Published:Updated:

நாடாளுமன்றத்தில் ஓங்கிய தமிழக குரல்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

நாடாளுமன்றத்தில் ஓங்கிய தமிழக குரல்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கினார் அண்ணா. அதை நாம் மாற்றி, ‘தெற்கு தேய்க்கப்படுகிறது’ என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லாவிதங்களிலும் தென்மாநிலங்களை... குறிப்பாகத் தமிழ்நாட்டை இந்திய ஒன்றிய அரசு பாகுபாட்டுடன் நடத்திவருகிறது. 15-வது நிதிக்குழு, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு செய்வதற்கான ஃபார்முலா ஒன்றை வெளியிட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அந்த ஃபார்முலாவின்படி கடந்த முறையைவிட தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மக்கள்தொகைப் பெருக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தியதால் தமிழ்நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய அநீதி இது... வரி வருவாயில் இந்தியாவில் மிக அதிகமான சதவிகிதத்தை தமிழ்நாடு தருகிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசிடமிருந்து மிகக் குறைவாகவே அது நிதியைப் பெறுகிறது.

ரவிக்குமார்
ரவிக்குமார்

இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காகப் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து வேதனையோடு தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘டிஃபென்ஸ் காரிடாருக்கு’ நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ரயில்வே திட்டங்களை எடுத்துக்கொண்டால், ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு மிகக் குறைவாக இருக்கிறது. பீகாருக்கு 6,606 கோடி ரூபாய், ஆந்திராவுக்கு 7,032 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு 3,365 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க 59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஓங்கிய தமிழக குரல்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

தமிழ்நாட்டுக்குக் கொடுக்கவேண்டிய பேரிடர் நிவாரண நிதியை இதுவரை இந்திய ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இது தொடர்பாக உள்துறை அமைச்சரை அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து வலியுறுத்தினோம். வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அது விடுவிக்கப்படும் என்று எங்களுக்கு அவர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை அந்தத் தொகையைத் தரவில்லை. அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கான தொகையும் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை கடிதம் எழுதிவிட்டார். நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராடிப் பார்த்துவிட்டோம். ஆனால், ஒன்றிய அரசு பாராமுகமாகவே இருக்கிறது.

‘மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வட்டியில்லாத கடன் அளிக்கப்படும்’ என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார். அதேசமயம், அந்தக் கடன் என்னென்ன திட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருக்கிறார். ‘கதி சக்தி’ என்று ஒன்றிய அரசால் பெயரிடப்பட்டிருக்கும் திட்டங்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்த முடியாத தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நதிகள் இணைப்பு பற்றி நிதியமைச்சர் பட்ஜெட்டில் ஆரவாரமாக அறிவித்திருக்கிறார்தான்... கோதாவரி - பெண்ணாறு - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த பட்ஜெட்டில் அதற்காக ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, இது வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியில் 25 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்குக் கூலிகூட கொடுக்க முடியாத நிலை... வேறு வழியின்றி, தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து அதைக் கொடுத்துவிட்டு இப்போது ஒன்றிய அரசிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர், ‘100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கு பா.ஜ.க அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரநிலை மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துவருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமல்லாமல், பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களைக்கூட மறைத்து, பொய்யான விவரங்களை பா.ஜ.க அரசு கொடுக்கிறது என்பதை ஆதாரங்களோடு ஆகார் பட்டேல் என்பவர் எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். புள்ளிவிவரங்களை மறைக்கும் புதிய ஏமாற்று முறையை பா.ஜ.க அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதனால் இந்தியா பற்றிய நம்பகத்தன்மை அயல்நாடுகளில் குறைந்திருக்கிறது. அதனால்தான் இங்கே முதலீடு செய்வதற்குப் பல நாடுகள் தயங்குகின்றன.

நாடாளுமன்றத்தில் ஓங்கிய தமிழக குரல்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நம் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகின்றன. நம்மைச் சுற்றி இலங்கை, நேபாளம், பர்மா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவையும் பாகிஸ்தானையும் ஒன்று சேரவிடாமல் பிரித்துவைப்பதுதான் நமது வெளியுறவுக் கொள்கைக்கு நல்லது. ஆனால், அவர்கள் இருவரையும் இந்த அரசாங்கம் ஒன்றாகச் சேர்ந்து நிற்கவைத்திருக்கிறது. இதையொட்டி, “வெளியுறவுக் கொள்கையில் நாம் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறோம்” என்று ராகுல் காந்தி பேசியது முற்றிலும் உண்மை.

“பா.ஜ.க-வால் ஒருநாளும் தமிழ்நாட்டை ஆள முடியாது” என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி சவால்விட்டுப் பேசினார். அதற்குக் காரணம், இங்கே பா.ஜ.க எதிர்ப்பு மேலோங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல... அந்த எதிர்ப்புக்கான நியாயமும் இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்துவருகிறது. நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொடுக்காமல் தாமதம் செய்வது, இந்தி மொழியைத் திணிக்க முயல்வது, தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டு உணர்வுகளைக் காயப்படுத்துவது, தமிழ்நாட்டை மத அடிப்படையில் கூறு போடுவதற்கு முயல்வது என பா.ஜ.க வெறுப்பு அரசியலை மேற்கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வை இந்த அளவுக்கு எதிர்க்கிறார்கள்.

தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நீட் பிரச்னையில் இந்த அரசு எப்படி தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விவரித்தார். பேரிடர் மேலாண்மை நிதி குறித்தும் குற்றம்சாட்டிப் பேசினார். நீட் விலக்கு சட்டத்துக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சௌகத் ராய் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு தொடர்பான விஷயங்கள்தான் நாடாளுமன்றத்தில் மேலோங்கியிருக்கின்றன. நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து தமிழ்நாடு உறுப்பினர்கள் அனைவரும் முழக்கம் எழுப்பினோம்; வெளிநடப்பும் செய்தோம்.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புடன் பதில் சொல்வதுதான் ஆளுங்கட்சியின் கடமை. பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் பொறுமையோ, திறமையோ இல்லை. ராகுல் காந்தியைச் சீண்டுவதையே பிரதமர் மோடி தனது எதிர்வினையாகக்கொண்டிருந்தார். காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியபோது முழு நேரமும் அவையில் பிரதமர் அமர்ந்திருந்தார். குலாம் நபி ஆஸாத்துக்கு பத்ம விருது கொடுத்து காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியதைப்போலவே இதையும் அவர் செய்திருக்கிறார் என மோடி ஆதரவு ஊடகங்கள் மெய்சிலிர்த்தன. உண்மையான பிரச்னையிலிருந்து திசைதிருப்ப பிரதமர் செய்யும் இப்படியான தந்திரங்கள் எத்தனை நாள்களுக்கு அவருக்குக் கைகொடுக்கும் என்று தெரியவில்லை. இது ஜனநாயகத்துக்கும் நல்லது கிடையாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism