Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: சமூகக் கணக்கு போடும் திமுக; உற்சாகம் குறையாத அதிமுக! - வேலூர் மாநகராட்சி யாருக்கு?!

வேலூர் மாநகராட்சி

`துரைமுருகனின் பல்வேறு விவகாரங்களை கவனிக்கும் வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதாதான் மேயர்’ என்ற தகவலை உறுதிசெய்கிறார்கள் வேலூர் தி.மு.க-வினர். அதிமுக தரப்பிலும், உற்சாகத்துக்குக் குறைவே இல்லை... வேலூர் மாநகராட்சி யாருக்கு?!

உள்ளாட்சி ரேஸ்: சமூகக் கணக்கு போடும் திமுக; உற்சாகம் குறையாத அதிமுக! - வேலூர் மாநகராட்சி யாருக்கு?!

`துரைமுருகனின் பல்வேறு விவகாரங்களை கவனிக்கும் வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதாதான் மேயர்’ என்ற தகவலை உறுதிசெய்கிறார்கள் வேலூர் தி.மு.க-வினர். அதிமுக தரப்பிலும், உற்சாகத்துக்குக் குறைவே இல்லை... வேலூர் மாநகராட்சி யாருக்கு?!

Published:Updated:
வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகராட்சி

வரலாற்றுச் சிறப்புகள் அதிகமுள்ள நகரம், வேலூர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியை பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூர் சுல்தான் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். 1606 தொடங்கி 1672 வரையில் விஜயநகரப் பேரரசின் தலைமையிடமாகவும் செயல்பட்டிருக்கிறது.

1806-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி நள்ளிரவில், வேலூர் கோட்டையில் வெடித்த சிப்பாய் புரட்சிக் கலகம்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்தாக அமைந்தது. கி.பி 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் பிரமாண்டமான அகழியில் நீர் வற்றியதே இல்லை. கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக, கம்பீரமாக வீற்றிருக்கும் வேலூர் கோட்டையைப் பாதுக்காக்க வேலூரைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளில் சிறிய கோட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வீரம் விளைந்த இம்மண்ணை உள்ளாட்சித் தேர்தலில் யார் ஆளப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்?!

வேலூர்
வேலூர்

2008-ல் தரம் உயர்த்தப்பட்ட வேலூர் மாநகராட்சி இரண்டாவது முறை தேர்தலைச் சந்திக்கிறது. கடந்த முறை பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வேலூர் மேயர் பதவி, இந்த முறை பெண்கள் பொதுப்பிரிவு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. இவை, நிர்வாகரீதியாக நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மண்டலமும் 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி, மாநகராட்சியின் 60 வார்டுகளும் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குள்தான் வருகின்றன. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க-வைச் சார்ந்தவர்கள். இதனால், வேலூர் மாநகராட்சியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பது தி.மு.க-வின் கணக்கு.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

திமுக

அதிலும், தி.மு.க-வின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் சொந்த மாவட்டம் என்பதால் தேர்தல் பணிகளில் தி.மு.க-வினர் சுறுசுறுப்பாக ஓடுகிறார்கள். இந்த நிலையில், வாக்குப்பதிவு நடப்பதற்குள்ளாகவே 7, 8 ஆகிய இரண்டு வார்டுகளையும் போட்டியின்றி தி.மு.க வேட்பாளர்கள் கைப்பற்றிவிட்டனர். 7-வது வார்டில் புஷ்பலதா வன்னியராஜா, 8-வது வார்டில் சுனில்குமார் ஆகியோர்தான் வெற்றிபெற்ற வேட்பாளர்கள். இந்த இரு வார்டுகளுமே துரைமுருகனின் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள்தான் இருக்கின்றன. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இருவருமே துரைமுருகனின் காட்பாடி வீட்டுக்குள் வலம்வரும் முக்கியப் புள்ளிகள்தான். இந்த இரண்டு வார்டுகளைத் தவிர்த்து, மீதமுள்ள 58 வார்டுகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேயர், துணை மேயர், நான்கு மண்டலக் குழுக்களின் தலைவர் பதவிகளைக் குறிவைத்துக் காய்நகர்த்தும் தி.மு.க வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் வார்டுகளில் வைட்டமின் `ப’-வை அள்ளிவீசுகிறார்களாம். கவுன்சிலரானால் போதும் என்று நினைக்கும் வேட்பாளர்கள் அதற்கும் கொஞ்சம் குறைவாகக் கொடுக்கிறார்கள்.

அதேசமயம், மேயர் பதவி ரேஸில் `வன்னியர் Vs முதலியார்’ என தி.மு.க வேட்பாளர்கள் சமூகரீதியாக இரண்டு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கிறார்கள். வன்னியர் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் துரைமுருகனின் பல்வேறு விவகாரங்களை கவனிக்கும் அவரது சமூகத்தைச் சேர்ந்த வன்னியராஜா, பூஞ்சோலை சீனிவாசன் இருவரும் தங்கள் மனைவிகளுக்காக மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள்.

துரைமுருகனுடன் வன்னியராஜாவும், அவர் மனைவியும்...
துரைமுருகனுடன் வன்னியராஜாவும், அவர் மனைவியும்...

வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதா 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றிபெற்றுவிட்டார். இதனால், மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் மட்டுமே வன்னியராஜா கவனம் செலுத்துகிறார். மாநகராட்சியாக வேலூர் தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு தாராபடவேடு பகுதி, நகராட்சியாக இருந்தது. அதன் நகரமன்றத் தலைவராகவும் புஷ்பலதா பதவி வகித்துள்ளார். இந்த முறை மேயர் ரேஸிலும் புஷ்பலதா முந்துகிறார்.

துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனும் தன் மனைவி விமலாவை மேயராக்கக் காய்நகர்த்துகிறார். மாநகராட்சி இரண்டாவது வார்டில் தன் மனைவியைக் களமிறக்கியிருக்கிறார் பூஞ்சோலை சீனிவாசன்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூஞ்சோலை சீனிவாசனின் சிமென்ட் குடோனிலிருந்துதான் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதை வைத்துத்தான் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்துசெய்யப்பட்டது. இந்தப் பிரச்னையிலிருந்து எம்.பி கதிர் ஆனந்த் மீண்டு வர உதவியர் பூஞ்சோலை சீனிவாசன். இதற்கு நன்றிக் கடனாகத்தான் அவர் மேயர் பதவியைக் கேட்கிறாராம்.

வன்னியராஜா, பூஞ்சோலை சீனிவாசன் இருவரில் யாரை சமாதானம் செய்வது என்று துரைமுருகன் யோசித்துவருகிறாராம். ``யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே மாங்கனி” என்ற முருகனின் புராணக்கதையைப்போல, அமைச்சர் துரை‘முருகனும்’ மேயர் பதவிக்காக ஏதேனும் போட்டி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று நையாண்டி செய்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

தி.மு.க பெண் வேட்பாளர் சுஜாதா
தி.மு.க பெண் வேட்பாளர் சுஜாதா

துரைமுருகன் வீட்டில் வன்னியர் சமூக நிர்வாகிகளின் பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்க... சத்தமின்றி தனது வீட்டில் முதலியார் சமூக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன். தன் சமூகத்தைச் சார்ந்த சுஜாதாவை மேயராக்க கார்த்திகேயன் விரும்புகிறார். 31-வது வார்டில் களமிறங்கியுள்ள சுஜாதாவை, முதலியார் சமூகப் பிரதிநிதிகளே ஏற்கத் தயாராக இல்லை என்கிறார்கள். வன்னியரா... முதலியாரா என்ற மேயர் பஞ்சாயத்துத் தொடர்பாக இறுதி ஒரு முடிவையும் எடுத்திருக்கிறதாம் துரைமுருகன் தரப்பு.

மேயர் பதவியை வன்னியர் சமூகப் பெண் கவுன்சிலருக்கு ஒதுக்குவதாகவும், துணை மேயர் பதவியில் முதலியார் சமூக ஆண் கவுன்சிலரை அமரவைப்பது என்பதுதான் அந்த முடிவாம். அப்படிப் பார்க்கும்போது, வன்னியராஜாவின் மனைவி புஷ்பலதாதான் `மேயர்’ வேட்பாளர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்த முடிவுக்குப் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, துணை மேயர், நான்கு மண்டலக்குழுத் தலைவர்கள் பதவிகளுக்கும் தி.மு.க-வில் கடும் போட்டி நிலவுகிறது. 8-வது வார்டில் போட்டியின்றி வெற்றிபெற்ற வேட்பாளர் சுனில்குமார் கடந்த முறையும் கவுன்சிலராக இருந்தவர். அப்போது, மாநகராட்சியின் முதலாவது மண்டலக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்த முறையும் முதலாவது மண்டலக்குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து, துரைமுருகனிடம் காய்நகர்த்துவதாகச் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இதேபோல, சத்துவாச்சாரிப் பகுதியை உள்ளடக்கிய இரண்டாவது மண்டலக்குழுத் தலைவர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

24-வது வார்டு வேட்பாளர் சுதாகர்
24-வது வார்டு வேட்பாளர் சுதாகர்

தி.மு.க சார்பில் 22-வது வார்டில் போட்டியிடும் ஆர்.பி.ஏழுமலை, 24-வது வார்டில் போட்டியிடும் சுதாகர் இருவரும் இரண்டாவது மண்டலக்குழுத் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்கள். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் இரண்டாவது மண்டலக்குழுத் தலைவர் பதவியில் அமரவைக்க வேண்டும் என்ற குரலும் சத்துவாச்சாரி பகுதி தி.மு.க-வில் ஒலிக்கிறது. இதனால், 24-வது வார்டு தி.மு.க வேட்பாளர் சுதாகருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, மூன்றாவது, நான்காவது மண்டலக்குழுத் தலைவர் பதவிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மாவட்டச் செயலாளர், எம்.பி., எம்.எல்.ஏ-வின் ஆதரவுபெற்ற வேட்பாளர்களே துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர் பதவிகளுக்கான ரேஸில் முந்துகிறார்கள்.

அதிமுக:

வேலூர் மாநகராட்சியில் 50 + என்ற கணக்கில் மொத்த வார்டுகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துடன் தி.மு.க காய்நகர்த்துகிறது. தி.மு.க-வின் நிலவரம் இப்படியிருக்க, அ.தி.மு.க-வும் கொஞ்சம் தெம்போடுதான் தேர்தலை எதிர்கொள்கிறது. அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வேலூருக்கு வந்து தேர்தல் யுக்திகளை வகுத்து, உற்சாகமாகப் பணியாற்றும்படி சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

`தி.மு.க-வுக்குச் சரிக்குச் சமமாக மாமன்ற இருக்கைகளில் அமருவோம்’ என்றும் சபதம் எடுத்து, அ.தி.மு.க காய்நகர்த்துகிறது. சற்று தயக்கம், தோல்வி பயம் இருந்தாலும் உற்சாகம் குறையாமல் அ.தி.மு.க வேட்பாளர்களும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். 38-வது வார்டில் போட்டியிடும் மூத்த நிர்வாகி உமா விஜயகுமார், 45-வது வார்டில் களமிறங்கியிருக்கும் இளம் வேட்பாளர் அஷ்மிதா, 50-வது வார்டில் போட்டியிடும் அருணா விஜயகுமார் மூவரையும் மேயர் வேட்பாளர்கள் ரேஸில் முன்மொழிகிறது அ.தி.மு.க.

அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு
அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு

பிரச்னைகளும் சவால்களும்!

யார் வந்தாலும், வென்றாலும், சென்றாலும் தங்கள் பகுதி பிரச்னைகளுக்குத் தீர்வுத் தர வேண்டும் என்று கையை உயர்த்திக்காட்டுகிறார்கள் வேலூர் மாநகர வாக்காளர்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைவில் முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பணிகள் சுணக்கமாக நடைபெறுவதால், வெளியூர் பேருந்துகள், நகரப் பேருந்துகள், ஆட்டோக்கள் பழைய பேருந்து நிலையத்திலேயே ‘ஈ’ மொய்ப்பதைப்போல இட நெருக்கடியில் தவிக்கின்றன. வாகன நெரிசலால், தினம் தினம் வேலூர் மாநகரின் மையப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது வரை மூடாமல் குண்டும் குழியுமாக விடப்பட்டுள்ளன. மாநகரின் குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் சாலைகளும் படுமோசமான நிலையில் பொத்தல் பொத்தலாக இருக்கின்றன. மக்கள் அதிகம் வசிக்கும் பல வார்டுகளில் பகுதி நேர ரேஷன் கடைகள்கூட இல்லை. பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டாவும் வழங்கப்படவில்லை. மூலக்கொல்லை போன்ற மாநகரின் குடியிருப்புப் பகுதியில் தார் கலவைத் தொழிற்சாலை, ஜல்லி அரவைத் தொழிற்சாலைகள், கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றை தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி

அரசு மருத்துவமனைகளில், முறையான மருத்துவ சேவைக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள் வேலூர் மக்கள். மாநகருக்குள் சி.எம்.சி., நறுவீ போன்ற பெரிய மருத்துவமனைகள் உட்பட தனியார் மருத்துவமனைகள் மட்டுமே தரத்துடன் செயல்படுகின்றன. அடுக்கம்பாறையிலிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமெனில் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். எனவே, மாநகருக்குள் இருக்கும் பென்ட்லண்ட் பழைய அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் என்கிறார்கள்.

அதேபோல, சார்பனாமேடு, சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களே வசிக்கிறார்கள். இவர்களால் போர்வெல் அமைத்து குடிநீர் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள முடியாது. 15 நாள்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீரைத் தேக்கிவைத்து பயன்படுத்தவும் முடியவில்லை என்கிறார்கள். எனவே, தினந்தோறும் இல்லையென்றாலும், இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேலூர் மாநகரில் குற்றச் சம்பவங்களும், சட்டவிரோதச் செயல்களும் அதிகரித்துள்ளன. முன்பெல்லாம் குட்கா, பான் மசாலாவைக்கூட மறைத்து வைத்துத்தான் விற்பனை செய்தார்கள். இப்போது, வீதிக்கு வீதி கஞ்சா விற்பனை வெளிப்படையாகவே நடக்கிறது. மதுவும் பிளாக்கில் விற்கப்படுகிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டும். சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற திட்டங்களை மாநகருக்குள் கொண்டு வர மாமன்றம் திறம்படச் செயல்பட வேண்டும் என்பதே வேலூர் மக்களின் எதிர்ப்பார்ப்பு!