Published:Updated:

இடியுடன் முடிந்த மழைக்காலத் தொடர்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

இடியுடன் முடிந்த மழைக்காலத் தொடர்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

Published:Updated:
நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் ‘போராட்ட இடி’ இடைவிடாமல் முழங்கிக்கொண்டிருந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நிர்ணயிக்கப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே முடித்துவைக்கப்பட்டிருக்கிறது! ‘எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை’ என்று ஆளும் தரப்பு குற்றம்சாட்டினாலும், தங்களுக்குத் தேவையான சட்ட மசோதாக்களை இந்த அமளிக்கு இடையேயும் அவர்கள் நிறைவேற்றிக்கொண்டுவிட்டார்கள். விவாதம் நடக்காதது ஒருவிதத்தில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது. தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள 20 மசோதாக்கள்மீது வழக்கம்போல விவாதங்கள் நடைபெற்றிருந்தால் அந்த மசோதாக்களின் மக்கள் விரோதத் தன்மை அம்பலமாகியிருக்கும்!

ரவிக்குமார்
ரவிக்குமார்

‘பெகாசஸ் உளவுச் செயலி தொடர்பாக விவாதிக்காமல் அவை நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம்’ என்று உறுதியாக இருந்த எதிர்க்கட்சிகள், ஓ.பி.சி இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்துக்கு மட்டும் சம்மதித்து, மக்களவையில் 10.08.2021 அன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றன. எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டையே மாற்றிய அந்த சட்ட மசோதாவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?

மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிர மாநில அரசு 16 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து 2018-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வு, மகாராஷ்டிரா அரசு இயற்றிய அந்தச் சட்டத்தை கடந்த 2021, மே மாதத்தில் ரத்து செய்துவிட்டது. ‘உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள்கொண்ட அமர்வு, இந்திரா சஹானி வழக்கில் நிர்ணயித்த 50 சதவிகித உச்சவரம்பை மராத்தா இட ஒதுக்கீட்டு சட்டம் மீறுகிறது’ என்று அதற்குக் காரணம் கூறப்பட்டிருந்தது.

இடியுடன் முடிந்த மழைக்காலத் தொடர்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

இந்த வழக்கு விசாரணையின்போது இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள்கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை சீராய்வு செய்வதற்கு மேலும் விரிவான அமர்வு ஒன்றுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசால் முன்வைக்கப்பட்டது. “அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கரே, இட ஒதுக்கீடு என்பது ஒப்பீட்டளவில் குறைவான இடங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற அமர்வு, “இந்திரா சஹானி வழக்கில் 50 சதவிகித உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், விதிவிலக்காகக் கூடுதலான சதவிகித இட ஒதுக்கீட்டையும்கூட அரசாங்கம் வழங்கலாம். ஆனால், அவ்வாறு வழங்கும்போது மிக அதிகமான எச்சரிக்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். அது அசாதாரணமான ஒரு காரணத்துக்காக வழங்கப்படுகிறது என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், மராத்தா இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை அதை ஓர் அசாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறி திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

அத்துடன், “இந்திய ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாகப் பிரிவுகள் 338-B, 342-A ஆகியவற்றைச் சேர்த்து 102-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் குடியரசுத் தலைவருக்கும்தான் உள்ளது” என்றும் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அளித்துவரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நெருக்கடி உண்டானது. ‘இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்த 102-வது சட்டத் திருத்தத்தில் செய்யப்பட்ட குழப்பமே உச்ச நீதிமன்றம் இப்படித் தீர்ப்பு வழங்கக் காரணம். பா.ஜ.க அரசு தெரிந்தேதான் அந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ‘மோடி அரசு பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கும் அரசு’ என்று விமர்சித்தன. மற்ற நேரமாக இருந்தால் அந்த விமர்சனங்களை மோடி அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கும். உத்தரப்பிரதேசத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் ஓ.பி.சி சமூகத்தினர் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு எதிராகப்போய்விடும் என்பது பா.ஜ.க-வுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்தச் சட்ட மசோதாவை பா.ஜ.க அரசு கொண்டு வந்தது.

இடியுடன் முடிந்த மழைக்காலத் தொடர்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

மராத்தா இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூன்று முக்கியமான அறிவிப்புகளை அது செய்திருந்தது: ‘மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது; பிற் படுத்தப்பட்ட சாதி களின் பட்டியலில் ஒன்றைச் சேர்க்கவும் நீக்கவுமான அதிகாரம் மாநிலங்களுக்குக் கிடையாது; 50 சதவிகித உச்சவரம்பு அப்படியே தொடரும்’ என்பவைதான் அந்த அறிவிப்புகள். தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் மாநில அரசுக்கான பட்டியல் தொடரும் என்று மட்டும்தான் கூறியிருக்கிறது. 50 சதவிகித உச்சவரம்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இன்றைய சூழலில் 50 சதவிகிதத்துக்கு மேல் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை எந்த நேரத்திலும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிடக்கூடும்.

இந்த ஆபத்தைப் புரிந்துகொண்டதால்தான் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சிகள் தற்போது இட ஒதுக்கீட்டுக்கு இருக்கும் 50 சதவிகித உச்சவரம்பை நீக்க இந்தச் சட்டத் திருத்தத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலான ஒருசில கட்சிகள் ‘தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, அதற்கான திருத்தங்களை இந்த மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பெரும்பாலான எதிர்க்கட்சிகள், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளன. இந்தக் கோரிக்கையை பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் வலியுறுத்திவருகிறார்.

இது புதிதாக எழுப்பப்படும் கோரிக்கை அல்ல. 1955-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியிருந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன்பும்கூட பிற்படுத்தப்பட்டவர்களின் மக்கள்தொகையைச் சரியாகக் கணக்கிடுவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தியாவில் இதற்கு முன்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. மக்கள்தொகைக் கணக் கெடுப்பு செய்வதும்கூட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைதான். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகையைக் கணக்கெடுத்து அறிவிப்பதென்பது 1871-ம் ஆண்டிலிருந்து நடந்துவருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1931-ம் ஆண்டுவரை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. உலக யுத்தத்தின் காரணமாக 1941-ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாமலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கிவிட்டுப் போய்விட்டனர்.

சுதந்திரத்துக்குப் பின்னர் 1951-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தும்போது, ‘சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவதா, வேண்டாமா?’ என்ற விவாதம் எழுந்தது. ‘சாதிவாரியாகக் கணக்கெடுப்பதால் மக்களிடையே பிரிவினை உணர்வுதான் அதிகரிக்கும். எனவே, அது தேவையில்லை’ என்று அப்போது முடிவு செய்தனர். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அந்தக் கோரிக்கையை அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன.

50 சதவிகித இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவதற்கு பா.ஜ.க அரசு முன்வராததற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தின்மேல் அதற்கிருக்கும் மரியாதை அல்ல; உச்ச நீதிமன்றத்தின் 50 சதவிகித உச்சவரம்பை மீறி ‘பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்’ என்ற பெயரில் அழைக்கப்படும் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பா.ஜ.க அரசு வழங்கியிருப்பதே அதற்குச் சான்று.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள 127-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 342 A-ல் ‘அரசியலமைப்புச் சட்டம்’ என்று இருந்த இடங்களில் ‘மத்திய பட்டியல்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் ‘மத்திய பட்டியல்’ என்றால் மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படும் சமூக, கல்வி ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியல் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் ஒன்றைத் தமது பயன்பாட்டுக்கென மாநில அரசுகள் பராமரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதியொன்று மத்திய பட்டியலில் இடம்பெறவில்லையெனில் அந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி-க்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

இடியுடன் முடிந்த மழைக்காலத் தொடர்! - முனைவர் ரவிக்குமார் எம்.பி

உதாரணமாக, தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கு ஓ.பி.சி பட்டியலில் உள்ள சேர்வை, அன்சார், ஆயிரவைசியர், சவுத்ரி, கள்ளர் குல தொண்டைமான், கன்னடிய நாயுடு, கற்பூர செட்டியார், உரிக்கார நாயக்கர், வேளார் உள்ளிட்ட 26 சாதிகள் ஒன்றிய அரசின் ஓ.பி.சி பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் ஒன்றிய அரசு நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இந்த 26 சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பல சாதிகள் ஒன்றிய அரசின் ஓ.பி.சி பட்டியலில் இடம்பெறாத நிலை உள்ளது. அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வழி காணப்படவில்லை.

‘உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலை மனதில்வைத்தே பா.ஜ.க அரசு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது. மற்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் போராட்டம் நடத்தியதுபோல இந்த மசோதா வரும்போதும் செய்தால் பிற்படுத்தப்பட்டோரின் நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்று பா.ஜ.க பிரசாரம் செய்யும்’ என்பதைப் புரிந்துகொண்டு அந்த சூழ்ச்சிக்கு இடமளித்துவிடாமல் எதிர்க்கட்சிகள் விழித்துக்கொண்டன. போராட்டத்தை நிறுத்திவிட்டு விவாதத்தில் பங்கேற்றன. நாட்பட நாட்பட எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையும் உறுதியும் வலுவடையும் என்பதைப் புரிந்துகொண்ட பா.ஜ.க அரசு, அதனால்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துவிட்டது.