Published:Updated:

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

மம்தா பானர்ஜி, மோடி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி, மோடி

- நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

- நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
மம்தா பானர்ஜி, மோடி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி, மோடி

முனைவர் ரவிகுமார் எம்.பி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியென்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பை இப்போதே மம்தா ஆரம்பித்துவிட்டார் என்றும் பேசப்படுகிறது. முதலில் பிரதமர் மோடியைச் சந்தித்த மம்தா பானர்ஜி, ‘மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகக் கிடப்பில் இருப்பதையும், மேற்கு வங்கத்துக்குப் போதுமான தடுப்பூசிகள் அளிக்கப்படுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்’ என்றும் அவரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் அணியை அவர் தலைமையேற்று வழிநடத்தப்போகிறாரா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘தேசம்தான் எதிர்க்கட்சிகளை வழிநடத்துகிறது; நாங்கள் அதன் பின்னே செல்கிறோம்’ என்று சாதுர்யமாக பதிலளித்து அசத்தினார். அடுத்தடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தது டெல்லியைத் தாண்டி நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களுக்குமேல் வெற்றி பெற்றாலும், அது வாங்கிய வாக்கு வெறும் 37 சதவிகிதம்தான். மீதமுள்ள 63 சதவிகித வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போடப்பட்டவை. அப்படியிருந்தும் பா.ஜ.க வெற்றிபெற்றதென்றால் அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகள் தனித்தனியே பிரிந்து கிடந்ததுதான்.

2019 தேர்தல் நெருங்குவதற்கு முன்பே சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டார். காங்கிரஸைத் தனிமைப்படுத்தும் அந்த முயற்சியேகூட பா.ஜ.க-வின் ஒப்புதலோடு செய்யப்பட்டதுதான் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது. அதன் காரணமாக முதலில் ஆர்வம் காட்டிய அரசியல் கட்சிகள், அவரிடமிருந்து விலகிவிட்டன. ஆனாலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவதைத் தடுத்ததில் சந்திரசேகர ராவுக்குக் கணிசமான பங்கிருந்தது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறையென்பது பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தித் தேர்தலை சந்திப்பதற்கானதல்ல; அது எம்.பி-க்களைத் தேர்ந்தெடுப்பதற்கானது. அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்ற கட்சியின் எம்.பி-க்கள் ஒன்று சேர்ந்தே பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் நடைமுறையில், அதிபர் ஆட்சிமுறை இருக்கும் நாடுகளைப்போல பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும் போக்கு இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுவருகிறது. நரேந்திர மோடி ஈடு இணையற்ற பிரதமர் வேட்பாளர் இல்லையென்றாலும், அவரை எதிர்கொள்வதற்கு ஒருவரையும் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தாத காரணத்தால் அவரோடு போட்டியிட ஆளே இல்லை என்பது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது. அது, தேர்தல் நடப்பதற்கு முன்பே அவர்தான் பிரதமர் என்ற எண்ணத்தை வாக்காளர்களிடம் ஏற்படுத்திவிட்டது. அதேபோன்றதொரு நிலை 2024-ம் ஆண்டிலும் ஏற்பட்டால் மூன்றாவது முறையும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதை எவராலும் தடுக்க முடியாது. இந்த ஆபத்தை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறதோ இல்லையோ, மற்ற எதிர்க்கட்சிகள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

இரண்டாவது முறை மோடி பிரதமர் ஆனதால் காங்கிரஸைவிடவும் மாநிலக் கட்சிகள்தான் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றன. பா.ஜ.க அரசின் அதிகாரக்குவிப்பு நடவடிக்கைகள் மாநிலக் கட்சிகளின் அரசாங்கங்களை மூச்சுத்திணறச் செய்கின்றன. தேர்தல் ஆணையம் உட்பட அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களெல்லாம் மதிப்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் ஆட்டம்கண்டுவிட்டது. இந்தச் சூழலில், மூன்றாவது முறையும் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தால் அதுவே நாடாளுமன்ற ஜனநாயக முறையின் முடிவாக இருக்கும் என்ற அச்சம் அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, 2019-ல் இருந்ததுபோல் எந்தவொரு எதிர்க்கட்சியும் மெத்தனமாக இருக்காது என்பது உறுதி.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், 2022-ல் நடக்கவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், திரிபுரா மாநிலங்களின் தேர்தல்களில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், அது நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்குச் சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்திவிடும். இது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை காத்திருக்காமல் இப்போதே ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கவேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மட்டும் ஓர் அணிச்சேர்க்கையை உருவாக்கினால், அது தேர்தல் வரும்வரைகூட நிலைத்து நிற்காது. மக்களை பாதிக்கிற பிரச்னைகளை முன்வைத்து அந்த அணிச்சேர்க்கை உருவாக்கப்பட வேண்டும். அணியில் இடம்பெறும் அரசியல் கட்சிகளெல்லாம் ஒருமித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் பிரச்னைகள் எவை என்பதைக் கண்டறிந்து, அவற்றின் அடிப்படையில் பரந்துபட்ட நோக்கோடு அந்த அணிச்சேர்க்கை உருவாக்கப்பட வேண்டும்.

2021-22-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 12.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கடந்த ஏப்ரலில் கணித்திருந்த ஐ.எம்.எஃப் நிறுவனம், இப்போது அதை 9.5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலையையும், போதுமான அளவில் தடுப்பூசி போடாததையும் அதற்கான முதன்மையான காரணங்களாகக் கூறியிருக்கிறார் ஐ.எம்.எஃப் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மோடி அரசின் தோல்வி, அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரிகளின் மூலம் மோடி அரசு செய்துவரும் சுரண்டல்... என அனைவருக்கும் ஏற்புடைய புள்ளிகளை அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் உடனடியான போராட்ட வியூகங்களை உருவாக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

பா.ஜ.க-வுக்கு எதிராகக் கட்டப்படும் எதிர்க்கட்சிகளின் அணியில் காங்கிரஸ் ஓர் அங்கமாக இருக்குமா அல்லது அதற்குத் தலைமை ஏற்குமா என்ற கேள்வி இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு முழுநேரத் தலைவராக ராகுல் காந்தியை நியமித்து, அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், பா.ஜ.க-வுக்கு மாற்றாகக் கட்டப்படும் அணி மோடிக்கு எதிராக ஒரு நபரை முன்னிறுத்தினால் மட்டும் போதாது. அது ஒரு மாற்று அரசியலை முன்வைப்பதாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசியல் என்பது போதுமான மாற்று அல்ல. கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டமே, அந்த மாற்று அரசியலின் உள்ளீடாக இருக்க வேண்டும்.

இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் ஒன்றிய அரசின் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பை அது வெளியிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் (Residuary Powers) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். பொதுப்பட்டியல் தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும். பொதுப்பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என ஆக்கப்பட வேண்டும். அதற்கேற்ப பிரிவு 254 திருத்தப்பட வேண்டும்.

சட்ட மேலவையை உருவாக்கவும் கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற சட்டப் பிரிவு 169 திருத்தப்பட வேண்டும். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின்மீதான அதிகாரம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இப்படியான கோரிக்கைகள் தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளால் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2026-ம் ஆண்டோடு இப்போதுள்ள தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு செய்யப்படும் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் இப்போதே வந்துவிட்டது. மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இருப்பதால் பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிரதமராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் மாநிலங்களுக்கு இடையே சமத்துவமற்ற நிலை உருவாகிறது. இதைத் தவிர்க்க மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றத் தாழ்வற்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதையும் காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கீதா கோபிநாத்
கீதா கோபிநாத்

இதையெல்லாம் காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்ற அறிவிப்பே எதிர்க்கட்சிகளின் அணிக்குத் தலைமையேற்கும் தகுதியை அதன் கையில் ஒப்படைக்கும். அதுமட்டுமன்றி அந்தக் கூட்டணி தேர்தலுக்கானது மட்டுமல்ல; அது கூட்டாட்சி முறையை வலுப்படுத்தி இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான அணி என்ற எண்ணத்தையும் மக்களிடம் உருவாக்கும்.

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற பா.ஜ.க-வின் கோஷம், ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற அதன் விருப்பத்தின் வெளிப்பாடுதான். அதற்கான சரியான அரசியல் மாற்று ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதாகவே இருக்கும். இந்தப் புரிதலின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அதுவே 2024-ல் ஆட்சியை அமைக்கும்.