Published:Updated:

காஷ்மீர்... இனி என்னவாகும்?

"'மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 விழுக்காடு வேலைவாய்ப்பு' என்று குஜராத்திலேயே தனிச்சட்டம் இருக்கிறதே... அதை, பிரதமர் மோடி நீக்குவாரா?" - வேல்முருகன் கேள்வி.

காஷ்மீர்
காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பி.ஜே.பி அரசு, ரத்துசெய்திருக்கும் விவகாரத்தில், ஆதரவும் எதிர்ப்புமாக நாடு முழுவதும் காரசார விமர்சனங்கள் அலையடித்துவருகின்றன.

வேல்முருகன்
வேல்முருகன்

இந்நிலையில், 'காஷ்மீர் வழியில், நாளை தமிழகத்தையும் மத்திய பி.ஜே.பி அரசு துண்டாடப்போகிறது' என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். அவரைச் சந்தித்துப் பேசினோம்...

சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதை சம்பந்தப்பட்ட மாநில மக்களே வரவேற்கும்போது, நீங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

லடாக்
லடாக்

அப்படி ஒரு தோற்றம் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஊடகம் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் சொல்வதை வைத்து, மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது. பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கிறார்களா, இல்லையா என்பதைப் பொது வாக்கெடுப்பு மூலம்தானே நிரூபிக்க முடியும்?

மற்ற மாநிலங்களுக்கு இல்லாத விசேஷ சலுகை, 'ஜம்மு -காஷ்மீருக்கு மட்டும் ஏன்' என்ற கேள்வி நியாயம்தானே...

காஷ்மீர்
காஷ்மீர்

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு காலத்திலேயே, 'ஜம்மு- காஷ்மீர் மக்கள் விரும்பாத வரை, அம்மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்படாது. சுயாட்சிபெற்ற மாநிலமாகத் தொடர்ந்து இயங்கும்' என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஏன், இப்படியொரு ஒப்பந்தம், அதன் பின்னணி என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள, இந்திய வரலாற்றைப் பற்றி நீங்கள் படித்தறிய வேண்டும்.

அடுத்ததாக, வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட மாநிலங்களில் வேலைவாய்ப்பு, நிலஉரிமை, சமூகநீதி உள்ளிட்ட விஷயங்களில் அந்தந்த மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக, தனிப்பட்ட சட்டதிட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன. அவ்வளவு ஏன்... 'மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 விழுக்காடு வேலைவாய்ப்பு' என்று குஜராத்திலேயே தனிச்சட்டம் இருக்கிறதே... அதை, பிரதமர் மோடி நீக்குவாரா?

இப்படியோர் அவசர நடவடிக்கையை மத்திய பி.ஜே.பி அரசு எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள், காஷ்மீரை அடிப்படையாக வைத்து பக்கத்து நாடுகளும் மிரட்டுகின்றன. அதனால், இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீரை ஆக்கிக்கொண்டால், எல்லைப் பிரச்னை உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் இந்தியாவுக்குள் வந்துவிடும் என்று மத்திய பி.ஜே.பி அரசு, வெளியில் சொல்கிறது.

ஆனால் உண்மையில், மத்திய பி.ஜே.பி அரசு நாடு முழுக்க செயல்படுத்திவரும் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளும் நாடாளுமன்றத்தில் இவர்கள் இயற்றுகிற சட்டங்களும் ஜம்மு-காஷ்மீரில் செல்லுபடியாகவில்லையே என்ற ஆதங்கம்தான் பின்னணியில் இருக்கிறது.

சிறப்பு அந்தஸ்தினால் பின்தங்கியிருந்த ஜம்மு-காஷ்மீர், இனிவரும் காலங்களில் நல்ல முன்னேற்றம் அடையும் என்கிறார்களே?

லடாக்
லடாக்

அதானி, அம்பானி போன்ற பெரும் பண முதலாளிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும்... மக்களுக்கு அல்ல. ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்காக சுற்றுலாத்தளம் அமைப்போம், தொழில் வசதிகளைப் பெருக்குவோம் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இவையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வளர்ச்சியாகத்தானே இருக்கும். அங்குள்ள மக்களுக்கான நலத்திட்டங்கள் என்று எதை அறிவித்திருக்கிறார்கள்?

ஜம்மு-காஷ்மீர் போல நாளை தமிழகமும் துண்டாடப்படும் என்று எதனடிப்படையில் எச்சரிக்கிறீர்கள்?

வேல்முருகன்
வேல்முருகன்

சமூக நீதியின் அடிப்படையில்தான் தமிழகத்தைத் துண்டாடுவார்கள். இப்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்துவருகிறது. இதையும் ஒரு புதிய சட்டம் கொண்டுவந்து ரத்துசெய்ய முயற்சி செய்வார்கள். ஏற்கெனவே, ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம்வரை போனவர்கள்தானே இவர்கள்.

இப்படியெல்லாம் நடக்கலாம் என்று யூகிக்கிறீர்களா?

கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வு

யூகமெல்லாம் இல்லை. இப்போதும் அதுதானே நடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வை தமிழகத்துக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். வெறுமனே ஒரு மருத்துவக் கல்லூரியும் 100 மருத்துவ மாணவர்களையும்கொண்ட ஒரு மாநிலத்தோடு, 25 மருத்துவக் கல்லூரிகளையும் 25 ஆயிரம் மருத்துவர்களையும் கொண்ட தமிழகத்தை ஒப்பிடுவது அநியாயம் இல்லையா?

உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தாத சூழ்நிலையில், முதன்முறையாக தென்னிந்தியாவில் நடைமுறைப்படுத்திவிட்டார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில், 10 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையில்தான் ஆள் தேர்வு செய்திருக்கிறார்கள். அதேபோல், அஞ்சல் பணியிடங்களுக்கான ஆள் தேர்விலும் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, தமிழகத்தின் தனித்த அடையாளமாக இருக்கக்கூடிய பண்பாட்டை அழிப்பார்கள். பூம்புகார் அகழ்வாராய்ச்சியின் முடிவை ஏன் இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள்? கீழடி அகழ்வாராய்ச்சியை ஏன் நிறுத்திவைத்திருக்கிறார்கள்? அதன் இயக்குநரை ஏன் மாற்றம்செய்தார்கள்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் தமிழகத்தைத் துண்டாடும் முயற்சி இல்லையா?