Published:Updated:

ஒன் பை டூ: தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி அவசியமா?

நாங்கள் ஒன்றும் இதைப் புதிதாகக் கேட்கவில்லை. 1971-76-ல் தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி தனிக்கொடி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

வன்னி அரசு, செய்தித் தொடர்பாளர், வி.சி.க

``தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை, அடையாளத்தை மீட்டெடுக்கத் தனிக்கொடி அவசியம்தான். அதுவும் தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் தேசிய இனங்களின் உரிமைகள், உணர்வுகள், அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழல் அதிகரித்திருக்கிறது. ‘ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு’ என இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் போக்குடன் ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டுவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வடஇந்தியர்களின் குடியேற்றம், வேலைவாய்ப்புகளில் ஆதிக்கம், இந்தித் திணிப்பு என தமிழ்த் தேசிய இனத்தின் அடையாள அழிப்பைச் செய்துவருகிறது பா.ஜ.க. இவற்றிலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கவே தனிக்கொடி கேட்கிறோம். மொழிவாரியாக தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர் 1-ம் தேதியைத் தமிழர் இறையாண்மை நாளாகக் கொண்டாடக் கேட்கிறோம். நாங்கள் தனித்த தேசிய இனம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

நாங்கள் ஒன்றும் இதைப் புதிதாகக் கேட்கவில்லை. 1971-76-ல் தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி தனிக்கொடி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். 2010-ல் தனிக்கொடி கேட்டு வி.சி.க மாநாடே நடத்தியது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதல்ல. நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறோம். இதைக் கேட்பதால் எங்களைப் பிரிவினைவாதிகள் என்கிறார்கள். பா.ஜ.க ஆளும் கர்நாடகாவுக்கு தனிக்கொடி இருக்கிறது. பா.ஜ.க அரசே அங்கு நவம்பர் 1-ம் தேதியை கர்நாடகா நாளாகக் கொண்டாடுகிறது. அப்படியென்றால், கர்நாடகா பா.ஜ.க-வினர் பிரிவினைவாதிகளா?’’

ஒன் பை டூ: தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி அவசியமா?
ஒன் பை டூ: தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி அவசியமா?

ராம.ஸ்ரீனிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி என்றால், ஏற்கெனவே இருக்கும் தேசியக்கொடிக்கு என்ன மரியாதை? இதை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோரிக்கைகளை வைக்காமல், ஏன் பா.ஜ.க ஆட்சியில் மட்டும் இப்படிப் பிரச்னை செய்கிறார்கள்? ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் உருவான நவம்பர் 1-ம் தேதியை அந்த மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், `கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’களை ஏன் நவம்பர் 1-ம் நாளுடன் சுருக்க வேண்டும்? நமக்கு எல்லா நாளுமே தமிழ்நாட்டின் திருநாள்தான்.

பா.ஜ.க எப்போதும் ‘ஒரே மொழி, ஒரே மதம்’ என்று பேசவில்லை... ‘ஒரே தேசம்’ என்று மட்டுமே பேசுகிறது. தமிழ் மொழியை, அடையாளத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் ஒரே தேசம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கட்சியைப் பதிவுசெய்தபோதும், பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோதும் ஒன்றும் பேசாதவர்கள், இப்போது `இந்தியா ஒரே நாடு அல்ல’ என்கிறார்கள். `கொங்கு நாடு’ என்ற வார்த்தை தவறாகப் பிரசுரமானபோது ‘தமிழ்நாட்டை பா.ஜ.க துண்டாடுகிறது’ என்று பொய்ப் பிரசாரம் செய்தவர்கள், இப்போது தனிக்கொடி கேட்பது ஏன்? இவர்கள் எப்போதும் தேசத்துக்கு எதிராகத்தான் பேசிவருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தனிக்கொடி கேட்கும் திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா அனைவருமே பிரிவினைவாத சக்திகள்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு