Published:Updated:

`பணம் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் சீட்டா?!' -அமைச்சர் வீரமணி பேச்சால் கொதிக்கும் வேலூர் அ.தி.மு.க

`` உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்’’ எனப் பேசியிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி.

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பை அ.தி.மு.க அமைச்சர்கள் ஏற்படுத்திவருகிறார்கள். அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பகுதிச் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்திவருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியும் தேர்தல் தொடர்பான வேலைகளில் பம்பரமாகச் சுழல ஆரம்பித்திருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காரணம், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் தி.மு.க வென்றது. வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளையும் தி.மு.க-வே தட்டிப் பறித்தது. உள்ளூர் அமைச்சராகவும் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் தேர்தல் பணிப் பொறுப்பாளராக அமைச்சர் வீரமணியை நியமித்திருந்தது அ.தி.மு.க தலைமை. தொடர் தோல்விகளைத் தழுவியதால் வீரமணி மீது தலைமை கொதிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலிலாவது, அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் வீரமணி. எனினும், உள்ளாட்சி தேர்தலுக்கான வீரமணியின் வியூகமும் அவரின் பேச்சுகளும் அ.தி.மு.க நிர்வாகிகளை மட்டுமன்றி களப்பணியாற்றும் தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அமைச்சரின் செயல்பாடுகள் காரணமாக, `தேர்தல் பணியில் ஆர்வம் காட்டப்போவதில்லை' என்றும் அவர்கள் தகிக்கின்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அண்மையில் அ.தி.மு.க-வின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் வீரமணி, ‘‘ ந.ம்மிடம் ஒற்றுமையில்லாததுதான் தொடர் தோல்விக்குக் காரணம். பதவிக்காகச் சண்டை போடாமல் விட்டுக்கொடுங்கள். இன்னும் ஓரிரு நாள்களில் விருப்ப மனு அளிக்கும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நீங்கள் தனித்தனியாக, `இவரைத்தான் ஊராட்சி தலைவராகவும் கவுன்சிலர் வேட்பாளராகவும் போட வேண்டும்' என்று பட்டியலைக் கொடுக்காதீர்கள். சிபாரிசில் ‘சீட்’ வாங்கிவிடலாம்' என்று கனவு காணாதீர்கள்.

கட்சியின் எதிர்காலம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதில்தான் இருக்கிறது. தலைமை யாரைச் சுட்டிக் காட்டுகிறதோ, அவர்தான் வேட்பாளர். இது, நமக்கான பலப் பரீட்சை. பொருளாதாரத்தில் நல்ல நிலையிலும் பொதுமக்களிடம் மரியாதையும் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். அவரவர் பகுதிகளில் நடக்கும் காதுகுத்து, திருமணம், துக்க வீடுகளுக்குச் செல்லுங்கள். ஏதாவது நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டுமென்றால் இரண்டு நாள் முன்பாகவே சொன்னால் கலந்துகொள்வேன்’’ எனப் பேசி வருகிறார்.

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

அமைச்சரின் பேச்சு தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், ‘‘பணக்காரர்களுக்கு மட்டும்தான் சீட்டு என்கிறார் அமைச்சர். அப்படியெனில், கட்சிக்காக உழைத்தவர்களிடம் பணம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிடுவார்களா... வேலூர் மாநகராட்சியில் உள்ள முன்னாள் கவுன்சிலர்கள் பலர் மீது முறைகேடு புகார்களும் குற்ற வழக்குகளும் உள்ளன. ரௌடியிசத்தில் உள்ள அந்த நபர்களின் வாரிசுகளுக்கு சீட் தரவும் முடிவுசெய்துள்ளனர். எங்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லையென்றால், தலைமையகத்தை முற்றுகையிடுவோம்’’ எனக் கொந்தளித்தனர்.