங்களில் நிகழும் கொரோனா மரணங்கள் கணக்கில் வருவதில்லை! - ரவிக்குமார் எம்.பி

‘‘சுகாதாரம் அடிப்படை உரிமையாக ஆனாலும்கூட, சில தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த முடியாதே?’’

‘‘அது உண்மைதான். ஆனால், 2002-ல் கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றானதன் அடிப்படையில்தான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் உருவானது. எட்டாம் வகுப்பு வரைக்கும் கட்டாய இலவசக் கல்வியை அரசு கொடுத்தாக வேண்டும் என்ற சூழல் உருவானது. அதனால், தனியார் பள்ளிகளிலும் குறிப்பிட்ட சதவிகித மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் அமலுக்கு வந்தன. சுகாதாரமும் அடிப்படை உரிமைகளில் ஒன்றானால், இம்மாதிரியான சில பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படும். மக்களுக்குச் சுகாதார வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது அரசின் கட்டாயப் பொறுப்பாக மாறும். தனியாரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதை ஈடுசெய்ய வேண்டியது அரசின் கடமையாகுமே தவிர, மக்கள் தலையில் சுமை விழாது.’’

‘‘தற்போதைய சூழலில், தனியார் மருத்துவமனைகளை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தாலே அதிக கட்டண வசூலிப்பைத் தடுக்க முடியுமே?’’

‘‘சுகாதாரம், அடிப்படை உரிமைகளில் ஒன்றானால் மட்டுமே இது சாத்தியம். இல்லையென்றால், தனியார் மருத்துவமனைகள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்குவார்கள். அதனால்தான் அடிப்படை உரிமையாக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’

கிராமங்களில் நிகழும் கொரோனா மரணங்கள் கணக்கில் வருவதில்லை! - ரவிக்குமார் எம்.பி

‘‘கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள், கிராம அளவில் சென்று சேரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தீர்கள்... தற்போது போதுமான அளவு வசதிகள் சென்றுசேர்ந்துள்ளனவா?’’

‘‘புதிய ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, நகர்ப்புறம் மற்றும் சிறு நகரங்களில் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்போதும் கிராமங்களில் இருப்பவர்கள் கொரோனாப் பரிசோதனை செய்துகொள்ள நகரங்களை நோக்கித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. காய்ச்சல் முகாம்கள் கிராமங்களில் அதிகமாக நடத்தப்பட வேண்டும். கிராமங்களில் பலர் காய்ச்சல் வந்தால் வீட்டிலேயே படுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் மூலம் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் தொற்று பரவுகிறது. ஒருசிலர், நகரங்களுக்குச் சென்று டெஸ்ட் எடுத்துக்கொண்டாலும் ரிசல்ட் வருவதற்கு மூன்று, நான்கு நாள்களாகின்றன. அவர்கள், பத்து, இருபது கிலோமீட்டர்களைத் தாண்டித்தான் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக அங்குதான் தற்போது தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது.

ஊரகப் பகுதிகளில் கொரோனாவால் இறப்போரின் விவரம் அரசுக்குச் சரியாக வருவதில்லை. மருத்துவமனைகளுக்கே வராமல் இறப்பவர்கள் எப்படிக் கணக்கில் வருவார்கள்? அதனால், ஊரகப் பகுதிகளில் நாம் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தாமல் இதைத் தடுக்க முடியாது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருப்பதுபோன்ற ஸ்கேன், லேப், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். இந்தக் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு கிராமப்புறச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே மருத்துவமனைகள் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றை மேம்படுத்த அழுத்தம் தரவேண்டும். கர்நாடகாவில் இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அவை குறைவு. தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் மத்திய தொழிலாளர் துறையிடம் கிடக்கிறது. மாவட்டம்தோறும் இ.எஸ்.ஐ மருத்துவமனையைக் கட்டுவோம் என 2019-ல் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் காங்குவார் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டும்படி தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.’’

‘‘தடுப்பூசி விவகாரத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசை நீங்கள் விமர்சித்துவருவது ஏன்?’’

‘‘நான் மட்டுமல்ல, மத்திய அரசுக்குத் தடுப்பூசிக் கொள்கைகளே இல்லை என உச்ச நீதிமன்றமே தற்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. கட்டணம் செலுத்தித் தடுப்பூசி போடுவது பொறுப்பற்ற செயல் எனவும் கண்டித்திருக்கிறார்கள். தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய 35,000 கோடி ரூபாயை எப்படிச் செலவு செய்தீர்கள், ஏன் போதுமான அளவில் தடுப்பூசிகளை வாங்கவில்லை எனவும் மத்திய அரசை நோக்கி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

நமக்குத் தெரிந்தவரை அந்த 35,000 கோடியில், 3,000 கோடியை சீரம் இன்ஸ்டியூட்டுக்கும் 1,500 கோடியை பாரத் பயோடெக்குக்கும் என ஆகமொத்தம் 4,500 கோடியை மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள். தவிர, எப்போது தடுப்பூசி வரும், எவ்வளவு தடுப்பூசி வரும் என்ற எந்தக் கேள்விக்கும் அமைச்சர்களிடமிருந்து பொறுப்பான பதில்கள் வருவதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் ஒரு வருடத்துக்கு மேலாகும்.

உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்த, பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கும்போது, அங்கு ஏன் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படுவதில்லை. புதிய கம்பெனிகளை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு மௌனமாகவே இருந்துவருகிறது. மத்திய அரசின் இந்தப் பொறுப்பில்லாதத் தன்மைதான் மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது.’’

‘‘தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறிவிட்டதே?’’

‘‘கோவிஷீல்டு, கோவேக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய மருந்துகளுக்குத்தான் ஐ.சி.எம்.ஆர் அனுமதி கொடுத்திருக்கிறது. ஐ.சி.எம்.ஆர் அனுமதி இல்லாமல், மாநில அரசுகள் நேரடியாகத் தடுப்பூசி மருந்துகளை வாங்க முடியாது. மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு சொன்னால் மட்டும் போதாது, அதற்கான அனுமதிகளையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே நாம் நேரடியாகக் கொள்முதல் செய்ய முடியும். ஆனால், அப்படிக் கொள்முதல் செய்வதையும் மாநில அரசின் நிதியிலிருந்து செய்யக் கூடாது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசிக்காகத்தான் 35,000 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, அந்தப் பணத்திலிருந்து நம் பங்கைப் பிரித்துக் கேட்க வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசையே நேரடியாகப் பணம் செலுத்தச் செய்ய வேண்டும். இதற்கான பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்ததுதான். அதைத்தான் உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது.’’