அலசல்
Published:Updated:

வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்... - முனைவர் ரவிக்குமார் எம்.பி

குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், 20.12.2021 அன்று காலையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய ‘தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா’ கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. தற்போது இருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் 1951 ஆகியவற்றில் நான்கு திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்தச் சட்ட மசோதா வழிவகுக்கிறது.

வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!

முதல் திருத்தம், ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் செய்வதற்கு பதிலாக ஆண்டுக்கு நான்கு முறை சேர்க்கை, நீக்கம் செய்வதற்கு வழிவகுக்கிறது. இனி ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என நான்கு முறை வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம் செய்துகொள்ள முடியும். இரண்டாவது திருத்தம், பிரிவு 20-ன்கீழ் ‘மனைவி’ என்று இருப்பதை ‘இணையர்’ எனத் திருத்துவதற்கு வகைசெய்கிறது. இதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறது அரசு. மூன்றாவது திருத்தம், ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பது. நான்காவது திருத்தம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 160-ல் திருத்தம் செய்வதற்கானதாகும். வாக்குப்பதிவு நடக்கும் இடம், வாக்குப்பதிவு எந்திரங்கள் முதலானவற்றைப் பாதுகாத்துவைக்கும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, அறிவிப்பு செய்வதற்கான அதிகாரத்தை அளிக்கிறது அது.

இந்த நான்கு திருத்தங்களில், ‘ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும்’ என்ற சட்டத் திருத்தம்தான் அதிகம் எதிர்க்கப்படுகிறது. அவ்வாறு இணைப்பது தேர்தல் ஜனநாயகத்தைச் சீரழித்துவிடும் என்று எதிர்க்கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தத் திருத்தம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, பிரிவு 23-ல் துணைப்பிரிவு 3-க்குப் பிறகு ஓர் உட்பிரிவைச் சேர்க்கிறது. அனைத்து வாக்காளர்களும், தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதை அந்தப் பிரிவு கட்டாயமாக்குகிறது.

வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!

‘உரிய காரணங்களால் ஆதார் எண்ணை வழங்கவோ அல்லது தெரிவிக்கவோ ஒரு நபரால் இயலவில்லை என்பதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படாது’ என்று இந்தச் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருந்தாலும், சில சமூகக் குழுக்களைச் சேர்ந்த வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் செய்வதற்கே இது வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.

‘ஆதார் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்தது. ‘அந்தரங்கம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை’ என்றும் அந்தத் தீர்ப்பில் உறுதிசெய்தது நீதிமன்றம். ஆனாலும், அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு ஓராண்டுக்குள் வங்கி மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு ஆதார் எண்களைப் பயன்படுத்த அனுமதியளித்து ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்தது பா.ஜ.க அரசு. உடனடியாக அந்தச் சட்டத் திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்ட நிலையில், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!

‘வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் வாக்காளராகப் பதிவுசெய்திருப்பதைக் கண்டறிந்து நீக்க வேண்டும். அதற்கு வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. எத்தனை பேர் அப்படி வெவ்வேறு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையோ, ஆதாருடன் இணைப்பதால் அந்தப் பெயர்களை எப்படி அகற்ற முடியும் என்பதையோ தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதால், மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகும் என்பதற்கு ஏற்கெனவே சான்றுகள் உள்ளன. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு ‘தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் திட்டத்தை’ 2015-ல் இந்திய அரசு கொண்டுவந்தது. ஆனால், ஆதார் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த உச்ச நீதிமன்ற அமர்வு 2015, ஆகஸ்ட் 11-ம் தேதி அதைத் தடை செய்துவிட்டது. அதற்குள் அவசர அவசரமாக ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்துவிட்டனர். அதனால் அங்கு சுமார் 55 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோனது. தொழில்நுட்பக் காரணங்களால் இணைப்பின்போது வாக்காளர்களின் பெயர்கள் ‘டெலிட்’ ஆனதாகச் சொல்லப்பட்டாலும், இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது, மக்களின் அந்தரங்கத் தகவல்களை வாக்காளர் தரவுத்தளத்துடன் இணைக்க வழிவகுக்கும். இது மத, இன அடையாளங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவினரை அடையாளப்படுத்துவதற்கும், அவர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும், தேர்தலின்போது இலக்குவைத்து விளம்பரம் செய்வதற்கும், தரவுகளின் அடிப்படையிலான வணிகச் சுரண்டலுக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது மொபைல் எண்களை வைத்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க-வினர் மேற்கொண்டனர். அதை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டவை; ஆதார் தரவுத்தளத்திலிருந்து சட்டவிரோதமாக அவற்றை எடுத்து பிரசாரம் செய்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘பிரதிவாதியான அரசியல் கட்சி (பா.ஜ.க), தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் அனுமதிக்கப்படாத பிரசாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது.வாக்காளர்கள் மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட விவரங்கள் அந்த அரசியல் கட்சியால் பெறப்பட்டு பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெளிவாகிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்னொரு பிரதிவாதி (யு.ஐ.டி.ஏ.ஐ) அதன் பொறுப்பில் இருக்கும் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு கசிந்தன என்பதைக் கண்டறிய முயல்வதைவிட, மனுதாரர் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை என்று குற்றம்சாட்டுகிறது. எவ்வாறாயினும், இந்த விவகாரத்தை யு.ஐ.டி.ஏ.ஐ-யின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, யு.ஐ.டி.ஏ.ஐ குறிப்பிட்ட அரசியல் கட்சியால் இத்தகைய தகவல்களை எவ்வாறு பெற முடிந்தது என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆதார் விவரங்களைவைத்து தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட முடியும் என்பதற்கு ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மேற்கண்ட சம்பவங்களே சாட்சி. ஆதாரை சமூகநலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதிலும்கூட ஏராளமான குளறுபடிகளே நடக்கின்றன. 2018-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஆதாரை இணைப்பதில் சுமார் 12 சதவிகிதம் தோல்வி நேர்ந்திருக்கிறது என்று யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பே ஒப்புக்கொண்டுள்ளது. அதனால் பல லட்சம் பேர் சமூக நலத்திட்டங்களால் பயன்பெற முடியாமல் போனது.

இந்த நிலையில் ஆதாரை வாக்காளர் பட்டியலோடு இணைப்பது இன்னொரு பேராபத்தையும் கொண்டுவரப்போகிறது. இதன் மூலம், பாஜக அரசு 2019-ல் இயற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிப்பதை அது எளிதாக்கிவிடும். அவ்வாறு பதிவேடு தயாரிக்கப்பட்டுவிட்டால், அதன் அடுத்தகட்டமாக தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்கப்படும். குடிமக்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்குவது என்பதுதான் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு பா.ஜ.க வகுத்து வைத்திருக்கும் திட்டம். அதன் முதல் படிதான் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு.

வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா!

‘தரவு பாதுகாப்புக்கான சிறப்புச் சட்டம் ஒன்றை உடனடியாக இயற்ற வேண்டும்’ என்று புட்டசாமி வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், அதை இதுவரை பா.ஜ.க அரசு செய்யவில்லை. மாறாக உச்ச நீதிமன்றம் எதை செய்யக் கூடாது என்றதோ அதைச் செய்வதற்காக சட்டம் கொண்டுவருகிறது. அதிலிருந்தே பா.ஜ.க அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று 500-க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால், பா.ஜ.க அரசு அதையெல்லாம் மதிக்கப்போவதில்லை. வேளாண் சட்டங்களைவிட ஆபத்தான இந்தச் சட்ட மசோதாவால் அனைவருமே பாதிப்புக்குள்ளாவோம். இதை முறியடிப்பதற்காகவேனும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுமா?