Published:Updated:

வெற்றிக்கு வழிவகுக்குமா தோல்வி? - முனைவர் ரவிக்குமார் எம்.பி

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்...

வெற்றிக்கு வழிவகுக்குமா தோல்வி? - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்...

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆரம்பித்துள்ளது. ‘மோடி அரசு ஒருபோதும் திரும்பப் பெறவே பெறாது’ என்று பா.ஜ.க-வினர் மட்டுமல்ல... எதிர்க்கட்சியினர் சிலரும் நம்பிக்கொண்டிருந்த வேளாண் சட்டங்களைத் திடீரென திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதுவும் சாதாரண அறிவிப்பு அல்ல... ‘விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பிரதமரின் பொதுவான அணுகுமுறைக்கு மாறாக அந்த அறிவிப்பு வெளியானது. அது அவரைப் பற்றி கட்டியெழுப்பப்பட்டிருந்த பிம்பத்தில் மிகப்பெரிய உடைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெற்றிக்கு வழிவகுக்குமா தோல்வி? - முனைவர் ரவிக்குமார் எம்.பி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் ஆட்சி சிறப்பாக இருந்தது என்றாலும், அவர் `மென்மையான பிரதமர்’ என்று விமர்சிக்கப்பட்டார். அமெரிக்காவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து போகிறவராகவும், எதிர்க்கட்சிகளை வலுவாக எதிர்கொள்ளத் திராணி இல்லாதவராகவும் அவரை ஊடகங்கள் சித்திரித்தன. அதற்கு ஏற்றாற்போல் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும்விதமாக மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தின் நகலை அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் கூட்டத்தில் கிழித்தெறிந்து ‘மன்மோகன் சிங் ஊழலுக்குத் துணைபோகாதவர்’ என்ற பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்துத் தள்ளினார். அதனாலேயே 2014 பொதுத்தேர்தலில் மன்மோகன் சிங்குக்கு நேரெதிரான ஆளுமையாக மோடியை பா.ஜ.க முன்னிறுத்தியது. அவர் முதல்வராக இருந்த குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் மற்றும் அது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளெல்லாம் பா.ஜ.க கட்டியெழுப்ப நினைத்த இந்துத்துவப் பேரரசின் முடிசூடா மன்னர் இவர்தான் என்று கருதவைத்தன.

2014-ல் மோடியின் பிம்பக் கட்டமைப்பு பா.ஜ.க-வின் வெற்றிக்குப் பேருதவியாக அமைந்தது. பின்னர் அந்த பிம்பத்தைக் காப்பாற்றுவதே அவருக்கு முதன்மையான பணியாக மாறிவிட்டது. பா.ஜ.க-வினரும், சங் பரிவார அமைப்பினரும் மோடி எதற்கும் வளைந்து கொடுக்காதவர் என்ற ஓர் எண்ணத்தை உருவாக்கினார்கள். மோடியுமே அப்படித்தான் இருந்தார். அப்படி பார்த்துப் பார்த்துக் கட்டியமைக்கப்பட்ட ஒரு பிம்பத்தை அவரே உடைப்பார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

அண்மைக்கால அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பு அமைந்துவிட்டது. உத்தரப்பிரதேசத் தேர்தலுக்காகத்தான் இந்தப் பின்வாங்கல் என்று காங்கிரஸுக்கும் தெரியும்; விவசாயிகளுக்கும் தெரியும் என்றாலும் அவர்கள் அந்த ‘யுத்த தந்திரப் பின்வாங்கலை’ தனக்குச் சாதகமாக பா.ஜ.க பயன்படுத்த அனுமதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதனால்தான், ‘அடுத்தடுத்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும்’ என்ற அறிவிப்பை விவசாயிகள் வெளியிட்டனர். ‘குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு தேவை’ என்பதோடு ‘போராட்டத்தில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றும் அவர்கள் கூறினர்.

வெற்றிக்கு வழிவகுக்குமா தோல்வி? - முனைவர் ரவிக்குமார் எம்.பி

கடந்த நவம்பர் 29-ம் தேதி கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், ‘வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் தர ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் அதேநாளில் அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்துவதாக மோடி அரசும் ஒப்புக்கொண்டது. சட்டங்களை திரும்பப் பெற்றது மட்டுமல்ல, அதை முதல் நாளிலேயே திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் பணிந்தது பிரதமர் மோடியின் பிம்பத்தின்மீது விழுந்த இரண்டாவது அடியாகும். அரசு பின்வாங்குகிறது என்று தெரிந்ததும், எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்த தாக்குதலைத் தொடுப்பதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுவிட்டன. இப்போது எந்த மோதல் நடந்தாலும் அது தமக்கு எதிராகத்தான் முடியுமென்பதை பிரதமர் மோடி நன்றாக அறிவார். அதனால் இப்போது மோதலைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம் என்கிற முடிவை பா.ஜ.க அரசு எடுத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை விவாதிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்ற முடிவை அலுவல் ஆய்வுக்குழு கூடித்தான் தீர்மானிக்கும். அவ்வாறு கூட்டப்பட்ட அலுவல் ஆய்வுக்குழுவில், அண்மையில் அவசரச் சட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட இரண்டு சட்டங்களை ரத்து செய்து, அவற்றை மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு சட்ட மசோதாவுக்கு தலா மூன்று மணி நேரம் என்று நேரம் ஒதுக்கப்பட்டது. இன்னொரு சட்ட மசோதாவுக்கு நான்கு மணி நேரம் விவாதத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்ட மசோதா மீதான விவாதம் நிச்சயம் தங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்; பலவீனமான நிலைக்குத் தள்ளும் என்பதைப் புரிந்துகொண்ட ஆளுங்கட்சி, இந்த விவாதத்தை எவ்வாறு திசைதிருப்புவது என யோசித்து எடுத்ததுதான், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்ற முடிவு. மூன்று மாதங்களுக்கு முன்பு முடிந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது ஏற்பட்ட அமளிக்குக் காரணமானவர்கள் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை, கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக ஆளுங்கட்சி அறிவித்துவிட்டது. இந்த இடைநீக்கத்தின் நோக்கம், இந்தக் கூட்டத் தொடரில் யாரும் அப்படி அமளியில் ஈடுபடக் கூடாது என்பதல்ல... மாறாக இந்தக் கூட்டத்தொடர் அமைதியாக நடக்கக் கூடாது என்பதுதான் பின்னாலிருக்கும் நோக்கமாகும்.

இந்தக் கூட்டத்தொடரை இயல்பாக நடக்க அனுமதித்தால், நிச்சயம் அது ஆளுங்கட்சிக்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதையும் அது பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதையும் பா.ஜ.க நன்றாக அறிந்திருக்கிறது. அதனாலேயே இந்தக் கூட்டத்தொடரை விவாதமே நடக்காமல் முடித்துவிட வேண்டும் என்று ஆளும் தரப்பு திட்டமிடுகிறது. அதற்கான தந்திரமே இடைநீக்கம். ஆட்சியாளர்களின் நோக்கம் தெரிந்தாலும், இதை உதாசீனப்படுத்திவிட்டு அலுவல்களைப் பார்ப்போம் என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்தால் அது அவர்களை பலவீனமாகக் காட்டிவிடும். இப்போது ஒரு பெரிய போராட்டத்தில் வெற்றியைப் பெற்று சாதகமான நிலையில் இருக்கும், எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே பலவீனப்படுத்திக்கொள்ள எப்படி ஒப்புக்கொள்வார்கள்? ‘இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், மன்னிப்புக் கேட்டு கடிதம் கொடுத்தால் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்று ஆளும் தரப்பு அறிவித்திருக்கிறது. ஆனால், “மன்னிப்புக் கடிதம் கொடுக்க நாங்கள் என்ன சாவர்க்கரா?” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினோய் விஸ்வம் காட்டமாக அதற்கு பதில் அளித்திருக்கிறார்.

வெற்றிக்கு வழிவகுக்குமா தோல்வி? - முனைவர் ரவிக்குமார் எம்.பி

‘வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது விவசாயிகள்மீதான நல்லெண்ணத்தில் அல்ல’ என்று விமர்சிக்கும் விவசாய அமைப்புகள், ‘எம்.எஸ்.பி’ (MSP) என்றால் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) என்பதுகூட தெரியாமல், `குறைந்தபட்ச விற்பனை விலை’ (Minimum Sale Price) என்று மசோதாவில் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க-வுக்கு விவசாயிகள்மீது இருக்கும் அக்கறையின் லட்சணம் இதுதான் என்று கேலி செய்கின்றன. தேர்தலுக்காக வாபஸ் பெறப்பட்ட இந்தச் சட்டங்களை உ.பி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வேறு வடிவில் மோடி அரசு கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் இருக்கிறது.

பெகாசஸ் பிரச்னையை முன்வைத்து மழைக்காலக் கூட்டத்தொடரை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தபோது, அந்தப் போராட்ட நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸும் பங்கேற்றது. ஆனால், இப்போது காங்கிரஸ் விடுத்த அழைப்பை அது நிராகரித்துவிட்டது. அதற்கு பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்கள்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அதைத் தாண்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி மம்தா காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார். காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அதேசமயம், பா.ஜ.க-வுக்குப் போதிய இடங்கள் கிடைக்காதபட்சத்தில் 2004-ல் அமைக்கப்பட்டதுபோல, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசை அமைப்பதற்கான முன்னேற்பாடாகவும் இது கருதப்படுகிறது. அண்மையில் சுப்பிரமணியன் சுவாமியை மம்தா சந்தித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆசியும் அதற்கு இருக்கிறதோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது.

இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளும், பா.ஜ.க-வின் உத்திகளும் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான ஆயத்தங்களாக மட்டுமின்றி, 2024 பொதுத்தேர்தலுக்கான தயாரிப்பாகவும் அமையப்போகின்றன. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதால் சந்தித்த தோல்வியை, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியாக பா.ஜ.க மாற்றுமா என்பதில்தான் 2024 தேர்தல் களம் அமையப்போகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism