Published:Updated:

கொரோனா... பொய் என்னும் பேரலை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

கொரோனா... பொய் என்னும் பேரலை!
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா... பொய் என்னும் பேரலை!

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

கொரோனா... பொய் என்னும் பேரலை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
கொரோனா... பொய் என்னும் பேரலை!
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா... பொய் என்னும் பேரலை!

‘கொரோனா இரண்டாவது அலையின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20.7.2021 அன்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் எத்தனை நோயாளிகள் இறந்தனர்?” என்ற விவரங்களை அளிக்குமாறு கேட்டார்.  அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், “சுகாதாரம் என்பது மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. மாநில அரசுகள் தொடர்ச்சியாக கொரோனா மரணங்களின் விவரங்களை அனுப்பிவருகின்றன. இத்தகைய மரணங்களை ஒன்றிய அரசுக்குத் தெரிவிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை, மாநிலங்களுக்கு அளித்திருக்கிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒன்றிய சுகாதாரத்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரு மரணமும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது” என பதிலளித்தார்.

கொரோனா... பொய் என்னும் பேரலை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

கொரோனா இரண்டாவது அலையின்போது நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான மரணங்கள் நேரிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும், தட்டுப்பாடு இல்லாமல் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனைகளின் சார்பாகவும், மாநில அரசுகளின் சார்பாகவும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றமும் இது தொடர்பாக விசாரித்து உத்தரவுகளைப் பிறப்பித்தது. கடந்த மே மாதம், 1-ம் தேதி டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக டாக்டர் ஒருவர் உட்பட 12 நோயாளிகள் மரணம் அடைந்ததாகச் செய்தி வெளியானது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் இருக்கும் மருத்துவமனையிலும் அப்படியான மரணங்கள் நடந்தன. அப்படியிருக்கும்போது ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் சொல்வது பூசணிக்காயை ஒரு பருக்கைக்குள் மறைக்கும் முயற்சியே ஆகும்.

“மாநிலங்களவையில் அமைச்சர் தெரிவித்த இந்தத் தகவல், உண்மைக்கு மாறானது” என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்ததாக அவர் கூறியிருக்கிறார். கொரோனா முதல் அலையின்போது மருத்துவ ஆக்ஸிஜன் தேவை 3,095 மெட்ரிக் டன்னாக இருந்தது. இரண்டாவது அலையின்போது ஆக்ஸிஜன் தேவை 9,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துவிட்டது. அதைச் சமாளிப்பதற்குப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இவையெல்லாம் ஒன்றிய அரசுக்குத் தெரியாதவை அல்ல. தெரிந்திருந்தும் உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி நாடாளுமன்றத்தில் தருகிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பேசியதற்காக அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என நமது அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தாலும், நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான செய்திகளையோ, கண்ணியக் குறைவான வார்த்தைகளையோ கூறினால் அவற்றை நீக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு உண்டு என்று விதி 380-ல் கூறப்பட்டுள்ளது.

கொரோனா... பொய் என்னும் பேரலை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

இது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை அளிப்பதற்கு என்று சுமார் 900 பக்கங்கள் கொண்ட நூல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எவரொருவர் விதியை மீறிப் பேசினாலும், அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகருக்கு நாடாளுமன்ற விதிகள் அதிகாரம் அளிக்கின்றன. இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட விவாதத்தின்போது பிரதமர் மோடி பேசியதன் சில பகுதிகளையேகூட அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கு உத்தரவிட்டார் வெங்கையா நாயுடு. இப்போது உண்மைக்கு மாறாக அமைச்சர் தெரிவித்த இந்தத் தகவலையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டிருந்தால் நாம் அவரைப் பாராட்டியிருக்கலாம்.

அமைச்சர்கள் உண்மைக்கு மாறான செய்திகளை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பது அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது.

கடந்த 30.07.2021 அன்று கொரோனா தொடர்பான கேள்வியை நான் எழுப்பியிருந்தேன். `உருமாற்றம் அடைந்த வைரஸின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்கு எவ்வளவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என்ற விவரங்களைத் தருக; நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் ஜெனோம் சீக்வென்ஸிங் ஆய்வகங்களை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக; டெல்டா ப்ளஸ் என்னும் வகையிலான உருமாறிய வைரஸ் நாட்டில் எவ்வளவு பேரைத் தாக்கியிருக்கிறது என்ற விவரங்களைத் தருக...’ எனக் கேள்வி எழுப்பியிருந்தேன்.அதற்கு பதிலளித்த அமைச்சர், “நாடு முழுவதும் டெல்டா ப்ளஸ் வைரஸால் 70 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 10 பேர்” என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் பதிலோடு வழங்கப்பட்ட அட்டவணையில் திரிபுராவின் பெயர் இடம்பெறாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திரிபுராவிலிருந்து மேற்கு வங்கத்தில் கல்யாணி என்னும் இடத்திலிருக்கும் ஜெனோம் சீக்வென்ஸிங் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட 151 மாதிரிகளில் 138 மாதிரிகள் `டெல்டா ப்ளஸ்’ என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் என்ற விவரத்தைக் கடந்த ஜூலை மாதம், 7-ம் தேதி திரிபுரா மாநில அரசு வெளியிட்டது. ஆனால், அமைச்சர் அளித்த பட்டியலில் திரிபுராவின் பெயரே இல்லை.

கொரோனா... பொய் என்னும் பேரலை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்களால் குறிப்பிடப்படும் ‘டெல்டா ப்ளஸ்’ எங்கெல்லாம் பரவியிருக்கிறது, எத்தனை பேரை பாதித்திருக்கிறது என்ற விவரங்களை அரசாங்கம் அண்மைக்காலமாக வெளியிடுவதில்லை. ஜூன் 23-ம் தேதிக்குப் பிறகு அதைப் பற்றிப் புதிதாக எந்தத் தகவலையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தற்போது நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் ஜூலை 23-ம் தேதி வரையிலான விவரம் தரப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டிருந்தாலும், அதுவும் ஜூன் 23-ல் வெளியிடப்பட்ட விவரமே ஆகும்.

`கொரோனா காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன’ என்று செய்திகள் வெளியாகின. அது தொடர்பான வினா ஒன்றையும் நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். ஆனால், “கொரோனா காலத்தில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை” என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துவிட்டார். டெல்டா ப்ளஸ் பரவல், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள், கொரோனா காலத்தில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் என எந்தக் கேள்வி கேட்டாலும், அதற்கு உண்மைக்கு மாறான தகவல்களையே ஒன்றிய அரசு தெரிவித்துவருகிறது. நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மையையே இது கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பாரதி பிரவீன் பவார்
பாரதி பிரவீன் பவார்

டெல்லியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ் என்பவர், ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ள ‘ஆக்ஸிஜன் சப் கமிட்டி எப்போது கூடியது... அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன... ஆக்ஸிஜன் கையிருப்பின் விவரம் என்ன ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு’ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளித்தார். ‘இந்த விவரங்கள் இந்திய அரசின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பவை’ என்று காரணம் காட்டி மத்திய பொது தகவல் அதிகாரி (சி.பி.ஐ.ஓ) தகவல்களைத் தர மறுத்துவிட்டார். சவுரவ் தாஸ் இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் (சி.ஐ.சி) மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், ‘தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1) (a) மற்றும் (d)-ன் கீழ் இத்தகைய விவரங்களைத் தர மாட்டேன் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல; எனவே 10 நாள்களுக்குள் இந்த விவரங்களை அளிக்க வேண்டும்’ என்று இப்போது ஆணையிட்டுள்ளது.

ஐ.ஐ.டி ஹைதராபாத், கான்பூர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில், கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும், அக்டோபரில் உச்சகட்டத்தை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவிலுள்ள 46 மாவட்டங்களில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது’ என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.

`கொரோனா மூன்றாவது அலை நிச்சயம் இந்தியாவைத் தாக்கும்’ என்றும், `அதன் உச்சகட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் நிபுணர்கள் முன்பே எச்சரித்திருந்தனர். மூன்றாவது அலை ஏற்படுத்தும் அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

ஆனால், மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதில் இப்போதும்கூட ஒன்றிய அரசு மெத்தனமாகவே இருந்துவருகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் ஜூலை மாதம்வரை 27 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 7.6 சதவிகிதம் மட்டும்தான். பாரத் பயோடெக் நிறுவனத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட எண்ணிக்கையில் கோவாக்ஸின் தடுப்பூசி சப்ளை இல்லாததால், ஆகஸ்ட் மாதத்தில் 25 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அரசின் இலக்கை எட்ட முடியாது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொரோனா... பொய் என்னும் பேரலை! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

இந்தச் சூழலில், ஒன்றிய அரசு கொரோனா தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் கையிருப்பு போன்ற முக்கியமான தகவல்களைத் தர மறுப்பதும் அச்சத்தைத்தான் உண்டாக்குகிறது. ஒன்றிய அரசு உதவும் என்று காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்துவருவதை ஊடகங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. அதிக எண்ணிக்கையில் ஆர்.டி பி.சி.ஆர் சோதனை செய்யப்படுவதுதான் அதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அத்துடன் நிற்காமல் சென்னையில் சில இடங்களில் கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மட்டுமல்ல... பொய் என்னும் பேரலையின் தாக்குதலிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. ‘வெளிப்படைத்தன்மையே தடுப்பூசி’ என்பதை நன்கு உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் அந்தக் கடமையைச் செய்வார் என்று நம்புகிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism