Published:Updated:

`நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரலில் பேசுவோம்!' - திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

`நீட் தேர்வு குறித்து மீண்டும் ஒரு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று வி.சி.க., தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.

பெரம்பலூர் அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க., தலைவர் திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், ``சுற்றுச்சூழல் ஆர்வலர் தோழர் முகிலன் உயிரோடு இருக்கிறார் என்கிற தகவல் ஆறுதல் அளிக்கிறது. அவர் காணாமல் போனதில் இருந்து அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்கிற கவலை மேலோங்கியது, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக நீண்டகாலம் போராடியவர், போராடிக் கொண்டிருப்பவர். கூடங்குளம் அணு உலைத் திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற இயற்கை பாதுகாப்புக்கு எதிரான திட்டங்களையெல்லாம் எதிர்த்துப் போராடியவர் திடீரென்று காணாமல் போனது அதிர்ச்சி அளித்தது.

முகிலன்
முகிலன்

குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அங்கே நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட அணுகுமுறைகள் குறித்து ஒரு வீடியோவை செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வெளியிட்ட பின்னர், அவர் காணாமல் போனார். எனவேதான் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்கிற கவலை மேலிட்டது. ஆனால், தற்போது அவர் உயிருடன் இருக்கிறார் அதுவும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்கிற அளவிலேயே ஆறுதல் அடைகிறோம்.

அவர் எப்படி காணாமல் போனார், இதுவரையில் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார். அவருடைய உடல் நலம், மனநலம் எவ்வாறு இருக்கிறது என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை தேட வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும், மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அது நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு, தனது நிலைப்பாடு என்ன என்பது பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தது. மெடிக்கல் கவுன்சில் தொடர்பான திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானங்கள் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கவேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்று நான் மக்களவையில் வலியுறுத்தினேன். இந்த நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசு தரப்பில் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரானது அனைத்து கட்சிகளின் சார்பிலும், அனைத்து மக்களின் சார்பிலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவரும், பிரதமர் மோடி அரசும் புறக்கணித்து இருக்கிறது, அலட்சியப்படுத்தி இருக்கிறது என்பது வேதனையளிக்கிறது மத்திய அரசின் இந்த போக்கினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

தமிழக அரசு நீட் தேர்வு குறித்து மீண்டும் ஏகமனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அதனை பிரதமர் மோடிக்கு அனுப்பி, நீட் தேர்வு குறித்த இந்த கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சந்தர்ப்பம் வாய்க்கும்போது, நாடாளுமன்றத்திலும் நாங்கள் கட்டாயம் குரல் எழுப்புவோம். இந்த பிரச்சினையைப் பொருத்தவரையில் தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒருமித்த குரலில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் ஒருமித்த குரலில் பேசுவோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு