Published:Updated:

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்!

பெகாசஸ் பிரச்னையை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அலுவல்களை முடக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், உளவு பார்த்தோமா இல்லையா என எந்தவொரு விளக்கத்தையும் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை அளிக்கவில்லை.அவர்கள் பெகாசஸைவிடவும் பயங்கரமான இன்னொரு தாக்குதலைத் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள டிஎன்ஏ சட்ட மசோதாதான் அவர்கள் கையிலெடுத்திருக்கும் அந்தப் பேராயுதமாகும். பா.ஜ.க அரசு நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைவிட ஆபத்தானது இந்த மசோதா.

காவல்துறையால் சந்தேகப்படக்கூடிய எவரொருவரது டிஎன்ஏ மாதிரியையும் சேகரித்து அதை ஒரு டேட்டாபேஸில் பாதுகாத்துவைக்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. ஒருவருடைய மரபணுவை வைத்து அவர் குற்றம் செய்தாரா என முடிவுசெய்யும் இந்த அணுகுமுறை, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தை நினைவூட்டுகிறது.

இந்தக் கொடூரமான சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மூலக்கூறு உயிரியல், தடய அறிவியல், மனித மரபியல், மக்கள்தொகை உயிரியல், பயோஎதிக்ஸ், சட்டத் தொழில், சட்ட அமலாக்க முகவர் போன்ற துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட டிஎன்ஏ புரொஃபைலிங் ஆலோசனைக் குழு பொருத்தமான சட்டத்தை இயற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க 2003 டிசம்பரில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில், வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. பின்னர், அந்தரங்க உரிமை தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க 2012-ம் ஆண்டில் பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் தலைமையில் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. நிபுணர்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மசோதா திருத்தப்பட்டு, பின்னர் இந்தியச் சட்ட ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ‘காணாமல்போன ஒருவரது அடையாளத்தை உறுதிசெய்து கொள்வதற்காக மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். வேறு எதற்காகவும் உபயோகிக்கக் கூடாது’ என்பது உள்ளிட்ட ஒன்பது பரிந்துரைகளோடு சட்ட ஆணையம் தனது 271-வது அறிக்கையில் இப்படியொரு சட்டத்தை இயற்றலாம் எனக் கூறியது.

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

பா.ஜ.க ஆட்சி முடிந்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த காலத்திலும்கூட இந்தச் சட்டம் தொடர்பான பணிகள் தொடர்ந்து கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். மோடி அரசு அமைந்த பிறகு இதைச் சட்டமாக்கும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்ற முடியாமல் காலாவதியானது. அதிக எண்ணிக்கை பலத்தோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க அரசு மீண்டும் அந்த மசோதாவை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அது `சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைக்குழுவின் ஆய்வில் இருந்த அந்த மசோதா, நிலைக்குழுவின் பரிந்துரைகளோடு இப்போது மீண்டும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

நிலைக்குழுவில் அசாதுதின் ஒவைசியும், பினோய் விஷ்வமும் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருந்தபோதிலும் ‘இதில் போதுமான காப்புக்கூறுகள் உள்ளன. சுயேச்சையான டிஎன்ஏ ரெகுலேட்டரி போர்டு ஒன்றை அமைக்குமாறு நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அப்படி ஒரு போர்டு அமைக்கப்பட்டால் அது சர்வதேச தரத்தில் சுதந்திரமாகச் செயல்படும்’ என நிலைக்குழுவின் தலைவர் கூறியிருக்கிறார். இந்த மசோதாவை சட்டம் ஆக்கலாம் என்றும் நிலைக்குழு பரிந்துரை செய்துவிட்டது. அப்படிப் பரிந்துரை செய்த நிலைக்குழுவின் தலைவர் வேறு யாருமல்ல, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான்.

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

‘டிஎன்ஏ டெக்னாலஜி வரன்முறைச் சட்ட மசோதா 2019’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதா இந்திய குடிமக்களின் டிஎன்ஏ-வைச் சேகரித்துப் பாதுகாக்கவும், அதனடிப்படையில் அந்த நபர்களைப் பற்றிய விவரத் தொகுப்புகளை (புரொஃபைலிங்)உருவாக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்காகவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் இந்த டிஎன்ஏ தகவல்கள் பயன்படும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்தத் தகவல்களை அரசு அதற்கு மட்டும்தான் பயன்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பெகாசஸ் உளவுச் செயலி மூலமாகத் தமது அரசியல் எதிரிகளை எப்படியெல்லாம் வேவு பார்த்திருக்கிறார்கள்... அந்தச் செயலியைக்கொண்டு திரட்டிய தகவல்களைவைத்து என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பவற்றைப் பார்க்கும்போது குடிமக்களின் டிஎன்ஏ-வைப் பயன்படுத்தி நன்மை செய்யப்போகிறார்கள் என்று நம்ப முடியவில்லை.

`சந்தேக நபர்களின் டிஎன்ஏ-வைச் சேகரிக்க வேண்டும்’ என இந்தச் சட்டம் கூறுகிறது. இந்தியாவிலுள்ள சட்டங்களில் எதுவும் ‘சந்தேக நபர்’ என்று யாரையும் வகைப்படுத்தவில்லை. அப்படியிருக்கும்போது இந்தச் சட்டம், `சந்தேக நபர்களின் டிஎன்ஏ-வைச் சேகரிப்போம்’ என்று சொல்வது எப்படி? யாரை வேண்டுமானாலும் சந்தேக நபர் என்று முத்திரை குத்தி, அவருடைய டிஎன்ஏ-வைச் சேகரிக்க முடியும் என்பதே இதன் உட்பொருள்.

`குடிமக்கள் தாமாக முன்வந்தும் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கலாம்’ என்று இந்தச் சட்ட மசோதா குறிப்பிடுகிறது. ஆதார் விஷயத்திலும் அப்படித்தான் சொன்னார்கள். தங்களுடைய அந்தரங்க விவரங்களைக் குடிமக்கள் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று சொன்னார்கள். ஆனால் இப்போது ஆதார் எல்லாவற்றுக்கும் கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. `மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்’ என கடல்சார் மீன்வள மசோதாவில் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆதார் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டது. ‘வாலன்டரி’ என்று சொல்வது, பிறகு அதை `கம்பல்சரி’ என்று ஆக்கிவிடுவது என்பதே இந்த அரசு பின்பற்றும் தந்திரம். `தாமே முன்வந்து டிஎன்ஏ மாதிரியைத் தரலாம்’ என்பார்கள். இன்னும் சில காலம் கழித்து, `அப்படித் தராவிட்டால் ரேஷன் பொருள் இல்லை’யென்று சொன்னாலும் சொல்வார்கள்.

`ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனையுள்ள ஒரு குற்றத்தை ஒருவர் செய்தால், அவருடைய டிஎன்ஏ-வை அவரது சம்மதம் இல்லாமலேயே சேகரிக்கலாம்’ என்று இந்தச் சட்ட மசோதா குறிப்பிடுகிறது. விசாரணைக் கைதி என்பவர் தண்டனை அளிக்கப்படும் வரை நிரபராதி என்றே கருதப்பட வேண்டும். ஆனால், `குற்றம் சுமத்தினாலே அவரது டிஎன்ஏ-வை சேகரித்துக் கொள்ளலாம்’ என்று இந்தச் சட்டம் கூறுகிறது.இதன் மூலம் குற்றவாளிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை இது அழிக்கிறது.

`ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை உள்ள குற்றம் ஒருவர்மீது சாட்டப்பட்டிருந்தால் அவரது ஒப்புதல் பெற்று அவருடைய டிஎன்ஏ-வை சேகரிக்கலாம்’ என்றும், `ஒருவேளை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புதல் அளிக்க மறுத்தால் ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவைப் பெற்று அவருடைய டிஎன்ஏ-வைச் சேகரிக்கலாம்’ என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. காவல் நிலையத்தில் ஒருவருடைய ஒப்புதலை நமது காவல்துறையினர் எப்படிப் பெறுவார்கள் என்பதற்கும், மாஜிஸ்ட்ரேட் உத்தரவை எப்படி வாங்குவார்கள் என்பதற்கும் சாத்தான்குளம் வழக்கே சாட்சி. ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்திலிருந்த பார்வையாளர்களின் டிஎன்ஏ-வையும் சேகரிக்க வேண்டும் என்பதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமன்றி, சாட்சிகளையும் குற்றவாளிகளின் பட்டியலில் இந்தச் சட்டம் சேர்க்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டால் அவர் தன்னிடமிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ-வை ‘டிஎன்ஏ டேட்டா பேங்க்’கிலிருந்து நீக்குமாறு நீதிமன்றத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்கிறது இந்த மசோதா.கே.டி லிஸ்ட்டில் சேர்க்கப்பட்ட ஒருவரது பெயரை நீக்குவதற்கே பெரும்பாடு படவேண்டியிருக்கும்போது டிஎன்ஏ டேட்டா பேங்க்கிலிருந்து தகவலை நீக்குவதென்பது நடக்கிற காரியமா என்ன?

இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முன்னால் கருத்து கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், `இந்தச் சட்டம் படுபயங்கரமானது’ என வர்ணித்திருக்கிறார். ‘சந்தேக நபர் என யாரை வேண்டுமானாலும் விசாரிக்கவும், அவரது டிஎன்ஏ-வைச் சேகரிக்கவும் வரம்பற்ற அதிகாரத்தை இந்தச் சட்டம் தருகிறது’ என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

`இந்தச் சட்டத்தைக் குறிப்பிட்ட சமூகக் குழுக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது’ என்று கூறியுள்ள அவர், ‘மொழி அடிப்படையில், மத அடிப்படையில், சமூக அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் குழுக்களுக்கு எதிராகக் குறிவைத்து இந்தச் சட்டம் ஏவப்படலாம்’ என்றும் அச்சம் தெரிவித்திருக்கிறார். சட்ட கமிஷன் எழுப்பிய ஆட்சேபனைகளை எடுத்துக் காட்டி, அவற்றை இந்த மசோதா கவனத்தில்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

‘‘ `செல்வி எதிர் கர்நாடக மாநில அரசு’ என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘சந்தேகத்துக்கிடமானவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிறர்... என எவரிடமும் தன்னிச்சையாக நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை மற்றும் மூளை மின்னணு மேப்பிங் ஆகியவற்றைச் செய்யக் கூடாது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 20 (3)-ன்படி அத்தகைய சான்றுகளை நீதிமன்றம் ஏற்காது’’ என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி பி.என்.கிருஷ்ணா, ‘‘உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு புட்டாஸ்வாமி வழக்கின் தீர்ப்பில், அந்தரங்கத்துக்கான உரிமையென்பது, அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 21-ல் நிறுவப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனது பொதுவான மதிப்பீட்டில் சொல்ல வேண்டுமென்றால் புட்டாஸ்வாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள மூன்று சோதனைகளிலும் இந்த மசோதா தோல்வியடைகிறது. அடிப்படை உரிமையை இது மீறுகிறது’’ என்று நீதிபதி பி.என்.கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

என்ன காரணம் சொல்லி எதிர்த்தாலும் மக்களவையில் தங்களுக்கிருக்கும் எண்ணிக்கை பலத்தைவைத்து இந்த மசோதாவை மோடி அரசு சட்டமாக்கிவிடும். மாநிலங்களவையிலும்கூட அதில் சிக்கல் இருக்காது. சுமார் 3,000 கோடி ரூபாய் செலவில் குடிமக்களின் டேட்டாபேஸை உருவாக்க வகை செய்யும் இந்த மசோதா, சட்டமாகாமல் தடுக்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்துக்கு உள்ளே மட்டுமன்றி வெளியேயும் இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடியாக வேண்டும். பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸே இந்தச் சட்ட மசோதாவை ஆதரிக்கும்போது, வேறு எந்தக் கட்சி அதைச் செய்யப்போகிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism