திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி கிழக்கு தொகுதியில், இரண்டாவது முறையாகக் களமிறங்குகிறார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். தி.மு.க சார்பில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜும், அ.ம.மு.க சார்பில் முன்னாள் அ.தி.மு.க கொறடா மனோகரனும் களமிறங்கியிருப்பதால் மும்முனைப் போட்டியால் தகிக்கிறது தொகுதி.
தி.மு.க வேட்பாளரான இனிகோ இருதயராஜ், சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபர். ‘இவர் வெற்றிபெற்றால் தொகுதிக்கு வருவாரா, எளிதாகச் சந்திக்க முடியுமா?’ என்பது போட்டியாளர்கள் வைக்கும் விமர்சனமாக இருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதால், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தி.மு.க-வினரிடையே எழுந்திருக்கிறது. தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக போஸ்டர்கள், விளம்பரங்கள் என்று கோடிகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார் இனிகோ இருதயராஜ். அதேசமயம், வருமான வரித்துறையின் கழுகுப் பார்வை தன்மீது விழுந்திருப்பதால் அவர் திணறுவதும் தெரிகிறது.


அ.ம.மு.க வேட்பாளராக மனோகரனின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே வெல்லமண்டி நடராஜனுக்கு பிரஷர் அதிகமாகிவிட்டதாம். மனோகரனிடம் கணக்குப்பிள்ளையாக இருந்தவர்தான் வெல்லமண்டி. பிற்பாடு அரசியலில் தனக்கென இடத்தைப் பிடித்த பிறகு, மனோகரனுக்கும் இவருக்கும் உரசல் அதிகமாகிவிட்டது. சமீபகாலமாக சசிகலாவை வெல்லமண்டி ஓவராக விமர்சனம் செய்வதால், அவருக்கு செக் வைப்பதற்காகவே மனோகரனை திருச்சி கிழக்கு வேட்பாளராக்கியதாம் அ.ம.மு.க தலைமை.
சோழிய வெள்ளாளர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியல் சமூகத்தினர் ஆகியோர் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னையால் சோழிய வெள்ளாளர்கள் ஓட்டுகளும், என்.ஆர்.சி பிரச்னையால் இஸ்லாமியர்கள் ஓட்டுகளும் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இல்லை என்பது வெல்லமண்டிக்கு மைனஸ்.

கிறிஸ்தவர்கள் மற்றும் தி.மு.க-வின் வாக்குவங்கியை மட்டுமே நம்பியிருக்கிறார் இனிகோ இருதயராஜ். கொறடாவாக இருந்த காலத்தில் தொகுதியில் ஓரளவு திட்டங்களை நிறைவேற்றியவர் என்பதால், மனோகரனின் முகம் நன்கு பரிச்சயமாகியிருக்கிறது. அ.தி.மு.க-வின் வாக்குகளை கணிசமாக அவர் பிரிப்பார் என்கிறார்கள்.
கட்சி நிர்வாகிகளுக்குப் பெரிதாக எதுவும் செய்யாதது, தன் மகன் ஜவஹர் கட்சி நிர்வாகிகளை ஏகவசனத்தில் பேசுவதைத் தடுக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் காலைச் சுற்றிய பாம்பாக இறுக்குகின்றன. தன் தந்தையை மீண்டும் எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என வெல்லமண்டியின் மகன் ஜவஹர் படாதபாடுபட்டாலும், பெரிதாக அதற்குப் பலன் கிடைக்கவில்லை. அதனால், கரன்சியை வாரியிறைத்து, வாக்குகளை அறுவடை செய்ய முயல்கிறது வெல்லமண்டி தரப்பு. மிகக் கடுமையாக களப்பணியாற்றினால் மட்டுமே வெல்லமண்டி நடராஜன் வெற்றியைப் பற்றி யோசிக்கவே முடியும் என்பதே இப்போதைய நிலவரம்.