Published:Updated:

`கட்சிரீதியாகவும் மாவட்டத்தைப் பிரித்துவிடுங்கள்!’- தலைமையிடம் முரண்டுபிடிக்கும் வேலூர் அ.தி.மு.க

அமைப்புரீதியாக, தி.மு.க-வைப் போன்று அ.தி.மு.க-விலும் வேலூர் மாவட்டத்தை மூன்றாகவோ நான்காகவோ பிரிக்க வேண்டுமெனத் தலைமையிடம் முரண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

கடலூர் மாவட்டத்தைக் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து கட்சிப் பணிகளைச் செய்துவந்தனர் அ.தி.மு.க நிர்வாகிகள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், சமீபத்தில் கிழக்கு-மேற்கு, மத்தியப் பகுதி எனக் கடலூரை மூன்றாகப் பிரித்து மாவட்டச் செயலாளர்களையும் நியமித்தனர். 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் செய்ய வேண்டுமென தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நிர்வாக சீர்திருத்தத்துக்காக வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஆனால், அமைப்புரீதியாக அ.தி.மு.க-வில் வேலூர் கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என்று இரண்டாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதிலும், மேற்கு மாவட்டச் செயலாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இருக்கிறார். கிழக்கு மாவட்டச் செயலாளராக அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி இருக்கிறார்.

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

` அவர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பங்கு கொடுத்தால், காலம் காலமாகக் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளைப் பற்றி கவலையில்லையா..இந்த விவகாரம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்' என்று தலைமையின் கதவுகளைத் தட்டுகிறார்கள், வேலூர் அ.தி.மு.க-வினர்.

`பணம் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் சீட்டா?!' -அமைச்சர் வீரமணி பேச்சால் கொதிக்கும் வேலூர் அ.தி.மு.க

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``தி.மு.க-வைப் பொறுத்தவரை வேலூர் மாநகரம், மத்திய, கிழக்கு, மேற்கு என நான்கு மாவட்டங்களாகப் பிரித்து கட்சிப் பணிகளைச் செய்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க-விலும் உருவாக்க வேண்டுமெனப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். 2012-ல் வேலூரையும் ராணிப்பேட்டையையும் இணைத்து, மாநகர மாவட்டம் என்று உருவாக்கி, மாவட்டச் செயலாளரையும் நியமித்தனர். 

அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி
அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி

பின்னாளில், மாநகர மாவட்டத்தைக் கலைத்துவிட்டனர். கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் மட்டுமே செயல்படுகின்றன. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல, சுமார் 220 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மேற்கில் உள்ள திருப்பத்தூரிலிருந்தும் கிழக்கில் உள்ள அரக்கோணத்திலிருந்தும் மாவட்டத் தலைநகருக்கு வர, சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமைப்புரீதியிலும்  அ.தி.மு.க-விலும் வேலூரைப் பிரிக்க வேண்டும். இதுதொடர்பாக, கட்சித் தலைமை விரைந்து முடிவெடுக்க வேண்டும்’’ என்கின்றனர் கொந்தளிப்புடன்.