Published:Updated:

`மய்யத்தில் மனக்கசப்பு; அ.தி.மு.க-வில் அரவணைப்பு!’ - வேலூர் பிரமுகர் உற்சாகம்

வேலூர் சுரேஷ்
வேலூர் சுரேஷ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து நீக்கப்பட்ட வேலூர் பிரமுகரை, தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு முக்கியப் பொறுப்பு வழங்கியிருக்கிறது, அ.தி.மு.க தலைமை.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மத்திய வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஆர்.சுரேஷை ஜூன் 10-ம் தேதி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது, அந்தக் கட்சித் தலைமை. `அவருடன் மக்கள் நீதி மய்யத்தினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் தலைமை அறிவுறுத்தியிருந்தது. சுரேஷ்மீது ‘என்ன காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்ற விவரத்தை மக்கள் நீதி மய்யம் இதுவரை வெளியிடவில்லை.

சுரேஷ் குறித்து ம.நீ.ம முன்பு வெளியிட்ட டேட்டா
சுரேஷ் குறித்து ம.நீ.ம முன்பு வெளியிட்ட டேட்டா

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர்தான் சுரேஷ்.

இதனிடையே, சுரேஷ் அ.தி.மு.க-வில் இணையப்போவதாக செய்தி வெளியானது. `இந்தச் செய்தியின் தாக்கம்தான் நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம்’ என்றும் சுரேஷ் தரப்பில் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்புவுடன் சுரேஷ் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அப்பு மூலமாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் அறிமுகமும் சுரேஷுக்குக் கிடைத்தது.

முதல்வருடன் மாவட்டச் செயலாளர் அப்பு
முதல்வருடன் மாவட்டச் செயலாளர் அப்பு

இந்த நிலையில், அப்புவின் ஆசீர்வாதத்தால் வேலூர் மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். சுரேஷிடமே, இது தொடர்பாகப் பேசினோம். ``‘அப்பா, அம்மா உட்பட என் குடும்பமே அ.தி.மு.க-வைச் சேர்ந்தவங்கதான். நான் கமல்ஹாசனின் ரசிகன் என்பதால், அவர் தொடங்கிய கட்சியில் இணைந்து பணியாற்றினேன். நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தார்கள். அதன் பிறகு, ரெண்டு மூணு விஷயத்துல மனக்கசப்பு ஏற்பட்டுச்சு. அதனால, அ.தி.மு.க-வுக்கு வந்துட்டேன். மாவட்டச் செயலாளர் அப்புவும், அமைச்சர் வீரமணியும் என்னைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துறாங்க. அ.தி.மு.க-வுல எனக்கு ஆதரவும் இருக்கு. அம்மாவின் தொண்டனாக அ.தி.மு.க-வில் பயணிப்பதே எனக்குப் பெருமைதான்’’ என்றார்.

சுரேஷுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து, மாவட்டச் செயலாளர் அப்புவிடம் கேட்டபோது, "மக்கள் நீதி மய்யத்தில் உரிய அங்கீகாரம் சுரேஷுக்கு கிடைக்கவில்லை. அ.தி.மு.க-வுக்கு வந்தவர் தகவல் தொழில்நுட்ப பதவிக்கான நேர்காணலில் கலந்துகொண்டார். நன்கு படித்தவர், திறமைசாலி, பொறுப்பானவர், பண்பானவர் என்பதால் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதே தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு