Published:Updated:

`ஜெயலலிதா சொன்னார்; எடப்பாடி கண்டுகொள்ளவில்லை!’ - மூன்றாகப் பிரித்தும் கோபம் அடங்காத வேலூர்

வேலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்களை இப்போதைய ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையம்
வேலூர் புதிய பேருந்து நிலையம்

`வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கான உயிர்நாடியாக இருக்கும் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்' என்றார் ஜெயலலிதா. `இதுவரை அந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லைக்கூட நடவில்லை' எனக் கொந்தளிக்கிறார்கள் வேலூர்வாசிகள்.

`சோளிங்கரில் மலை உச்சியில் வீற்றிருக்கும் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று தரிசிக்க ரோப் கார் திட்டம் நிறைவேற்றப்படும்' என்றார் ஜெயலலிதா. அந்தப் பணிகளும் தொடங்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டன. சமீபத்தில், ரோப் கார் பணியை ஆய்வு செய்த கலெக்டர் சண்முக சுந்தரம், `` இன்னும் 6 மாதங்களில் `ரோப்கார்’ திட்டம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்’’ என்றார். 

வேலூர் பாலாறு
வேலூர் பாலாறு

வேலூர் புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக உறுதியளித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கான இடத்தை ஆளும்கட்சியினரே அபகரித்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்படியிருக்க, மத்திய அரசின் `ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப் பணிகளையும் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான சரியான திட்டமிடலும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளும் பல்வேறு பிரச்னைகளால் தடுமாறிக் கிடக்கிறது.

` துரைமுருகனிடம் இவ்வளவு பாசம் தேவைதானா?' - அமைச்சர் வீரமணியால் கொந்தளிக்கும் வேலூர் அ.தி.மு.க

`தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று சொன்னதோடு சரி. இப்போதைய ஆட்சியாளர்களும் நதிநீர் இணைப்புத் திட்டத்தையே மறந்துவிட்டனர். `சத்துவாச்சாரியில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல மேம்பாலம் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியானது.

பலமுறை அதற்காக ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனாலும், பூமி பூஜையுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகளை கைவிட்டுவிட்டனர். சாலை மேம்பாடு திட்டங்களும் கிடப்பில் கிடக்கின்றன. காவிரி குடிநீர் திட்டத்தைக் கிராமங்களுக்கு கொண்டு செல்லவும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டித்தருவதாக கூறிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்

பேரணாம்பட்டு பத்தலப்பல்லி அணையின் திட்ட கட்டுமானப் பணியும் பல்வேறு முறைகேடுகளால் கிடப்பில் கிடக்கிறது. அரக்கோணத்தில் `ரிங் ரோடு’ திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ராணிப்பேட்டையில் சிறு தொழில்கள் வளர்ச்சிபெற சிறப்புத் திட்டங்களை அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

திண்டிவனம்-நகரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளை முழு முயற்சியுடன் எடுத்து முடிப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். `அரியூரில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை பரிசீலனை செய்து திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், அமிர்தி வனப் பூங்கா பகுதியை வளப்படுத்தி சுற்றுலாத் தலமாக்கப்படும்' என்றும் அறிவித்திருந்தார். இவற்றில் எந்தப் பணிகளையும் இப்போதைய ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

` அரசியல்வாதிகள்தாம் அவருடைய காலை உணவு!' - தேர்தல் ஆணையத்தின் முகத்தையே மாற்றிய டி.என்.சேஷன்

காட்பாடியில், 1984-ல் தமிழ்நாடு அரசின் `டெல்’ வெடிமருந்து நிறுவனத்தை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தொடங்கினார். லாபகரமாக இயங்கிவந்த அந்த நிறுவனத்தை நலிவடையச் செய்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இழுத்து மூடிவிட்டனர்.

இதுகுறித்து டெல் நிறுவன பொதுமேலாளர் (பொறுப்பு) எல்.சி.மணியிடம் கேட்டபோது, `` பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் எலெக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனம், இந்திய பாதுகாப்புத் துறையின் ஓர் அங்கம். அதனுடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளோம். பாரத் நிறுவனம், ஏவுகணை தொடர்பான வெடிபொருள்களை தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. மீண்டும் டெல் நிறுவனம் புத்துயிர் பெரும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

காட்பாடியில் மூடிக் கிடக்கும் `டெல்’ வெடிமருந்து நிறுவனம்
காட்பாடியில் மூடிக் கிடக்கும் `டெல்’ வெடிமருந்து நிறுவனம்

இப்படிப்பட்ட சூழலில்தான், நிர்வாக சீர்திருத்தத்துக்காக வேலூர் மாவட்டத்தைப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று சுதந்திர தினவிழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

மாவட்டத்தின் வளர்ச்சிக்கான செய்தியாக இருந்தாலும், `சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாகப் பிரிக்கப் போகிறார்களா... வருவாய் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்போகிறார்களா?' என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருவதுதான் சோகம்.