Published:Updated:

`வேலூர் ஆட்சியர் 12 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்!’ - அம்முண்டி ஊராட்சி வழக்கில் உயர் நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அம்முண்டி கிராம மக்கள் வெளியிட்ட அறிவிப்பு
அம்முண்டி கிராம மக்கள் வெளியிட்ட அறிவிப்பு

‘‘அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்வதற்கே பட்டியல் சமூகத்தில் பெண்கள் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தோம். இதைக் கேட்ட நீதிபதி, 12 வாரங்களுக்குள்ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்’’ என்கிறார் பாமக வழக்கறிஞர் பாலு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்திலிருக்கும் அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஊர்கூடி தேர்தலைப் புறக்கணிக்க தீர்மானம் போட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கிராம மக்கள், வீடுகள்தோறும் கறுப்புக்கொடி கட்டியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வேட்புமனுத் தாக்கல் தேதியும் முடிவடைந்த நிலையில், இதுவரை அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை.

வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

‘‘இந்த ஊராட்சியில் மொத்தம் 2,045 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவற்றில், பட்டியல் சமூக வாக்குகள் மூன்றுதான் இருக்கின்றன. அவர்களும் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களிலும் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மட்டுமே உள்ளனர். மூன்று பேரையும் தவிர்த்துவிட்டால் மீதமுள்ள 2,042 வாக்குகள் பொதுப்பிரிவினருடையவை. இந்த ஊராட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொதுப்பிரிவினருக்குத்தான் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுவருகிறது.

பெண்களில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருப்போம். ஆனால் இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கிற பட்டியல் சமூகத்தினருக்கு ஊராட்சித் தலைவர் பதவியை ஒதுக்கியிருப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’’ என்கிறார்கள் அம்முண்டி கிராம மக்கள். இந்தநிலையில், நேற்று விசாரணைக்கு வந்த அம்முண்டி கிராமத்தினர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

‘‘அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு மாற்றக்கோரிய மனுதாரரின் மனுவுக்கு 12 வாரங்களில், அதாவது மூன்று மாதங்களுக்குள் வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. வழக்கை முன்னெடுத்து நடத்தும் பா.ம.க வழக்கறிஞர் பாலு கூறுகையில், ‘‘அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்வதற்கே பட்டியல் சமூகத்தில் பெண்கள் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தோம். இதைக் கேட்ட நீதிபதி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

அதுவரை அம்முண்டி ஊராட்சியில் மட்டும் தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன என்கிறார்கள் அதிகாரிகள்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ‘‘உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற பின் தேர்தல் ஆணையத்துக்குப் பதிலளிக்கப்படும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு