Published:Updated:

“கல்யாணராமன் ஒரு நாலாந்தர அரசியல்வாதி!”

வேலூர் இப்ராஹிம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலூர் இப்ராஹிம்

வெடிக்கிறார் வேலூர் இப்ராஹிம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிய பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. இதற்கிடையே, அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக, மேட்டுப்பாளையம் செல்ல முயன்ற பா.ஜ.க ஆதரவாளரும், ‘தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத்’ அமைப்பின் தலைவருமான வேலூர் இப்ராஹிம் காவல் துறையினரால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்டு விடுதலையாகியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘ `கல்யாணராமனைக் கைதுசெய்ததுபோல், வேலூர் இப்ராஹிமையும் கைதுசெய்ய வேண்டும்’ என இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?’’

‘‘அமீரின் அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது. கல்யாணராமன் பேசியிருந்த அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவே இல்லை. கல்யாணராமனின் மோசமான அந்தப் பேச்சை நான் கடுமையாகக் கண்டித்திருக்கிறேன். இஸ்லாமிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பெரும்பான்மையான இந்து மக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால், அமீர் போன்றவர்கள் இப்படி அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை விடுகிறார்கள்.’’

‘‘மனு ஸ்மிருதி பிரச்னையில் திருமாவளவனை நீங்கள் கண்டிக்கலாம்... கல்யாணராமனைக் கண்டித்து அமீர் அறிக்கை வெளியிட்டால் அது அரைவேக்காட்டுத்தனமா?’’

‘‘மனு தர்மம் குறித்து திருமாவளவன் பேசியபோது, வி.சி.க., தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த யாருமே அவரின் பேச்சைக் கண்டிக்கவில்லை. ஆனால், கல்யாணராமனை பா.ஜ.க கண்டிக்கிறது. இன்னும் நிறைய தலைவர்கள் எனக்கே போன் செய்து தங்கள் வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள். வி.சி.க., தி.மு.கபோல பா.ஜ.க இரட்டை வேடம் போடவில்லை!’’

‘‘மனு ஸ்மிருதி பிரச்னையின்போது, திருமாவளவனுக்கு சேலை அனுப்பும் போராட்டம் நடத்தினீர்களே... பெண்கள் அணிகிற அந்த உடை இழிவானது என்கிறீர்களா?’’

‘‘ `இந்து மத உணர்வுகளை திருமாவளவன் இனியும் இழிவுபடுத்திப் பேசினால் அவருக்கு சேலை அணிவிப்பேன்’ என்று நான் சொன்னது... என் கோபத்தின் வெளிப்பாடு! கட்சியின் உறுப்பினர் ஒருவர் இப்படிப் பேசியிருந்தால், பட்டும்படாமல் நான் போயிருக்கலாம். ஆனால், வி.சி.க என்ற கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் ஒன்றும் கல்யாணராமன் போன்று ஒரு நாலாந்தர அரசியல்வாதி அல்ல. எனவே, திருமாவளவனின் பேச்சைக் கண்டிக்கும் நோக்கில், அப்படிப் பேச நேரிட்டுவிட்டது. மற்றபடி, அதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது; பெண்களை மதிப்பவன் நான்.’’

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

‘‘மதுரையில் பா.ஜ.க-வினர் நடத்திய பொங்கல் ஊர்வலத்தில் கலவரம் நடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?’’

‘‘மதுரை திருப்பாலையில் பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு அணியினர் நடத்திய ‘நம்ம ஊர் பொங்கல்’ நிகழ்ச்சி, இஸ்லாமியர் பகுதி வழியாக ஊர்வலமாகக் கடந்து செல்லும்போது, ஓர் இஸ்லாமியப் பெண்மணிதான் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மீது செருப்பை வீசியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஊர்வலமாகச் செல்வது தவறில்லை; பா.ஜ.க ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பும் இல்லை. முறையாகக் காவல்துறை அனுமதி பெற்றுத்தான் ஊர்வலமும் நடைபெற்றிருக்கிறது. மதக் கலவரத்தைத் தூண்ட நினைப்பவர்கள் எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ மற்றும் வி.சி.க-வைச் சேர்ந்தவர்கள்தான். தி.மு.க வாக்குவங்கிக்காக இவர்கள் நடத்திவரும் அரசியலை மக்களிடம் எடுத்துச் சொல்கிற வேலையைத்தான் நான் செய்துவருகிறேன்.’’

‘‘தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத், இஸ்லாமியர்களின் பாதுகாப்பைவிடவும் இந்துக்களின் பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்துகிறதே?’’

‘‘பொதுவாக இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்கு மட்டுமே குரல் கொடுப்பார்கள். ஆனால், நான் இஸ்லாமிய மக்களோடு இந்துக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறேன். இப்படிப் பேசுபவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இதுவரை இல்லை. எனவே, ‘வேலூர் இப்ராஹிம் விதிவிலக்காகப் பேசுகிறார்’ என்றொரு பிம்பம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை நான் சந்தோஷமாகத்தான் பார்க்கிறேன்.’’

‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக வேலூர் இப்ராஹிம் நிதி திரட்டிவருவதை எப்படிப் புரிந்துகொள்வது?’’

‘‘அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டது. முடிந்துபோன அந்த விஷயத்தைப் பற்றி இனி நாம் பேசக் கூடாது. அடுத்து, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ஓர் இஸ்லாமியர் நிதி வசூல் செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. இப்படி நிதி வசூல் செய்வது, இந்துக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துமா என்றால், அதற்கும் வாய்ப்பில்லை. அடுத்து, அதே அயோத்தியில் மசூதி கட்டுகிறபோது அதற்கும் நான் நிதி திரட்டுவேன். இந்துக்களேகூட நிதியும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் நல்ல மாற்றம்தானே!’’

‘‘பா.ஜ.க-விடம் பணம் பெற்றுக்கொண்டுதான் நீங்கள் செயல்படுவதாகப் புகார் சொல்கிறார்களே..?’’

‘‘கருத்தியல்ரீதியாக நான் பேசிவருவதால், என் பேச்சை மட்டுப்படுத்துவதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இப்போதும் மழை பெய்தால் ஒழுகுகிற ஓட்டு வீட்டில்தான் குடியிருக்கிறேன். காலையில்கூட பழைய சோறு சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பினேன். கண்ணியமாக ஆடை அணிந்தாலும் ஏழ்மை நிலையில்தான் இருக்கிறேன். என் நோக்கம் பணம் அல்ல... இரண்டு சமூகங்களும் நல்லிணக்கத்தோடு ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பது மட்டுமே!’’