Published:Updated:

நமது பிரதமரின் சாதனையை அறிவோமா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

நமது பிரதமரின் சாதனையை அறிவோமா?

நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

குடியரசுத் தலைவர் உரையின்மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் பேசும்போது, குடியரசுத் தலைவரின் உரைமீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்னென்ன விமர்சனங்களை முன்வைத்தார்களோ, அவற்றுக்கான பதிலை அளிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பிரதமர் அளித்த பதிலுரை குடியரசுத் தலைவர் உரையின் விரிவாக்கமாக மட்டுமே இருந்தது. குடியரசுத் தலைவரின் உரையைத் தாண்டி பிரதமர் புதிதாகச் சேர்த்த அம்சம் ஒன்று உண்டு என்றால், அது காங்கிரஸ் கட்சியைப் பற்றிய தாக்குதல் மட்டும்தான்!

ரவிக்குமார்
ரவிக்குமார்

பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தியாவில் அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறிப்பிட்டு கவலை தெரிவித்தனர். அவற்றைத் தீர்ப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மை மக்கள்மீது வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துவருவதையும், பா.ஜ.க அரசாங்கம் அதை வேடிக்கை பார்ப்பதோடு மறைமுகமாக அவற்றை ஊக்குவிப்பதையும் குற்றம்சாட்டிப் பேசினர். கூடவே பலரும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் கவலையோடு சுட்டிக்காட்டினர். இவற்றுக்கெல்லாம் எந்தவொரு விளக்கத்தையும் பிரதமர் தனது பதிலில் கூறவில்லை. மாறாக, “விமர்சனம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால், எதிர்ப்புக்காகவே எதிர்க்கிறோம் என்பது நமது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்” என்பதே ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதமர் அளித்த ஒற்றை வரி பதில்.

நமது பிரதமரின் சாதனையை அறிவோமா?

“நாட்டு மக்கள் இப்போது உங்களை உள்ளும்புறமுமாக அறிந்திருக்கிறார்கள். சிலர் உங்களை ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். சிலர் சற்று தாமதமாக உங்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள்... சிலருக்கு வரும் காலங்களில் இவையெல்லாம் தெரியவரும்” என்று பிரதமர் பேசியபோது, “பிரதமர் தன்னைப் பற்றியே சுயவிமர்சனம் செய்கிறாரா?” என்று நமக்கு எழுந்த சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை! “ஒருகாலத்தில் நீங்கள் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தீர்கள்... ஆனால், உங்களது ஆட்சியைப் பார்த்ததால், அந்த மாநிலங்களில் நீண்டகாலமாக மக்கள் உங்களை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை” என்று காங்கிரஸ் கட்சியைத் தாக்கிய பிரதமர், “இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகும், உங்கள் ஆணவத்தின் சுமை குறையவில்லை; உங்கள் சூழல் அதைக் குறையவிடாது” என்று ராகுல் காந்தியைச் சாடினார்.

பிரதமரின் பதில் உரையில் கொரோனா காலம் குறித்த பகுதிதான் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது அறிவுத்திறனும் மனிதாபிமானமும் சேர்ந்து மிளிர்ந்த தருணம் அது. இருங்கள், அதை அடுத்த பத்தியில் சொல்கிறேன்... முதல் கொரோனா அலையின்போது, நாட்டில் திடீர் லாக்டெளன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் யார் பேச்சுக்கும் கட்டுப்படாமல் தமது சொந்த ஊர்களை நோக்கி கால்நடையாக கிளம்பியதை நாடே அறியும். ரயில் பாதை வழியாக நடந்து ஊர்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் சுமார் 8,700 பேர் சரக்கு ரயில்களில் அடிபட்டு செத்துப்போனார்கள். மே 1-ம் தேதி ஷ்ராமிக் ஸ்பெஷல் ரயில்களை மோடி அரசு இயக்க அனுமதித்தபோது, ஆங்காங்கே சிக்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் கையிலிருந்த சேமிப்பையெல்லாம் உணவுக்குச் செலவழித்துவிட்டு ரயில் டிக்கெட்டுக்குப் பணம் இல்லாமல் தவித்தார்கள். அப்போது ஆங்காங்கே இருந்த அரசியல் கட்சிகளின் தொண்டர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான் டிக்கெட் எடுத்துக்கொடுத்து உதவினார்கள். காங்கிரஸ் கட்சியினரும் அப்படிப் பல இடங்களில் உதவினார்கள்.

ஆனால், பிரதமர் அதை எப்படி ஜோடிக்கிறார் பாருங்கள்... “உலக சுகாதார நிறுவனமும், சுகாதார நிபுணர்களும் மக்கள் அவரவர் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஏனெனில், கோவிட் பாசிட்டிவ் நபர்கள் வேறு இடங்களுக்குச் சென்றால், அவர்கள் தொற்றுநோயையும் எடுத்துச் செல்வார்கள். அத்தகைய நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், மும்பை ரயில் நிலையத்தில் நின்று புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட்டுகளை வழங்கி மும்பையைவிட்டு வெளியேறுமாறு ஊக்கப்படுத்தினர். அதுவரை உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் (இப்போது தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்கள்) கொரோனா பரவல் வேகம் குறைவாகவும், அதன் தீவிரம் குறைவாகவும் இருந்தது. ஆனால், காங்கிரஸ் செய்த பாவத்தின் காரணமாக கொரோனா இந்த மாநிலங்களையும் தாக்கியது!” பிரதமரின் இந்தப் பேச்சை என்னவென்று சொல்வது!

கொரோனா பரவாமல் தடுக்க தீபம் ஏற்றவும், மணி அடிக்கவும் சொன்னது மட்டுமல்ல... புலம்பெயர்ந்த தொழிலாளர்களெல்லாம் கொரோனா வந்தவர்கள்... அவர்கள் (ஆங்காங்கே கிடந்து சாகட்டும்?) மற்ற ஊர்களுக்குச் சென்று கொரோனாவைப் பரப்பாமல் இருக்கட்டும் என்று சிந்தித்திருக்கிறாரே நமது பிரதமர்! இந்த ரகசியம் தெரிந்திருந்தால் ‘இப்படியொரு பிரதமரா!’ என்று உலகமே ஆச்சர்யத்தில் வாய் பிளந்திருக்காதா என்ன!

பிரதமர் தனது உரையில் மூன்றே மூன்று துறைகளில் ஏற்றுமதியில் ‘சாதனை’ படைத்திருப்பதாகக் கூறினார். இல்லையில்லை... இன்னும் பலப் பல சாதனைகளை அவரது அரசு படைத்திருக்கிறது. அதை ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் புள்ளிவிவரங்களுடன் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 20 சதவிகித மக்களின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதுவும் மோடி அரசின் சாதனைதான். கொரோனா அலையின்போது இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 53.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இதுவும் மோடி அரசின் சாதனைதான்!

நமது பிரதமரின் சாதனையை அறிவோமா?

2020-ம் ஆண்டில் 4.6 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்பட்டனர். உலக அளவில் உருவான புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இதுவும் மோடி அரசின் மகத்தான சாதனை இல்லையா? பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுவந்த செல்வ வரியை மோடி அரசு ரத்து செய்தது. அதனால் இந்திய ஒன்றிய அரசுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது சாதனை இல்லையா?

இந்தியாவில் உள்ள 98 கோடீஸ்வரர்களின் சொத்துகள்மீதான வரியில் நான்கு சதவிகிதம் மட்டும் உயர்த்தினாலே, நாட்டின் மதிய உணவுத் திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும். அது தெரிந்திருந்தும் செய்யாமல் இருக்கிறாரே... இது பிரதமரின் சாதனை இல்லையா? இந்தியாவில் உள்ள 98 கோடீஸ்வரர்களின் சொத்துகள்மீதான வரியில் ஒரு சதவிகிதம் உயர்த்தினால் போதும்... ஒட்டுமொத்த இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான மொத்தச் செலவுகளையும் கவனித்துக் கொள்ளலாம். அதைச் செய்யாமல் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையில் உறுதியாக இருக்கிறாரே நமது பிரதமர்... அது சாதனை இல்லையா?

இந்தச் சாதனைகள் பிரதமர் அறியாதவை அல்ல... அவற்றை உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரசாரத்துக்காக ‘ஸ்டாக்’ வைத்திருக்கிறாரோ என்னவோ... பட்ஜெட்டைப் பார்த்தபோது நாட்டின் ‘கஜானா காலி’ என்று நினைத்தோம். பிரதமரின் பேச்சு மேலும் பல காலி இடங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism