Published:Updated:

``திமுக அரசு, சொல்வதையெல்லாம் கேட்டுக்கொள்கிறது; நடவடிக்கைதான் எடுப்பதில்லை” - வேல்முருகன்

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒரு நேர்காணல்...!

Published:Updated:

``திமுக அரசு, சொல்வதையெல்லாம் கேட்டுக்கொள்கிறது; நடவடிக்கைதான் எடுப்பதில்லை” - வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒரு நேர்காணல்...!

வேல்முருகன்

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க மிகத் தீவிரமாகப் பணியாற்றியது. ஆனால், அதன் கூட்டணியில் இருக்கும் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் ஈரோடு பக்கமே செல்லவில்லை. அதோடு நின்றுவிடாமல் தி.மு.க-வுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் போராட்டம் நடத்துவது, தி.மு.க அரசை விமர்சிப்பது என இயங்கிக்கொண்டிருக்கிறார். அப்படியான ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

வேல்முருகன்
வேல்முருகன்

``தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறீர்கள், இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாதா?”

“ ’வேல்முருகனின் அமைப்பு ஈரோட்டில் வலுவாக இருக்கிறது. அவரின் ஆதரவு இருந்தால் நன்றாக இருக்கும்’ என அமைச்சர் முத்துசாமி சொல்ல, அதையொட்டி, ஈரோடு இடைத்தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தேர்தல் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் அழைத்தபோதும் என்னைக் கலந்துகொள்ளச் சொல்லி முதல்வர் வலியுறுத்தியபோதும் ‘என்னால் வரவே முடியாது; என மறுத்து விட்டேன். இளங்கோவனும் என்னைச் சந்திப்பதற்கான நேரம் கேட்டிருந்தார். ஆனால், அதையும் நான் தவிர்த்துவிட்டேன். ஈழ விவகாரத்தில் காங்கிரஸின் செயல்மீது எனக்குக் கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. இப்போது மட்டுமல்ல எப்போதும் கை சின்னத்துக்கோ காங்கிரஸ் வேட்பாளர்களுக்கோ குறிப்பாக இளங்கோவனுக்கோ பிரசாரம் செய்ய மாட்டேன். இதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன். என்னுடைய கொள்கை இதுதான் எனத் தெளிவாகச் சொல்லித்தான் கூட்டணிக்குள் நான் வந்தேன். என்னுடைய சுயம் சார்ந்த முடிவுகளோடுதான் நான் நடந்துகொள்வேன். வேல்முருகன் யார் என்று தலைவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களின் தொண்டர்களுக்குத் தெரியாது.”

“வேல்முருகன் செய்வது எல்லாம் தான் யார் என அடையாளப்படுத்திக் கொள்வதற்காகத்தானா?”

“அப்படியில்லை. தமிழ்நாடு அரசியலில் எனக்கான இடம் எப்போதும் இருக்கும். 2007-08-லிருந்து இதுவரை எந்த வேலையையும் என்னைப் பாராட்ட வேண்டும், திட்டுவார்கள் என்பதற்காகச் செய்வதில்லை. ஆனால், விஜயகாந்துக்குக் கிடைத்த விளம்பரமோ சீமானுக்குக் கிடைத்த வெளிச்சமோ என் சமூகம் சார்ந்த ஊடகங்களோ எனக்கு இல்லாததால் என்னைப் பெரியளவில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதற்காக நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை.”

பரந்தூர் விமான நிலையம் - பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையம் - பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு

“பரந்தூரில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வுன் ஒன்று என விமர்சனம் செய்திருக்கிறீர்களே ஏன்?”

“அதிகாரிகளை வைத்துதான் அப்படிச் சொல்கிறேன். அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் புகார்களுக்குள்ளான, அதுவும் இன்றைய முதல்வர் பெயரிட்டுச் சொன்ன பல அதிகாரிகள், ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் இடம்பெற்றவர்கள் தி.மு.க ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளில் நீடிக்கிறார்கள். அதை வைத்துதான் பேசினேன்.”

“தமிழ்நாட்டுக்கான அதிகாரிகளை வைத்துதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்’ என விகடன் நேர்காணலில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் சொல்லியிருந்தாரே?”

“முற்று முதலும் தவறான கருத்து. பிறமாநில அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருவதே சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குத்தான். அவர்களுக்கு ஏன் தமிழ்நாட்டின் உயரிய பதவிகளைக் கொடுக்க வேண்டும். ஜெயலலிதா இருந்த காலத்தில் காவல்துறையின் ஐந்து முக்கியப் பொறுப்புகளில் வட மாநிலத்தவர்கள் இருந்தார்கள். அவர்களை மாற்ற வேண்டுமெனச் சண்டையிட்டு அதைச் செய்தேன். பிற மாநிலத்தில் தமிழ்நாட்டு அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒதுங்க இடம்கூட இல்லாத ஏதோவொரு பொறுப்பைத்தான் அந்தந்த மாநில அரசுகள் வழங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டு அதிகாரிகள் வேண்டாம் என இங்கிருக்கும் அரசியல் தலைவர்களும் விரும்புவதில்லை. வடமாநிலத்தவர் இருந்தால் நன்றாக ஊழல் செய்யலாம். அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். தமிழ்நாட்டு அதிகாரிகள் அதை வெளியில் சொல்லிவிடுவார்கள் என்ற பயம்தான் இதற்குக் காரணம். மற்றபடி அவர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.”

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறதே?”

“இது குறித்து சட்டமன்றத்தில் பல முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறேன். முதல்வரும் விளக்கமளித்தார். கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரும் உறுதி கொடுத்திருக்கிறார். ஆனால், இதுவரை நெறிப்படுத்தவில்லை. அதுதான் ஏனென்று தெரியவில்லை. தி.மு.க அரசைப் பொறுத்தவரை சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்கிறது; நடவடிக்கைதான் எடுப்பதில்லை”