Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: சீட் விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் ஆதிக்கம்?! - கொதிக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள்

அமைச்சர் வீரமணி
அமைச்சர் வீரமணி

``வீரமணியின் பரிந்துரைப் பட்டியலை கட்சித் தலைமை ஏற்கக் கூடாது. அவர் பேச்சில் தலைமை மயங்கிவிட்டால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல தொகுதிகள் கைநழுவிச் சென்றுவிடும்’’ என்று வேதனைப்படுகிறார்கள், அ.தி.மு.க நிர்வாகிகள்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. மேற்கிலுள்ள ஜோலார்பேட்டை தொகுதி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் கோட்டை. 16 வருடங்கள் மாவட்டச் செயலாளர், பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ., இரண்டாவது முறை அமைச்சர் என அதிகாரத்திலேயே தொடர்கிறார் வீரமணி. இதனால், சட்டமன்றத் தேர்தலில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் செல்வாக்கான மனிதனராகவும் அவர் வலம்வருகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க சார்பில் வீரமணியே மூன்றாவது முறையாகவும் களம் காணவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. வீரமணியை எதிர்த்து விருப்ப மனுகொடுக்க ஜோலார்பேட்டை அ.தி.மு.க-வில் யாருக்கும் தைரியமில்லை என்கிறார்கள் உள்விவரம் அறிந்த அ.தி.மு.க-வினர் சிலர்.

அமைச்சர் வீரமணி
அமைச்சர் வீரமணி

வீரமணி, சொந்த ஊரான ஜோலார்பேட்டையைத் தக்கவைத்துக்கொள்ள நினைப்பதில் தவறில்லை. அதேசமயம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளையும் கட்டுக்குள்வைத்திருக்கத் திட்டமிட்டு... வேட்பாளர் ரேஸிலுள்ள நிர்வாகிகளை ஓரங்கட்ட நினைப்பதுதான் தவறு என்று கொதிக்கிறார்கள், அ.தி.மு.க நிர்வாகிகள். எதிர்க்கட்சியான தி.மு.க தலைவர்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்ற விமர்சனமும் வீரமணிமீது வாசிக்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடவிருக்கும் காட்பாடித் தொகுதியில் செல்வாக்கான வேட்பாளர்களை முன்னிறுத்தாமல் தனக்கு விசுவாசமான முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ராமுவை வீரமணி பரிந்துரைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. காட்பாடி தொகுதியில் ராமுவுக்குச் செல்வாக்கில்லை. அ.தி.மு.க-வினரும் அவரை ஏற்கத் தயாராக இல்லை என்கிறார்கள்.

இதேபோல், அணைக்கட்டுத் தொகுதியில் புறநகர மாவட்டச் செயலாளர் வேலழகனைப் பரிந்துரை செய்திருக்கிறாராம் வீரமணி. ஆனால், அந்தத் தொகுதியை, கூட்டணியிலிருக்கும் பா.ம.க விட்டுத் தர மறுத்துவிட்டது. இருந்தாலும், வீரமணி தொடர்ந்து பிடிவாதமாக அணைக்கட்டுத் தொகுதியைக் கேட்டுவருகிறாராம். கே.வி.குப்பம் தனித் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதனுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், தனது டெண்டர் பணிகளை கவனித்துக்கொள்ளும் வேலூர் மாநகர மாவட்டச் துணைச் செயலாளர் ஜெயப்பிரகாசத்தின் சொந்தங்களைக் களமிறக்கத் திட்டமாம்.

2019-ல் இடைத்தேர்தலைச் சந்தித்த குடியாத்தம் தனித் தொகுதியில், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமியைப் பரிந்துரை செய்திருந்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும் என்கிறார்கள். ஆனால், தனக்கு விசுவாசமாக இருந்த ஒரே காரணத்தால், கஸ்பா மூர்த்தியை வேட்பாளராக நிறுத்தினார் வீரமணி. அதன் விளைவு குடியாத்தம் தொகுதியைத் தி.மு.க தட்டிச் சென்றது.

துரைமுருகனுடன் வீரமணி
துரைமுருகனுடன் வீரமணி

இதேபோல், ஆம்பூர் இடைத்தேர்தலிலும் தனக்கு விசுவாசமாக இருந்த ஜோதிராமலிங்க ராஜாவை வேட்பாளராகக் களமிறக்கியிருந்தார் வீரமணி. அங்கேயும் தி.மு.க வென்றது. இதே தவறை வீரமணி மீண்டும் செய்யப்பார்க்கிறார் என்கிறார்கள். இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த ஜோதிராமலிங்க ராஜாவை மீண்டும் ஆம்பூரில் களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பக்கத்துத் தொகுதியான வாணியம்பாடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுடையது. அதிகார மோதலால், நிலோபர் கபிலை வாணியம்பாடிக்குள்ளேயே அடக்கிவைத்திருக்கிறார் வீரமணி. நிலோபர் மீண்டும் சீட் கேட்பதை தட்டிக்கழிக்கும் வீரமணி, தன்னுடைய விசுவாசியான ஆலங்காயம் கிழக்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கோவி.சம்பத்குமாரைப் பரிந்துரை செய்திருக்கிறாராம்.

திருப்பத்தூரிலும் தன் புகழ்பாடும் நகரச் செயலாளர் டி.டி.குமாருக்கு சீட் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் வீரமணி. 2016 தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய டி.டி.குமாரை மீண்டும் நிறுத்தினால் சறுக்கல் ஏற்படும் என்கிறார்கள் அங்கிருக்கும் நிர்வாகிகள்.

ஆற்காடு தொகுதியில் வர்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளர் ஏ.வி.சாரதியை முன்னிறுத்துகிறார் வீரமணி. ராணிப்பேட்டை தொகுதியில், மாவட்ட அம்மா பேரவைப் பொருளாளர் எஸ்.எம்.சுகுமாரைப் பரிந்துரைத்திருக்கிறாராம். இருவருமே மக்கள் மத்தியில் செல்வாக்குடையவர்கள் என்பதால் கட்சியினரும் அதிருப்தி தெரிவிக்கவில்லை. அதேசமயம், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராக இருக்கும் அரக்கோணம் சிட்டிங் எம்.எல்.ஏ சு.ரவிக்கு எதிராகவும் உள்ளடி வேலை செய்கிறாராம் வீரமணி. சு.ரவி, இந்தத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார். மீண்டும் சு.ரவிக்கு சீட் கொடுத்தால் படுதோல்வி அடைந்துவிடுவார் என்று தலைமைக்குத் தவறான தகவல் கொடுத்திருக்கிறாராம் வீரமணி. இதைத் தெரிந்துகொண்ட சு.ரவி, `குறைந்தபட்சம் இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றிபெற்றுவிடுவேன்’ என்று தலைமையிடம் வாக்கு கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதனால், கடுப்பான வீரமணி அரக்கோணத்திலேயே அமர்ந்திருக்கும் தனது உதவியாளர் மூலமாக சு.ரவிக்கு எதிராக உள்ளடி வேலைகளைச் செய்துவருகிறார் என்கிறது, அ.தி.மு.க வட்டாரம்.

சிறப்பு அலங்காரத்தில் வீரமணி
சிறப்பு அலங்காரத்தில் வீரமணி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 2019-ல் இடைத்தேர்தலைச் சந்தித்த மூன்று தொகுதிகளில் சோளிங்கரில் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற்றது. சிட்டிங் எம்.எல்.ஏ சம்பத் வீரமணியின் விசுவாசி என்பதால் சோளிங்கரில் மீண்டும் அவருக்கே சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதேசமயம், கூட்டணியில் இருக்கும் பா.ம.க-வும் சோளிங்கரைக் கேட்கிறது.

இப்படி உள்ளடி வேலை பார்த்து தனது ஆதரவாளர்களை மட்டுமே முன்னிறுத்துவதால், வீரமணிக்கு ஜாக்பாட் லாபம் இருக்கிறது என்கிறார்கள். நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``அடுத்த முறை அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமருகிறதோ, இல்லையோ... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கோலோச்ச நினைக்கிறார் வீரமணி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய மூன்று தொகுதி எம்.எல்.ஏ-க்களும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு கொடுத்தனர். அதனால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

அந்த மூன்று பேரும் அப்போது தினகரன் பக்கம் சென்றதற்குக் காரணம், அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தி இல்லை. வீரமணி மீதான அதிருப்தி மட்டுமே காரணம். இதேநிலை, நாளை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே வீரமணி காய்நகர்த்திவருகிறார். வீரமணியின் பரிந்துரைப் பட்டியலைத் தலைமை ஏற்கக் கூடாது. சரியான வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்த வேண்டும். பொய்யைக்கூட நம்பும்படி வீரமணி பேசுவார். அவர் பேச்சில் தலைமை மயங்கிவிட்டால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல தொகுதிகள் கைநழுவிச்சென்றுவிடும்’’ என்று வேதனைப்படுகிறார்கள், அ.தி.மு.க நிர்வாகிகள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு