Published:Updated:

`உங்க சுற்றறிக்கையைப் பார்த்து அதிர்ந்தேன்!'- நாடாளுமன்றத்தில் `தகித்த' திருமா

``திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி'' என்று நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

திருமாவளவன்
திருமாவளவன்

நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்றிரவு நடந்த விவாதத்தில் பேசுகையில், ``இன்று (நேற்று 11-ம் தேதி) காலையில் தாங்கள் அனுப்பிய `ஸ்வச்தா அபியான்' சுற்றறிக்கை இந்தியில் மட்டுமே இருப்பதைக்கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் எங்கள் கோரிக்கையை ஏற்று பிற்பகலில் அக்கடிதம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மக்களவையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதற்கு நன்றி. எனது தொகுதியைப் பற்றி பேசுவதற்கு எனக்குப் போதிய நேரத்தை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

உலகிலேயே மூன்றாவது பெரிய துறை நமது இந்திய ரயில்வே துறை. நான் தென்னக ரயில்வேயில் நடைபெறும் சில பிரச்னைகள் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். தென்னக ரயில்வேயில் பணி நியமனங்களின் போதும் தொழிற்பழகுநர் பயிற்சி நியமனங்களின் போதும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே (அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கே) 80% வழங்க வேண்டும் என சட்டம் (apprenticeship act) இருக்கிறது. ஆனால், கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள். அண்மையிலே திருச்சி பொன்மலை பகுதியில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக தேர்வு நடைபெற்றது. அதில் 1,765 பேர் தேர்வு செய்யப்பட அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.

ரயில்வே தேர்வில் வடஇந்தியாவைச் சார்ந்த 1600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 165 பேர் மட்டுமே வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இந்த ஓரவஞ்சனை ஏன் நடக்கிறது என்பதை ரயில்வே துறை அமைச்சர் கவனிக்க வேண்டும். இது குறித்து ஒரு ஆய்வை நடத்த வேண்டும். இது தொடர்பாக அந்தச் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் அவர்கள் சி.பி.ஐ விசாரணை கேட்டு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் அதற்காக ஆர்.ஆர்.பி நடத்துகிற தேர்விலும்கூட ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலே நடைபெறும் வழக்கு குறித்து நீதியரசர் தண்டபாணி, ``There is something serious in this. such type of discrimination cannot be done against a particular state alone. If such things are done by authoriies of tamilnadu it would have been made a national issue. They would have been called antinational “ என குறிப்பிடுகிறார். எதற்காக இதைச் சொல்கிறார் என்றால், அந்த வழக்கு நடந்தபோது அந்த வழக்கை தள்ளிவைத்துவிட்டு அதில் சொல்லப்பட்ட கருத்துகளை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். “Postal recruitment camp in which state Haryana, Maharashtra and Punjab scored higher marks in tamil exams when compared to tamil candidates” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி.
திருமாவளவன்

தமிழ் படித்த மாணவர்களைவிட பிற மாநிலங்களைச் சார்ந்த தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான தகவல் என்பதை அவைத்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எழுத்துத் தேர்விலும் அங்கே ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன. திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி. இதை அமைச்சர்ள் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு அங்கே முக்கியத்துவம் தரவேண்டும் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக பியூன், ட்ரக் மேன், கேங் மேன், சானிட்டரி வோர்கர் போன்ற வேலைகளில்தான் இந்த முறைகேடுகள் நடக்கின்றன.

சென்னை ரயில் நிலைய அதிகாரிகள் பிற அதிகாரிகளோடு தொடர்புகொள்கிறபோது இந்தியில்தான் பேச வேண்டும் என்கிற சுற்றறிக்கையைப் பிறப்பித்தார்கள். ஆனால், அந்தந்த பகுதியைச் சார்ந்த அந்த மொழியைச் சார்ந்தவர்களைத்தான் வேலையில் நியமனம் செய்ய வேண்டும் என நம் சட்டம் (Mandatory One) சொல்கிறது. அந்த மொழியைச் சார்ந்தவர்களுக்கு வேலை நியமனம் இல்லாத காரணத்தால் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிற காரணத்தால் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை பிராந்திய மொழிகளாக இருக்கக் கூடிய தமிழ் போன்ற மொழிகளும் தெரியவில்லை. இதனால் அவர்கள் வேறு மொழியை பேசக்கூடிய நிலை ஏற்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

ரயில்வே
ரயில்வே

எனவே, தயவுகூர்ந்து அமைச்சருக்கு நான் விடுக்கிற வேண்டுகோள் apprenticeship act சட்டத்தின்படி வேலைவாய்ப்பில், தொழிற்பழகுநர் பயிற்சியில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனங்களை செய்ய வேண்டும். என்னுடைய தொகுதி ஒரு சுற்றுலாத்தலம், சிதம்பரம் என்பது மிகப்பெரிய உலகப்புகழ்பெற்ற சிவபெருமான் கோயில் உள்ள தலம். அங்கே ஏராளமானவர்கள் வந்து போகிறார்கள். ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி வரையில் வாரம் மூன்று நாள் ரயில் போக்குவரத்து இருக்கிறது. திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலை சிதம்பரம் தொகுதியிலே நாள்தோறும் பயணிகள் வந்து செல்கிற வகையில் அதை தினசரியாக மாற்ற வேண்டும்" என்று பேசினார்.

இதனிடையே, நாடோடி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக் கோரி அடுத்த வாரம் நாடாளுமன்ற விவாதத்தில் எடுக்க வேண்டுமென இன்று வலியுறுத்தியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

லட்டர்
லட்டர்

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ``நரிக்குறவர் என்றழைக்கப்படும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டுமென 1965-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட லோக்குர் கமிட்டி பரிந்துரைத்தது. நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக அரசியலமைப்புச் சட்ட திருத்தம் (பட்டியல் இனம் & பழங்குடியினர்) 2019 மசோதாவை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.