Published:Updated:

நாடாளுமன்றத்தை உலுக்கும் உளவுச் செயலி - முனைவர் ரவிக்குமார் எம்.பி

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

நாடாளுமன்றத்தை உலுக்கும் உளவுச் செயலி - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாள்... புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதற்காக, பிரதமர் மோடி எல்லாவிதத் தயாரிப்புகளோடும் வந்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய முழக்கத்தில் அவருடைய குரல் காணாமல்போனது. தனது பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு அவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிவிட்டார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே ஒத்திவைக்கப்பட்டன.

மறுநாள் 20-ம் தேதி மீண்டும் அவை கூடியபோது, தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் பெகாசஸ் உளவுச்செயலி பிரச்னை நாடாளுமன்றத்தில் பெரிதாக வெடித்தது. ‘உள்துறை அமைச்சர் இதற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. பெரும்பாலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்காமல் விலகியிருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் எம்.பி-க்கள் இந்தமுறை, தங்களுடைய மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து சபாநாயகரைச் சூழ்ந்துகொண்டு முழக்கமிட்டனர். இன்னொருபுறம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் 20-ம் தேதியும் எந்த அலுவலும் நடைபெறாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை உலுக்கும் உளவுச் செயலி - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19-ல் ஆரம்பித்து, ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருக்கிறது. இதில் 23 மசோதாக்களை அறிமுகப்படுத்தி, சட்டமாக்க ஆளுங்கட்சி திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் சில ஏற்கெனவே அவசரச் சட்டங்களாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆயுத தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாருக்குக் கொடுப்பதற்கான மசோதா, மின்சார விநியோகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான திருத்த மசோதா, நிலக்கரி வளமுள்ள நிலங்களைத் தனியாருக்கு அளிப்பதற்கான மசோதா... எனப் பெரும்பாலும் மக்களுக்கு விரோதமாகவே இருக்கும் இந்த மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன.

இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப் படுத்தப்படவிருக்கிற மசோதாக்களில் ஒன்று, இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021. வெவ்வேறு பெயர்களில் கடந்த பல ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டு, மீனவ மக்களின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதா, சட்டம் ஆக்கப்பட்டால் அதன் பிறகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர். ‘மீனவர்களுக்கு உதவி செய்யப் போகிறோம். நீலப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்கப்போகிறோம்’ என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், இந்த மசோதாவில் மீனவர்களுடைய நலனுக்கான எந்தவொரு திட்டமும் இல்லை. மாறாக, மீன்பிடித் தொழிலை ஒரு குற்றச்செயல் போலவும், மீனவர்களைக் குற்றவாளிகள்போலவும் ஆக்குவதாகவே இந்த மசோதா இருக்கிறது. இந்த மசோதா சட்டமானால், கடலில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அறிவிக்கும் அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு வந்துவிடும். அந்த மண்டலங்களில்தான் மீன்பிடிக்க வேண்டும் என்று மீனவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும். மீன்பிடித் தடைக்காலம், மீன்பிடித் தடை மண்டலம் பற்றி அறிவிக்கவும் ஒன்றிய அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு கண்காணிப்பு அமைப்பை அமைக்கவும், ‘ஆதரைஸ்டு ஆபீஸர்’ என்ற பெயரில் ஒரு மேலாண்மை அதிகாரியைக் கடலோர காவல்படையிலிருந்து நியமிக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அந்த அதிகாரி நினைத்தால் எந்தவொரு மீன்பிடிப் படகிலும் சோதனை செய்யலாம்; விதிகளை மீறியதாக மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்; படகையே பறிமுதல் செய்யலாம்.

நாடாளுமன்றத்தை உலுக்கும் உளவுச் செயலி - முனைவர் ரவிக்குமார் எம்.பி

இந்தச் சட்டம் மாநில அரசுகளின் அதிகாரத்திலும் தலையீடு செய்கிறது. 12 கடல் மைல் வரைதான் மாநில அரசுகளுக்கு அதிகாரம்; அதற்கு மேல் 200 கடல் மைல் வரை ஒன்றிய அரசு வைத்ததுதான் சட்டம் என்கிறது. இந்தச் சட்டத்தில் மீனவர்கள் யார் என்பது எந்த இடத்திலும் விளக்கப்படவில்லை. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களும்கூட லைசென்ஸ் பெற்றுக்கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும். மீன்பிடித் தொழிலை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் திறந்துவிடுவதற்காகத்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மீன்பிடித் தொழிலையும் கார்ப்பரேட் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்ட மசோதாவை அதனால்தான் ஒட்டுமொத்தமாக மீனவர்கள் எதிர்க்கின்றனர்.

கடந்த ஜூலை 15-ம் தேதி இந்த இந்திய கடல்சார் மீன்வள மசோதாவைப் பற்றி கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி-க்களோடு ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் இணையவழியில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார். அதில் நானும் பங்கேற்றேன். 83 எம்.பி-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் ஐந்து எம்.பி-க்கள்தான் அதில் பங்கேற்றோம். அதற்கு முதல் நாளே இந்தச் சட்ட மசோதாவைப் பற்றி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களின் பிரதிநிதிகளை நடுக்குப்பம் என்ற மீனவ கிராமத்தில் கூட்டி, அவர்களிடம் ஒவ்வொரு சட்டப் பிரிவாக விளக்கிக் கூறினேன். அதன் பின்னர், சில தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை ஒன்றிய அமைச்சர் கூட்டிய இணையவழிக் கூட்டத்தில் நான் எடுத்துரைத்தேன். அந்தத் தீர்மானங்களில் ஒன்று: ‘தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்பதாகும். இப்போது தமிழ்நாடு முதலமைச்சர், ‘இந்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டாம்’ என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மீனவர்களின் குரலுக்குத் தமிழக அரசு மதிப்பளித்திருப்பது, அவர்கள் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

நாடாளுமன்றத்தை உலுக்கும் உளவுச் செயலி - முனைவர் ரவிக்குமார் எம்.பி

இந்தக் கூட்டத்தொடரில் ‘பெகாசஸ் உளவுச் செயலி’ விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது. 2019-ம் ஆண்டிலேயே பெகாசஸ் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது வாட்ஸ்அப் நிறுவனம் பெகாசஸ் செயலியைத் தயாரிக்கும் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது. அதன் பின்னர்தான் ‘தி கார்டியன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ உள்ளிட்ட உலக அளவில் முன்னணி வகிக்கும் 10 நாடுகளைச் சேர்ந்த 17 ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘தி பெகாசஸ் புராஜெக்ட்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்தச் செயலியின் செயல்பாடுகளைப் புலனாய்வு செய்தன. இதற்கு ஒருங்கிணைப்பாளராக ‘ஃபர்பிடன் ஸ்டோரீஸ்’ என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடக நிறுவனமும், ஆலோசகராக ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பும் செயல்பட்டன. அந்தப் புலனாய்வில் பெகாசஸ் உளவுச் செயலியால் தாக்குதலுக்கு ஆளான 50,000 தொலைபேசி எண்களை அவர்கள் கண்டறிந்தனர். அப்படித் தாக்குதலுக்கு இலக்கான எண்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா என 45 நாடுகளைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டன.

இந்தச் செயலியை உருவாக்கியது என்.எஸ்.ஓ என்ற தனியார் நிறுவனமாக இருந்தாலும், அந்த அமைப்பு தான் விரும்புகிற எவருக்கும் இந்தச் செயலியை விற்றுவிட முடியாது. இதை விற்க வேண்டுமென்றால், இஸ்ரேல் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும், ஏனென்றால், இந்தச் செயலி ஒரு ‘இணையவழி ஆயுதம்’ என வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதை அமெரிக்காவில் இருக்கும் மொபைல் எண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை முடிவை இந்த நிறுவனம் எடுத்துள்ளது. இதை அரசாங்கங்களுக்கு மட்டும்தான் விற்பனை செய்வது, அதுவும் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இதை அனுமதிப்பது என என்.எஸ்.ஓ நிறுவனம் சொல்லிக்கொண்டாலும், இந்த பெகாசஸ் உளவுச் செயலி ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல தரப்பினருக்கு எதிராகவும் பயன்படுத்தப் பட்டிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் ராகுல் காந்தி, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, முன்னாள் தேர்தல் ஆணையர், மூத்த வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரின் மொபைல் போன்களும் பெகாசஸ் உளவுச்செயலியின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இந்த பெகாசஸ் செயலி விஷயம் என்பது, தனி நபருடைய அந்தரங்கம் தொடர்பானது மட்டுமல்ல... நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்தாகும். இதைவைத்து எவரை வேண்டுமானாலும் ஊழல் வழக்கிலோ, பயங்கரவாதக் குற்றத்திலோ சிக்கவைத்துவிட முடியும்.

பெகாசஸ் செயலியை நாம் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் செயலிபோல நினைக்கக் கூடாது. அதன் விலை மிக மிக அதிகம். அந்தச் செயலியைத் தயாரிக்கும் நிறுவனம் அதன் விலை என்னவென்று தெரிவித்திருக்கிறது. ஒரு பெகாசஸ் செயலியை நிறுவுவதற்கான கட்டணம் 5 லட்சம் டாலர். அதாவது 3.75 கோடி ரூபாய். அதைக்கொண்டு 10 போன்களை உளவு பார்ப்பதற்கான கட்டணம் 4.87 கோடி ரூபாய். அதற்குமேல் 50 போன்களை வேவு பார்க்க 3.75 கோடி செலுத்த வேண்டும். 100 போன்களென்றால் கட்டணச் சலுகை உண்டு. 6 கோடி ரூபாய் செலுத்தினால் போதும். தற்போது இந்தியாவைச் சேர்ந்த 300 பேருடைய தொலைபேசி எண்கள் பெகாசஸ் செயலியின் தாக்குதலுக்கு ஆளான பட்டியலில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது இந்த 300 பேரையும் உளவு பார்ப்பதற்கு உத்தேசமாக 75 லட்சம் டாலர் கட்டணமாக செலுத்தியிருக்க வேண்டும். இன்றைய மதிப்பில் அது சுமார் 57 கோடி ரூபாய் ஆகும்.

நாடாளுமன்றத்தை உலுக்கும் உளவுச் செயலி - முனைவர் ரவிக்குமார் எம்.பி

இதன் விலை, இதனால் தாக்குதலுக்கு ஆளானவர்களின் பட்டியல் ஆகியவற்றைப் பார்த்தாலே இதைப் பயன்படுத்தியவர்கள் யார் என்பதை நாம் எளிதில் யூகித்துவிடலாம். பா.ஜ.க அரசோ, தங்களுக்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை எனச் சாதிக்கிறது. அது உண்மையென்றால், இந்தச் செயலியைப் பயன்படுத்தியவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பொறுப்பு இந்திய ஒன்றிய அரசுக்கே உள்ளது. காங்கிரஸ் கட்சி கோருவதைப்போல உளவுத்துறை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டாம்; குறைந்தபட்சம் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் ஒரு விசாரணைக்காவது உத்தரவிடலாமில்லையா?