Published:Updated:

அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்!

எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்கிவரும் நேரத்தில் மூன்று நிமிட, ஐந்து நிமிட இடைவெளிகளில் மத்திய அரசு பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் ஒன்றுதான் ‘அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைகள் மசோதா 2021.’ இது, பாதுகாப்பு சேவைகள் தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடை செய்கிறது.

இந்தியா முழுவதுமுள்ள பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகளை ‘கார்ப்பரேட்’ மயப்படுத்துவது என்று இந்திய ஒன்றிய அரசு முடிவுசெய்திருக்கிறது. இந்தியாவில் தற்போது 41 தொழிற்சாலைகள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலானவற்றைத் தயாரித்துவருகின்றன. அவை அல்லாமல் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஏழு கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவது என்று ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது. இதைத் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இந்த முடிவு இந்தத் தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்குவதற்கு இட்டுச்செல்லும் என்பது அவர்களின் வாதம். சுமார் 80,000 தொழிலாளர்கள் இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். அவர்கள் இல்லாமல் சுமார் நான்கு லட்சம் சிவில் ஊழியர்களும் உள்ளனர். அவர்கள் சார்ந்துள்ள மூன்று தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக நோட்டீஸ் அளித்தன. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீர்வுகாண விரும்பாத ஒன்றிய அரசு, உடனே அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடைசெய்து அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. அந்த அவசர சட்டத்தைத்தான் இப்போது மசோதாவாக அறிமுகப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறார்கள்.

அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

தற்போது இருக்கும் ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலில் தொடங்கப்பட்டன. 1775-ம் ஆண்டு கல்கத்தாவில் இருந்த வில்லியம் கோட்டையில் முதலில் ராணுவ போர்டு ஒன்று அமைக்கப்பட்டது. 1787-ம் ஆண்டு துப்பாக்கி மருந்து தொழிற்சாலை இஷாபூர் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1801-ம் ஆண்டு காசிப்பூர் எனுமிடத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இவ்வாறு 18 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த பின்னர் மேலும் 23 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. தற்போது உள்ள 41 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளில் 11 தொழிற்சாலைகள் வெடிமருந்துகள் தயாரிக்கின்றன; 10 தொழிற்சாலைகள் ஆயுதங்களையும், ஆயுத வாகனங்களையும் தயாரிக்கின்றன; 20 தொழிற்சாலைகள் உதிரி பாகங்களையும், கவச வாகனங்களையும் தயாரிக்கின்றன.

ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் கார்கில் போருக்குப் பிறகு ஆரம்பித்தது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட டி.கே.ஏ.நாயர் கமிட்டி (2000), அனைத்து ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளையும் ஒருங்கிணைத்து ‘ஆயுதத் தளவாட கார்ப்பரேஷன்’ என மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி (2005) விரிவான பரிந்துரைகளை வழங்கியது.

அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

எதிர்காலத்தில் யுத்தங்களில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் இந்திய ராணுவம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என கேல்கர் கமிட்டி வலியுறுத்தியது. ‘தகவல் தொழில்நுட்ப தளத்தில் மேலாதிக்கம் செலுத்த வேண்டும்; எலெக்ட்ரானிக் யுத்தத்தில் இந்தியா தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்; எதிரிகளுடைய கண்காணிப்பு அமைப்பைச் சீர்குலைக்கவும் அழிக்கவும் ஆற்றல் பெற வேண்டும்; ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும்; எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறியப்படும் இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான சிறப்புப் படைப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு வேண்டும்; அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை வேண்டும்’ - எனப் பல்வேறு பரிந்துரைகளை வழங்கிய கேல்கர் கமிட்டி, அதற்கேற்ப தற்போது நம்மிடம் உள்ள ராணுவக் கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும், `ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் அவை தொடர்பான பொதுத்துறை நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி மேம்படுத்தப்பட வேண்டும்’ என்றும் அது வலியுறுத்தியது. 2018-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை, ‘தற்போதுள்ள ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 49 சதவிகிதத்தை மட்டுமே எட்டுகின்றன. அவற்றில் தயாரிக்கப்படும் ஆயுதங்களும் நம் காலத்துக்குப் பொருத்தமானவையாக இல்லை. இதனால் நம்முடைய ராணுவ வலிமை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டது.

ஆனால், இந்த கமிட்டி அறிக்கைகள் கூறியிருப்பதைப்போல நம்முடைய ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியவையாக இல்லையென்பதே உண்மை. இந்தியாவில் லாபம் ஈட்டக்கூடிய தொழிற்சாலைகளில் அவை முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, இஸ்ரேல், இத்தாலி, பெல்ஜியம், எகிப்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 30 நாடுகளுக்கு இங்கே தயாரிக்கப்படும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நமது நாட்டில் தயாரிக்கப்படும் இன்சாஸ் துப்பாக்கிகள், ஓ.எஃப்.பி- 12 ஷாட்கன்கள், வித்வான்சாக், ஜே.வி.பி.சி., அஸ்மி ரகத் துப்பாக்கிகள் உலக அளவில் பாராட்டைப் பெற்றவை. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தனுஷ் பீரங்கி இந்திய ராணுவத் தளவாட உற்பத்தியின் திறமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. தனுஷ் பீரங்கி, ஸ்விஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட போஃபர்ஸ் பீரங்கியைவிட மேம்பட்ட திறன் கொண்டது. போஃபர்ஸ் பீரங்கி 27 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன்கொண்டது. தனுஷ் பீரங்கியோ 38 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன்கொண்டது. போஃபர்ஸ் பீரங்கியின் விலையில் தனுஷ் பீரங்கியின் விலை பாதிகூட இல்லை. அதேபோல சிறப்புவாய்ந்த ‘ஷாரங்’ என்ற இன்னொரு வகை பீரங்கியையும் இந்திய ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் தயாரித்துவருகின்றன. அவற்றில் தயாரிக்கப்படும் டி-72 மற்றும் டி-90 டாங்கிகளும் புகழ்பெற்றவை.

பாதுகாப்புத்துறையின் வருடாந்தர அறிக்கைகளில் பார்த்தால் இங்கிருந்து ஏற்றுமதியாகும் ஆயுதங்கள் எவ்வளவு தொகையை நமக்கு ஈட்டித் தருகின்றன என்பது தெரியும். 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் 10,745 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பங்கு அரசாங்கத்தின் ஆயுதத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளையே சேரும். அந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டுதான் சுதந்திரத்துக்குப் பிறகான அத்தனை யுத்தங்களிலும் இந்தியா வெற்றிபெற்றது.

ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் தனியார்மயப்படுத்தப்பட்டால் அவற்றைக் கையகப்படுத்திக்கொள்வதற்குத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆவலோடு காத்திருக்கின்றன. ஏற்கெனவே, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அப்படித்தான் லாபகரமாக இயங்கிவந்த ஐ.பி.சி.எல் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டது. அதை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றார்கள். அதுபோல இப்போது லாபகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆயுதத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளையும் ‘கபளீகரம்’ செய்ய பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே அவசர அவசரமாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியாரின் பங்கை அனுமதிக்கும் முடிவு முதன்முதலில் 2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அப்போது 26 சதவிகிதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தார்கள். 2016-ம் ஆண்டில் அதில் திருத்தம் செய்யப்பட்டு, 49 சதவிகித நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு, மே மாதத்தில் அது 74 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு பின்னர் 100 சதவிகிதமாக ஆக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை இப்படி பா.ஜ.க அரசு தனியாருக்கு ஏற்கெனவே விற்க ஆரம்பித்துவிட்டது. அவ்வாறு பங்குகளை விற்றதால் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 8,073.29 கோடி ரூபாயும், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 2,371.19 கோடி ரூபாயும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 14,184.7 கோடி ரூபாயும், மேலும் மூன்று நிறுவனங்களிலிருந்து 1,828.81 கோடி ரூபாயும் ஈட்டப்பட்டுள்ளன என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது கடந்த மார்ச் 2021-ல் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பத் நாயக் தெரிவித்தார்.

ராணுவத் தளவாட உற்பத்தித்துறையில் கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, ‘கார்ப்பரேட் மயம் ஆவதால் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் நேராது’ என்று தெரிவித்தார். `அவர்களுடைய ஊதியம், ஓய்வூதியம் தடைப்படாது; அவையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றப்படும்’ என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதைத் தொழிலாளர்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. இப்படி, தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கதிதான் தமக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

அத்தியாவசிய பாதுகாப்பும் ஆள்தூக்கி சட்டமும்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவும், அவற்றின் திறனை மேம்படுத்தி மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்கும் ஒரு திட்டத்தை தொழிற்சங்கங்கள் தயாரித்து அரசிடம் வழங்கின. ஆனால், அரசாங்கமோ ‘கார்ப்பரேட் மயமாக்குவது’ என்பதில் விடாப்பிடியாக இருக்கிற காரணத்தால், அந்த ஆலோசனைகளைப் பரிசீலிக்கக்கூட ஆர்வம் காட்டவில்லை. பா.ஜ.க அரசால் தற்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டம் வேலைநிறுத்தத்தில் முதன்முறை ஈடுபடும் தொழிலாளிக்கு 10,000 ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் அளிக்கவும், அதே தொழிலாளி மீண்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கவும் வகை செய்கிறது. இது ‘எஸ்மா’ சட்டத்தைவிடக் கொடுமையானது. ஏற்கெனவே யுஏபிஏ போன்ற சட்டங்களையும், தேசத்துரோக சட்டப் பிரிவையும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பழிவாங்கிக்கொண்டிருக்கும் பா.ஜ.க அரசு, இந்தச் சட்டத்தையும் அப்படித்தான் துஷ்பிரயோகம் செய்யப்போகிறது. அதுமட்டுமன்றி தற்போது பாதுகாப்பு சேவைகள் துறைக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஆள்தூக்கி சட்டத்தை’ மோடி அரசு பிற துறைகளுக்கும் விரிவுபடுத்தக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

பெகாசஸ் உளவுச் செயலியையும், வேளாண் விரோத சட்டங்களையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அந்தச் சந்தடியில் இந்த ஆபத்தான சட்டத்தை எதிர்க்காமல் விட்டுவிட்டால், அது தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி நாட்டின் பாதுகாப்புக்கே பேராபத்தாக முடிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism