Published:Updated:

போதைப்பொருள் தடுப்பு சட்டத் திருத்தம்... மக்கள் விரோத சட்டங்கள் வரிசையில் மற்றுமொன்று!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

- முனைவர் ரவிக்குமார் எம்.பி

போதைப்பொருள் தடுப்பு சட்டத் திருத்தம்... மக்கள் விரோத சட்டங்கள் வரிசையில் மற்றுமொன்று!

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்...

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இதில் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்ட பின்னடைவை எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று பெரும்பாலோர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், காங்கிரஸ் அல்லாத அணியை அமைப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா மேற்கொண்ட நடவடிக்கை அந்த வாய்ப்பைச் சீர்குலைத்துவிட்டது. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடியாமல் போனது.

இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க., தனது பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது. காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களைத் திறந்துவைத்துப் பேசிய பிரதமர் மோடி, “ஔரங்கசீப்பின் அராஜகங்களையும் பயங்கரவாதத்தையும் இந்த நகரின் வரலாறு கண்டது. வாள்முனையில் நாகரிகத்தை மாற்ற முயன்றவர்களையும், மதவெறியால் கலாசாரத்தை அழிக்க முயன்றவர்களையும் வரலாறு கண்டது. ஆனால், இந்த நாட்டின் மண், உலகில் மற்ற பகுதிகளைவிட வேறுபாடானது. ஓர் ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார்” என்று முழங்கினார். உ.பி தேர்தல் களத்தை வழக்கமான மதவாத சூத்திரத்தின் அடிப்படையிலேயே பா.ஜ.க கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறது என்பதற்குப் பிரதமரின் பேச்சே சான்று.

போதைப்பொருள் தடுப்பு சட்டத் திருத்தம்... மக்கள் விரோத சட்டங்கள் வரிசையில் மற்றுமொன்று!

‘உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிதான்’ என்று அரசு சார்பு ஊடகங்கள் எழுத முற்பட்ட வழமையான தீர்ப்பை, லக்கிம்பூர் கேரி கொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக்குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை சிக்கலாக்கிவிட்டது. ‘லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்டது தற்செயல் நிகழ்வு அல்ல; திட்டமிடப்பட்ட சதிச் செயல். எனவே, முதல் தகவல் அறிக்கையில் அதற்குரிய சட்டப் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்’ என்று சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர்மீது புதிய சட்டப் பிரிவுகளைச் சேர்த்து, திருத்தம் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை உள்துறை இணை அமைச்சராக நீடிப்பது வழக்கின் புலனாய்வைச் சீர்குலைக்கும் என்று எதிர்க்கட்சிகள் டிசம்பர் 15 அன்று நாடாளுமன்ற அலுவல்களை முடக்கின.

முன்னதாக அன்றைய தினம் காலை, மக்களவையில் ராகுல் காந்தி இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார். அதில், ‘உள்துறை இணை அமைச்சரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால், அவை தொடங்கியதும் வழக்கமான அலுவல்களை மேற்கொண்டார் சபாநாயகர். ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இதனால், “லக்கிம்பூர் கேரி படுகொலை தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். அவை ஒத்திவைக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு சட்டத் திருத்தம்... மக்கள் விரோத சட்டங்கள் வரிசையில் மற்றுமொன்று!

“லக்கிம்பூர் கேரி தொடர்பான எஸ்.ஐ.டி அறிக்கையேகூட பா.ஜ.க அரசின் ஏற்பாடுதான். அதன் மூலம் விவசாயிகளைச் சமாதானப்படுத்தி உத்தரப்பிரதேசத்திலும் பஞ்சாப்பிலும் அவர்களது வாக்குகளைப் பெற்றுவிட நினைக்கிறது. உத்தரப்பிரதேசத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், இந்த வழக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும். மக்களின் கவனத்தை திசைதிருப்பி இதை மறக்கச் செய்துவிடுவார்கள்” என்று சிலர் சந்தேகிக்கின்றனர். பா.ஜ.க-வின் சித்து விளையாட்டுகளை அறிந்தவர்கள், இந்த வாதத்தை எளிதாக நிராகரித்துவிட முடியாது. உத்தரப்பிரதேசத் தேர்தலை பா.ஜ.க-வுக்கு சாதகமாக விட்டுவிடக் கூடாது என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கவே செய்கிறது. அதனாலேயே, “முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்தை வெறும் கட்டடமாக, அருங்காட்சியமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி.

எதிர்க்கட்சிகளின் தாக்குதல் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் டிசம்பர் 15 அன்றே தென்படத் தொடங்கின. ‘இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் காந்தி சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, அங்கிருந்து விஜய் சௌக்குக்கு ஊர்வலமாகச் சென்று ஊடகத்தினரைச் சந்தித்தனர். வேறு வழியின்றி திரிணாமுல் எம்.பி-க்களும் அதில் பங்கேற்றனர். அன்று மாலையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு மம்தா பானர்ஜி அழைக்கப்படவில்லை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்தினவே தவிர, அங்கு என்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில்தான், லக்கிம்பூர் கேரி பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த இந்தத் தாக்குதல் போகப் போகத் தீவிரமடையும். அப்போது இயல்பாக காங்கிரஸின் தலைமை நிறுவப்படும் என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கிடையே தமக்குத் தேவையான மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தது பா.ஜ.க அரசு. போதைப்பொருள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை அப்படித்தான் நிறைவேற்றிக்கொண்டனர். அதை அறிமுகப்படுத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சட்டத்தில் ஏற்பட்ட ஒரு ‘கிளரிக்கல் எர்ரரை’ சரிசெய்வதற்காக இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதலில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு, அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியது. பிறகு திரிபுரா உயர் நீதிமன்றமும் சுட்டிக்காட்டியது, அதனாலேயே, அவசரச் சட்டமாக செப்டம்பரில் பிறப்பித்து, இப்போது அறிமுகம் செய்திருக்கிறோம்” என்றார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய பிஜு ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான பர்த்ருஹரி மகதாப், “இந்த சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. ஒரு கிரிமினல் சட்டத்தில் முன் தேதியிட்டு திருத்தம் கொண்டுவருவது சட்டப்படி ஏற்புடையதல்ல. அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வழக்கம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையிலிருந்து, நாம் கடன் வாங்கிய ஒன்று. இப்படி அவசரச் சட்டங்களைப் பிறப்பிப்பது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையே நீர்த்துப்போகச் செய்கிறது. பிரிட்டிஷ் அரசே கைவிட்டுவிட்டதை நம் அரசும் கைவிட வேண்டும். 2014-ல் செய்த தவற்றை இப்போது திருத்துகிறீர்கள். சட்டம் இயற்றும் நடைமுறையில் இந்த அரசு எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்” என்று கடுமையாக விமர்சித்தார்.

போதைப்பொருள் தடுப்பு சட்டத் திருத்தம்... மக்கள் விரோத சட்டங்கள் வரிசையில் மற்றுமொன்று!

காங்கிரஸ் சார்பில் பேசிய மனிஷ் திவாரியும், திரிணமுல் சார்பில் பேசிய கல்யாண் பானர்ஜியும் “சிவில் சட்டங்களில், குறிப்பாக வரி வசூல் தொடர்பான சட்டங்களில் முன் தேதியிட்டுத் திருத்தம் கொண்டுவரலாம். ஆனால், கிரிமினல் சட்டங்களில் முன் தேதியிட்டுத் திருத்தம் கொண்டுவரும் நடைமுறை கிடையாது. அவ்வாறு செய்வது எதிர்காலத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஒருவர் ஒரே குற்றத்துக்காக இரு முறை தண்டிக்கப்படுவதற்கு இது வழிவகுக்கும். அரசியல் பழிவாங்கலுக்கும் இது துணைபுரியும். எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறோம்” என்றார்கள்.

இந்த விவாதத்தில் பேசிய நான், “இந்த சட்டத்தின் பிரிவு 37, 67 ஆகியவற்றையும் திருத்தம் செய்து சட்டம் கொண்டுவர வேண்டும். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 37, ஒருவர் எளிதில் ஜாமீன் பெற முடியாதபடி ஆக்கியிருக்கிறது. ‘தன்மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையல்ல என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும்’ என்கிறது அது. இதனால் எவரும் பிணை பெற முடிவதில்லை. 161 சி.ஆர்.பி.சி-யின் கீழ் காவல்துறையினரின் முன்னால் அளிக்கப்படும் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்காது என்பதே நடைமுறை. ஆனால், இந்தச் சட்டப் பிரிவு 67 ‘காவல்துறையின் முன்னால் ஒருவர் கொடுக்கிற வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்’ என்று சொல்கிறது. இந்த இரண்டு சட்டப் பிரிவுகளும் இந்தச் சட்டத்தை யு.ஏ.பி.ஏ., தடா, பொடா ஆகிய மக்கள் விரோதச் சட்டங்களின் வரிசையில் சேர்க்கின்றன. எனவே, இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்” என்று சுட்டிக்காட்டினேன்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவை நோக்கி நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடுவார்களா... வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மசோதா உட்பட தான் விரும்பும் சட்ட மசோதாக்களை பா.ஜ.க அரசு நிறைவேற்றுமா என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.