அரசியல்
அலசல்
Published:Updated:

பெண்கள் திருமண வயது திருத்தச் சட்டம்... பொது சிவில் சட்டத்துக்கு முன்னோட்டமா?

திருமண வயது திருத்தச் சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமண வயது திருத்தச் சட்டம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்... - முனைவர் ரவிக்குமார் எம்.பி

பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை இந்திய ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் டிசம்பர் 21 அன்று அறிமுகப்படுத்தியது. அறிமுக நிலையிலேயே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது இந்தச் சட்டத் திருத்த மசோதா.

 - முனைவர் ரவிக்குமார் எம்.பி
- முனைவர் ரவிக்குமார் எம்.பி

‘குழந்தைத் திருமணங்கள் தடுப்புச் சட்டம் 1929 என்பது 2006-ம் ஆண்டில், இன்னொரு கடுமையான சட்டத்தால் பதிலீடு செய்யப்பட்டது. ஆனாலும், இந்தக் கேடு விளைவிக்கும் பழக்கம் இன்னும் நம் சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கப்படவில்லை. அதற்கான சீர்திருத்தங்களைச் செய்யவேண்டியது அவசியம். பெண்களின் உடல், மனம், பேறுகால ஆரோக்கியம் உட்பட அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேறாமல் நாடு முன்னேற முடியாது. நமது அரசியலமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக பாலின சமத்துவத்தை உத்தரவாதம் செய்கிறது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்கிறது. ஆனால், தற்போதுள்ள சட்டங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயதில் பாலின சமத்துவத்தைப் போதுமான அளவில் கடைப்பிடிக்கவில்லை. இதனால் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கும், பல்வேறு திறன்களை அடைவதற்கும் தடையாக இருக்கிறது. பெண்கள் சுயசார்புடன் இருப்பதைத் தடுக்கிறது. சிறு வயதிலேயே கர்ப்பம் தரிப்பதால் குழந்தைகள் இறப்பதற்கும், தாயின் இறப்பு சதவிகிதம் அதிகரிப்பதற்கும் அது காரணமாகிறது’ என்று அந்த மசோதாவில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூற்றையெல்லாம் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “இந்தச் சட்டம் தொடர்பாக அரசு கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை. அவசர அவசரமாக இதைக் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன? இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார். திரிணாமுல் காங்கிரஸின் சௌகதா ராய், “இந்த மசோதா தொடர்பாக விரிவான விவாதம் தேவை. இதைச் சிறுபான்மையினர் கடுமையாக எதிர்க்கிறார்கள்” என்றார். இந்திய முஸ்லிம் லீக்கின் முகமது பஷீர், “இது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25-க்கு எதிரானது மட்டுமின்றி தனிநபர் சட்டங்களுக்கும், மக்களுடைய அடிப்படை உரிமைக்கும் எதிரானது” என்றார். கேரளாவின் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் பிரேமச்சந்திரன், “ஒருவர் இந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு 18 வயது போதும் என்று நிர்ணயித்திருக்கிறீர்கள். ஆனால், திருமணம் செய்துகொள்வதற்கு மட்டும் 21 வயது வேண்டும் என்று சொல்வது பொருத்தமற்றது. கிராமப்புறங்களில் பெண்கள் 20 வயது வரை திருமணம் செய்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பது இயலாத விஷயம். இதை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல” என்றார். இவர்கள் தவிர, தி.மு.க-வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் வி.வி.ராவத், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி ஆகியோரும் இந்த மசோதாவை விரிவான விவாதத்துக்காக நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “19-ம் நூற்றாண்டில் பெண்களின் திருமண வயது 10-ஆக இருந்தது. 1940-ல் அது 14-ஆக உயர்த்தப்பட்டது. 1978-ல் 15 வயது நிரம்பிய பெண்களே திருமணம் செய்துகொள்ள முடியும் என்று சட்டம் திருத்தப்பட்டது. ஆனால், ஆணும் பெண்ணும் சம வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டத் திருத்தம் முதன்முறையாக இப்போதுதான் கொண்டுவரப்படுகிறது. 2015-2020 காலகட்டத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், உறுப்பினர்கள் வலியுறுத்திய காரணத்தால் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

திருமண வயதை 21-ஆக உயர்த்தலாமா என்பது பற்றி ஆராய்வதற்கு, சமதா கட்சியின் முன்னாள் தலைவரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஜெயா ஜெட்லி தலைமையில் 2020, ஜூன் மாதத்தில் குழு ஒன்றை அமைத்தது ஒன்றிய அரசு. அந்தக் குழுவின் முன்பு பலரும் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்திருந்தனர். 15 மாநிலங்களைச் சேர்ந்த 2,500 இளைஞர்களிடம் கருத்து கேட்டு, 96 சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த கூட்டமைப்பினர் ஒரு கோரிக்கை மனுவை முன்வைத்தனர். அதில், ‘திருமண வயதை உயர்த்துவது பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை ஒருபோதும் மேம்படுத்தாது. எங்கள் குடியிருப்புக்கு அருகில் பாதுகாப்பான, தரமான இலவசக் கல்வி கிடைப்பதை அது உறுதி செய்யாது. இது இளையோர்மீது அழுத்தத்தையும், வன்முறையையும், அவர்களைக் குற்றவாளிகளாக்கும் போக்கையும் அதிகரிக்கச் செய்யும். பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை, அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளை அது வழங்கப்போவதில்லை. இப்படி திருமண வயதை உயர்த்துவதைக் காட்டிலும் தரமான, சமமான, இலவசக் கல்வி பெறும் உரிமையை வழங்க வேண்டும். போதிய வருமானம் ஈட்டக்கூடிய பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பெண்கள் குறித்து மேற்கொள்ளப்படும் முடிவுகள் எல்லாவற்றிலும் அவர்களின் கருத்துகளைக் கேட்பதற்கு வழிசெய்ய வேண்டும். பாலுறவு, பேறுகால உடல்நலம், மனநலம் குறித்த உரிமையை, பெண்கள் உடல்மீதான உரிமையை அவர்களுக்கு அளிப்பதும் அவசியம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2021, ஜனவரி மாதம் ஜெயா ஜெட்லி குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில் என்னென்ன பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன என்பதை அரசு ரகசியமாக வைத்திருந்து, இப்போது இந்த சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது.

பெண்கள் திருமண வயது திருத்தச் சட்டம்... பொது சிவில் சட்டத்துக்கு முன்னோட்டமா?

உலகெங்கும் பெண்களின் திருமண வயது ஒரே மாதிரியாக இல்லை. பல நாடுகளில் 16 வயது என்றும், சில நாடுகளில் 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகளில் 18 வயது என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஆணைவிட பெண்ணுக்குத் திருமண வயது குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ், எகிப்து, வியட்நாம், நமீபியா என ஒருசில நாடுகளில் மட்டும்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயது 21 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத் திருத்த மசோதா தற்போது இந்தியாவில் நடைமுறையிலுள்ள ஏழு திருமண சட்டங்களில் திருத்தம் செய்கிறது. தவிர அனைத்து தனிநபர் சட்டங்களையும் இது கட்டுப்படுத்தும். முஸ்லிம் தனிநபர் சட்டம், ‘பருவமடையும் வயதே பெண்ணின் திருமண வயது’ என்கிறது. அது 16-ஆக இருக்கலாம் அல்லது அதைவிடவும் குறைவாகக்கூட இருக்கலாம். அதை, தற்போதுள்ள குழந்தைத் திருமண தடைச் சட்டம் கட்டுப்படுத்தாது. ஆனால், இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம் பெண்களின் திருமண வயதும் 21 ஆகிவிடும். அதனால்தான், இந்தச் சட்டம் தங்களைக் குறிவைத்துத்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகின்றனர். பா.ஜ.க அரசின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது. அதற்கான அடித்தளம்தான் இது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் திருமண வயது திருத்தச் சட்டம்... பொது சிவில் சட்டத்துக்கு முன்னோட்டமா?

இந்தச் சட்டம் கலப்புத் திருமணங்களைத் தடுப்பதற்கானது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தவிர, 21 வயதுக்கு முன் ஒரு பெண் மனமொப்பி ஓர் ஆணுடன் உறவுகொண்டால்கூட அதைப் பாலியல் வன்கொடுமை என்று கூறுவதற்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. இப்போதேகூட அப்படிப் பொய் வழக்குகள் பதியப்படுகின்றன. இந்தியாவில் பதிவுசெய்யப்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கும், பெண்ணின் திருமண வயதுக்கும் இடையிலான தொடர்பை, ‘தரவு விஞ்ஞானி’ எஸ்.ருக்மிணி ‘ஹோல் நம்பர்ஸ் ஹாஃப் ட்ருத்ஸ்’ என்ற தனது நூலில் விவரித்துள்ளார். 2014-ம் ஆண்டில் டெல்லியிலுள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற 600 பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆராய்ந்ததில், அவற்றில் 189 வழக்குகள் மனமொத்து உறவுகொண்ட தம்பதிகள் தொடர்பானவை என்பது தெரிந்தது. அவர்கள் வெவ்வேறு சாதிகளையோ மதங்களையோ சேர்ந்தவர்களாக இருந்தனர். திருமணத்துக்குச் சம்மதிக்காத பெண்ணின் பெற்றோர் தமது மகளைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகப் பொய் வழக்கு தொடுத்திருப்பது தெரியவந்தது’ என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார்.

தேர்தல் சட்டத் திருத்தம்போல இதுவும் மக்களுக்கு எதிரான சட்டமாகவே பார்க்கப்படுகிறது. இப்படியான சட்டங்களைக் கொண்டுவருவதைக் கைவிட்டுவிட்டு ‘கிராமப்புற வேலை உறுதிச் சட்டம்’போல மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரேயொரு சட்டத்தையாவது பா.ஜ.க அரசு கொண்டுவராதா?