விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று காலை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பட்டியலின கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், துணைத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள், லூப் சாலையில் போராடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி ஆகியவற்றுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வேங்கைவயல் விவகாரத்தில், போராட்டம் நடத்தினோம், அதன் பிறகு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவிடம் பேசினோம், சட்டப்பேரவையில் விவாதித்திருக்கிறோம். தொடர்ந்து வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரித்துவருகிறோம். அரசு வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு, பட்டியலின மக்களுக்கு எதிராகச் செயல்படவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்றவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க அரசுக்கு எதிராக 10 போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நாளையும் கிருஷ்ணகிரியில் போராடவிருக்கிறோம்.

குற்றவாளிகளைப் பிடிக்க ஏதேனும் கால அவகாசம் இருக்கிறதா என்ன... அப்படியானால், ராமஜெயம் படுகொலை நடந்து இவ்வளவு காலமாகியும் குற்றவாளி கைதுசெய்யப்படவில்லை என்பதால் இதற்கு உள்நோக்கம் கற்பிக்கலாமா... காலம் என்பது அளவுகோல் அல்ல. வேங்கைவயல் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில், அ.தி.மு.க., பா.ஜ.க-வினர் என யாரேனும் போராடினார்களா... போராடியது எல்லாம் தி.மு.க கூட்டணிக் கட்சியினர்" என்றார்.