அலசல்
Published:Updated:

இளகும் கூட்டணி... வாய்ப்பைத் தவறவிட்ட காங்கிரஸ்!

நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான விமர்சனங்கள் மற்றும் பார்வைகள்... - முனைவர் ரவிக்குமார் எம்.பி

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே திரிணாமுல் காங்கிரஸ் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களோடு சேர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ததால், எதிர்க்கட்சிகளுக்கு இடையே கூட்டு நடவடிக்கைக்கான வாய்ப்பை ஆளுங்கட்சியே வலிந்து ஏற்படுத்தித் தந்தது. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், தொடரும் விவசாயிகள் போராட்டம், எம்.பி-க்கள் இடைநீக்கம் என ஆளுங்கட்சிக்கு மேலும் நெருக்கடி தருவதற்கான நல்லதொரு வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு அமைந்தது. ‘பா.ஜ.க-வுக்கு மாற்றே இல்லை’ என்ற மாயையை உடைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும் இருந்தது. ஆனால், வழக்கம்போல காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பையும் தவறவிட்டது!

ஒவ்வொரு நாளும் காலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடுவதும், எந்தவொரு செயல்திட்டமும் இல்லாமல் கலைவதுமாக இருந்தனர். அவைக்குள் சென்று கோஷமிடுவதும், அவை ஒத்திவைக்கப்பட்டதும் வெளியில் வருவதுமாக இரண்டு நாள்கள் கழிந்தன. காங்கிரஸின் அணுகுமுறையைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.

முனைவர் ரவிக்குமார் எம்.பி
முனைவர் ரவிக்குமார் எம்.பி

காந்தி சிலை எதிரில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “அடுத்து ராகுல் காந்தி பேசுவார்” என்று அறிவித்தார். ராகுலின் பேச்சில் ஏதோ முக்கியமான செயல்திட்ட அறிவிப்பு இடம்பெறப்போகிறது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்வமானார்கள்... ஆனால் ராகுலோ, “நாடாளுமன்றத்துக்கு உள்ளே குரலெழுப்ப வேண்டியவர்கள், இங்கே குரலெழுப்புகிற நிலையில் இருக்கிறோம். இது மிகவும் துயரமானது” என்று முடித்துக்கொண்டார். பிரதமர் மோடியைப்போல வசீகரமான பேச்சாளர் அல்ல ராகுல் காந்தி. ஆனால், சில நேரங்களில் மிகவும் சாதாரண உரையாடலில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் மிகவும் வலிமையாக இருக்கும். உண்மையின் வலிமை அது. அப்படியான பேச்சைத்தான் அப்போது அங்கே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் பேசியவிதம் எதிர்க்கட்சிகளிடையே நம்பிக்கையை வற்றச் செய்துவிட்டது.

காங்கிரஸ் தலைமையின் ஆர்வமில்லாத அணுகுமுறையைக் கண்ட பிற கட்சிகள், இனிமேலும் அவர்கள் தலைமையில் அவையைப் புறக்கணித்துக்கொண்டிருப்பது சரிப்படாது என்ற முடிவுக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஆரம்பித்தன. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்கள் மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும், இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அதை ஆளுங்கட்சியும் கண்டுகொள்ளவில்லை; எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை. எவராலும் பொருட்படுத்தப்படாமல் தனியே ஒலித்துக்கொண்டிருந்த அவர்களது முழக்கம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்குச் சான்றாக அமைந்தது மட்டுமல்ல... 2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் அணி அமையுமா என்ற ஐயத்தையும் ஏற்படுத்திவிட்டது. அதற்கு ஏற்றாற்போல் ‘இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என ஒன்று இல்லை’ என்று மம்தாவும் அறிவித்துவிட்டார்.

எதிர்முகாமில் போராட்ட வேகம் வடிந்துவிட்ட நிலையைக் கண்ட ஆளுங்கட்சி தனது உத்தியை மாற்றிக்கொண்டு ஜனநாயக வேடம் பூண்டிருக்கிறது. வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க மறுத்துக்கொண்டிருந்தவர்கள், திடீரென விதி எண் 193-ன்கீழ் கொரோனா குறித்து விவாதிக்க அனுமதியளித்தார்கள். அந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தனர்.

இளகும் கூட்டணி... வாய்ப்பைத் தவறவிட்ட காங்கிரஸ்!

காங்கிரஸ் சார்பில் பேசிய கௌரவ் கோகோய், “எமது தலைவர் ராகுல் காந்தி 2020, பிப்ரவரி மாதத்திலேயே கொரோனா பற்றி அரசாங்கத்தை எச்சரித்தபோது, ஆட்சியாளர்கள் அதைக் கேலி செய்தனர். மீண்டும் 2020 செப்டம்பரில், தடுப்பூசியில் கவனம் செலுத்துமாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார். அப்போதும் இந்த அரசு அலட்சியமாகவே இருந்தது. நமது மக்களுக்குத் தடுப்பூசி தேவைப்படும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த அரசு அனுமதித்தது. அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், ஏராளமான உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம். தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நாட்டில் 3,620 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்றோர் ஆகிவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு இன்னும் எத்தனை பேர் ஆதரவற்றோர் ஆகியிருக்கிறார்கள் என்று இந்த அரசு தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு அரசு அளித்துள்ள நிவாரணம் என்ன என்பதையும் கூற வேண்டும். தனியாரிடம் கொடுக்கப்பட்ட 25 சதவிகித தடுப்பூசியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும். பிரதமருடைய பிறந்தநாளன்று இரண்டரை கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் அதேபோல ஏன் இரண்டரைக் கோடிப் பேருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை? அவ்வாறு போட்டிருந்தால் தடுப்பூசி போடாதவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்னும் அவப்பெயர் மாறியிருக்கும்” என்று சுட்டிக்காட்டினார். ஒன்றிய அரசு உரிய நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கவில்லை; ஆக்சிஜன், வென்டிலேட்டர் முதலான வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை; இறந்தவர்கள் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை பெரும்பாலான உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

மறுநாள் இந்த விவாதத்துக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கோ, கேள்விகளுக்கோ பதில் எதுவும் சொல்லவில்லை. மாறாக, உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோடு இந்தியாவின் எண்ணிக்கையை ஒப்பிட்டு, நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிக மிகக் குறைவு என்றார். மேலும், “கொரோனா கண்டறியப்பட்ட நேரத்தில் என். 95 மாஸ்க்குகள், பி.பி.இ கிட்டுகள் முதலானவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தோம். ஆனால், இன்று நமது தேவையை நிறைவு செய்திருப்பதோடு, ஏற்றுமதி செய்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். தடுப்பூசிகளையும் மிகப்பெரிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இது மிகப்பெரிய சாதனை” என்றார் அவர்.

இளகும் கூட்டணி... வாய்ப்பைத் தவறவிட்ட காங்கிரஸ்!

இந்தக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலம், இரண்டு ஆண்டுகளிலிருந்து ஐந்தாண்டுகளாக நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட மசோதாக்கள்தான் அதிகம் விமர்சிக்கப்பட்டன. “அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளையும், மாநில அரசுகளையும் அச்சுறுத்துவதற்காகவும், சித்ரவதை செய்வதற்காகவும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் கையாளாக மாறிவிட்டது. இயக்குநர் பதவியின் காலத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் சௌகத் ராய் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் சார்பில் பேசிய கொடிக்குன்னில் சுரேஷ், “இயக்குநர்களின் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளாக நீட்டிப்பது சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பானது” என்றார். புரட்சிகர சோஷலிசக் கட்சியின் பிரேமச்சந்திரன் முன்வைத்த காரணங்கள் வலுவானவையாக இருந்தன. “ஒரு சட்ட மசோதாவின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும், அந்தச் சட்டத்தின் கூறுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவில் அவ்வாறு இல்லை. எனவே, இந்த மசோதாவின் நோக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.

சசிதரூர், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோரும் இந்தச் சட்ட மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு வரும்போது இன்னும் பெரிய எதிர்ப்பு கிளம்பக்கூடும். எதிர்க்கட்சிகள் இப்படிச் சோர்ந்துபோயிருந்த நிலையில் ஆளுங்கட்சி தனது தந்திரமான காய்நகர்த்தலை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியது. மாநிலங்களவையில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால், தனக்குக் கிடைத்திருக்கும் தற்காலிகப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்த மசோதாவை பா.ஜ.க அரசு சட்டமாக்கிவிட்டது.

இளகும் கூட்டணி... வாய்ப்பைத் தவறவிட்ட காங்கிரஸ்!

இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து மசோதாக்களையும் பா.ஜ.க அரசு அவசர அவசரமாக நிறைவேற்றும் என்பதற்கான முன்னோட்டமே இது. அதைப்போலவே மக்களால் அதிகம் எதிர்க்கப்படுகிற மேலும் சில மசோதாக்களையும் சட்டமாக்குவதில் பா.ஜ.க அரசு தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் ‘வங்கிகள் சட்ட திருத்த மசோதா’ மற்றும் ‘கடல்சார் மீன்வள மசோதா’ என தனக்குத் தேவையான மசோதாக்களை பா.ஜ.க நிறைவேற்றிக்கொள்ளும். இவை சட்டமாவதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராடுவார்களா அல்லது வேளாண் சட்ட எதிர்ப்பில் சுணங்கியதுபோல் சோர்ந்து போவார்களா என்பதை அடுத்த வாரத்தின் நடவடிக்கைகள் நமக்குக் காட்டிவிடும்!