Published:Updated:

அறிவியலை அல்ல.. ஜோதிடத்தை நம்பும் அரசு இது!

நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

அறிவியலை அல்ல.. ஜோதிடத்தை நம்பும் அரசு இது!

நாடாளுமன்ற நடவடிகைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
நிர்மலா சீதாராமன்
ரவிக்குமார்
ரவிக்குமார்

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டிலிருந்து 100-வது ஆண்டுக்குச் செல்லும் ‘அமிர்த காலத்துக்கான’ அடிக்கல்லை பட்ஜெட்டின் மூலம் நாட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அரசு அறிவியல்மீது நம்பிக்கைகொண்ட அரசாக இல்லை; ஜோதிடத்தை நம்புகிற அரசாக இருக்கிறது. அதனால்தான் பொருளாதார அருஞ்சொற்கள் புழங்கவேண்டிய பட்ஜெட்டில் ‘அமிர்த காலம்’ என்று ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் சொல்லை நிதியமைச்சர் பயன்படுத்தியுள்ளார். நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தவேண்டிய நிதியமைச்சரே ஜோதிடராகிவிடும்போது இந்த நாட்டின் எதிர்காலத்தை எண்ணி அச்சப்படாமல் இருக்க முடியவில்லை!

பட்ஜெட் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “உங்கள் ஆட்சியில் வறுமை அதிகரிப்பதால், தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. 2020-ல் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 66 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் மக்கள்தொகையில் 54 சதவிகிதத்தினரின் வருமானம் குறைந்துவிட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்றீர்கள். அப்படிக் கொடுத்திருந்தால், கடந்த ஏழாண்டுகளில் 14 கோடிப் பேருக்கு நீங்கள் புதிதாக வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? ஏற்கெனவே வேலையில் இருந்த 12 கோடியே 20 லட்சம் பேருடைய வேலை பறிபோயிருக்கிறது. இதுதான் உங்கள் அரசின் சாதனை!

அறிவியலை அல்ல.. ஜோதிடத்தை நம்பும் அரசு இது!

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவோம் என்றீர்கள். 2021-ம் ஆண்டுக்கான நேஷனல் சாம்பிள் சர்வே அறிக்கையில், ‘இந்திய விவசாயியின் ஒரு நாள் வருமானம் சுமார் 27 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு விவசாயிக்கும் உள்ள கடன் சுமார் 74 ஆயிரம் ரூபாய்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 62 சதவிகிதமும், டீசல் விலை 67 சதவிகிதமும், சமையல் எரிவாயு விலை 117 சதவிகிதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிலோ 90 ரூபாயாக இருந்த கடுகு எண்ணெய் இன்று 185 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருப்பு விலை 47 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2024-க்குள் 400 ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்கப்போகிறோம் என்றீர்கள். சென்னை ஐ.சி.எஃப்-ல் 2018-லிருந்து இதுவரை இரண்டு ரேக்குகளை மட்டுமே உற்பத்தி செய்திருக்கிறார்கள். 2024-க்குள் 124 ரேக்குகள் என உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கும்போது ஆண்டுக்கு 133 ரயில்களைத் தயாரிப்போம் என்று நீங்கள் சொல்லியிருப்பது நடக்கப்போவதில்லை” என்று பா.ஜ.க அரசின் தோல்விகளைப் பட்டியலிட்டார்.

“இது அமிர்த காலம் அல்ல, ராகு காலம்” என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் விமர்சித்ததை மறுத்து தனது பட்ஜெட் பதிலுரையைத் தொடங்கிய நிதியமைச்சர், “காங்கிரஸ் ஆட்சிக்காலம்தான் இருண்ட காலம்... எங்கள் ஆட்சியில் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 44.58 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் 1.57 லட்சம் கோடி ரூபாய் வைப்புத்தொகை இருக்கிறது. அதில் 55.6 சதவிகித வங்கிக் கணக்குகள் பெண்களுடையவை. கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்பட வில்லை என்று உறுப்பினர்கள் குற்றம்சாட்டினார்கள். நாடு வளர்ச்சி அடையும்போது வேலைவாய்ப்புகள் தாமாகவே அதிகரிக்கும்” என்றெல்லாம் அவர் பேசியதைப் பார்த்தபோது, நகைச்சுவை உணர்வில் பிரதமருக்குக் கொஞ்சமும் அவர் குறைந்தவர் அல்ல என்று புரிந்தது.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டிருப்பதைப் பற்றி உறுப்பினர்கள் பலரும் விமர்சித்தார்கள். ஆனால் அதற்கு, “அது தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும்” என்று மட்டுமே அவர் பதில் சொன்னார். கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட பணம் எட்டு மாதங்களுக்குக்கூடப் போதவில்லை. பல மாநிலங்களுக்கும் அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவை இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் நிதியமைச்சர் எந்த பதிலும் சொல்லவில்லை. கல்வி, சுகாதாரம், எஸ்சி., எஸ்டி., ஓ.பி.சி நலன் ஆகியவற்றுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதற்கு “காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதிகம் நிதி ஒதுக்கியிருப்பதாக பட்ஜெட்டில் காட்டுவார்கள். ஆனால், செலவு செய்ய மாட்டார்கள். ஆனால், நாங்கள் கூடுதலாகச் செலவு செய்கிறோம்” என்றார்.

அறிவியலை அல்ல.. ஜோதிடத்தை நம்பும் அரசு இது!
அறிவியலை அல்ல.. ஜோதிடத்தை நம்பும் அரசு இது!

“கட்டுமானத்துறைக்கு எங்கள் அரசு கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. அந்த முதலீடு நிதிபெருக்கியாகச் செயல்பட்டு, எதிர்காலத்தில் இரண்டு மடங்கு கூடுதலாகப் பலன் கிடைக்கும்” என்றார் நிதியமைச்சர். ஆனால், பொருளாதார நிபுணர்கள் இந்த வாதத்தை மறுக்கின்றனர்... “இந்த ஆண்டு பட்ஜெட்டில், செலவின ஜி.டி.பி விகிதம் 1.5 சதவிகிதம் சுருங்கிவிட்டது. எனவே, நேர்மறையான நிதிபெருக்கிகளைப் பற்றிப் பேசுவது தவறு. வருவாயைப் பெருக்குவதில் திறமையின்மை, அதனால் செலவுகளைக் குறைப்பது என்பதுதான் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க அரசு கடைப்பிடித்துவரும் கொள்கை. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது; பணவீக்கம், வேலையின்மை அதிகரித்துவருகின்றன. பொதுவாக நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவும்போது கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்வதை நிறுத்திவிடுவார்கள். அதனால், அவர்களது லாபம் குறையும். ஆனால், கொரோனா காலத்தில் கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்வதை நிறுத்தினாலும், அவர்களது லாபம் அதிகரித்திருக்கிறது. காரணம், அரசாங்கம் கார்ப்பரேட் வரியைக் குறைத்ததுதான். கார்ப்பரேட் வரியைக் குறைத்து, தனது வருவாயை இழந்துவிட்டு, பொது முதலீடுகளுக்காக இந்த அரசு கடன் வாங்குகிறது. 2019-ம் ஆண்டுக்கு முன்பிருந்த பொருளாதார நிலையை எட்ட வேண்டுமென்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தலா 7.5 சதவிகிதம் என ஜி.டி.பி வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் அதற்காக எந்தவொரு திட்டமும் இந்த அரசிடம் இல்லை” என்கிறார் பொருளாதார நிபுணர் ரத்தின் ராய்.

பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக், “மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு 3.5 முதல் 4 சதவிகிதமாக இருந்தபோது, வேலைவாய்ப்பு வளர்ச்சி சுமார் 2 சதவிகிதமாக இருந்தது; புதிய தாராளமயத்தின்கீழ் ஜி.டி.பி வளர்ச்சி 7 முதல் 8 சதவிகிதமாக (சமீபத்திய மந்தநிலைக்கு முன்) இரட்டிப்பானது. ஆனால், வேலைவாய்ப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு ஒரு சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இந்த அரசு கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை வறுமையில் தள்ளியது மட்டுமின்றி, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் வலிமையையும் குறைத்துவிட்டது” என்றார்.

அறிவியலை அல்ல.. ஜோதிடத்தை நம்பும் அரசு இது!

பொருளாதாரநிலை மோசமாக இருப்பது வெளியே தெரிந்துவிடக் கூடாது; அதைப் பற்றிய விமர்சனங்களும் வரக் கூடாது என்பதற்காக பா.ஜ.க மதவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டது. கர்நாடகத்தில் மதமாற்ற தடைச்சட்டமும்; முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்கிற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிரச்னை இன்று நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹிஜாப் பிரச்னையைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு நாள் வெளிநடப்பு செய்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “ஹரித்துவாரில் வெளிப்படையாகவே 20 லட்சம் முஸ்லிம்களைப் படுகொலை செய்யுங்கள் என்று பேசுகிறார்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் கண்டித்துப் பேசவில்லை. இஸ்லாமியப் பெண்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உடை உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அதைத் தடுப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இது நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி. இந்தியர்களை மதங்களாகப் பிரிக்கிறார்கள். இந்துக்களை சாதிகளாகப் பிரிக்கிறார்கள். `ஜெய் ஸ்ரீராம்’ என்பது நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளின் முழக்கமாக இருக்கிறது. அதற்கு எதிராக `ஜெய் பீம்’, `அல்லாஹு அக்பர்’ ஆகிய முழக்கங்கள் ஒலிக்கின்றன” என்று பேசியவர், அந்த முழக்கங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் சரி... நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜ.க முன்னெடுத்திருக்கும் மதவாத அரசியலும் சரி... இரண்டுமே நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism