Published:Updated:

வேலூர்: எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - லைட்டை அணைத்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்

இருட்டில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்கள்

வேலூர் மாமன்ற அரங்குக்குள் உள்ளிருப்புப் போராட்டம் செய்த எதிர்க்கட்சி கவுன்சிலர்களை வெளியேற்றுவதற்காக லைட்டை அணைத்து, கதவை மூடிய தி.மு.க கவுன்சிலர்களின் செயல், பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் சுஜாதா தலைமையில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிராமசபையைப்போல பகுதி சபை என்ற ‘ஏரியா சபா'வை உருவாக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த ஏரியா சபாவுக்கான தலைவராகவும், அழைப்பினராகவும் மாமன்ற கவுன்சிலர் செயல்படவிருக்கிறார். அவர் தலைமையில் அந்தந்தப் பகுதிகளில் 6 முதல் 9 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் வார்டு கமிட்டிகளும் உருவாக்கப்படவிருக்கின்றன. மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டு கமிட்டிக்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மேயர் சுஜாதா
மேயர் சுஜாதா

வேலூர் மாநகராட்சியைப் பொறுத்தமட்டில் 60 வார்டுகள் இருக்கின்றன. இவை நிர்வாக வசதிக்காக 15 வார்டுகளை உள்ளடக்கிய நான்கு மண்டலங்களாகவும் செயல்பட்டுவருகின்றன. இந்த நான்கு மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 419 கமிட்டி உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை மேயர் சுஜாதா வாசித்தபோது, அவற்றை மேலும் முறையாக விவரிக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஏழு பேரும், பா.ஜ.க கவுன்சிலர் ஒருவரும் இணைந்து மாமன்ற அரங்கத்துக்குள்ளேயே தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த மேயர் சுஜாதா, அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது எனக் கோபத்தை வெளிப்படுத்திவிட்டு, அங்கிருந்து வேக வேகமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனாலும், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து உள்ளேயே அமர்ந்து போராட்டம் செய்தனர். அப்போது, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததோடு, செய்தி சேகரித்த செய்தியாளர்களையும் வெளியே செல்லுமாறு விரட்டினர்.

இருட்டில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்கள்
இருட்டில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்கள்

பின்னர், எதிர்க்கட்சி கவுன்சிலர்களை வெளியேற்றுவதற்காக மாநகராட்சிப் பணியாளர்களைக்கொண்டு மின்விளக்கை அணைக்கச் செய்தனர். பின்னர், கதவையும் இழுத்து மூடினர். அரங்குக்குள் இருள் சூழ்ந்தபோதும் போராட்டத்தைக் கைவிடாமல், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நீண்ட நேரமாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உள்ளேயே அமர்ந்திருந்தனர். பின்னர் எழுந்து சென்று மாநகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டனர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.