Published:Updated:

முந்திக்கொண்ட வேலுமணி... எடப்பாடியைக் கோபப்படுத்திய மழைநீர் வீடியோ!

மழைநீர் சேகரிப்பு பற்றி எடப்பாடி வீடியோ வெளியிட இருந்த நிலையில், அவருக்கு முன்பே அமைச்சர் வேலுமணி வெளியிட்ட வீடியோவால் முதல்வர் தரப்பு கோபம் அடைந்திருக்கிறது.

எடப்பாடியுடன் வேலுமணி
எடப்பாடியுடன் வேலுமணி ( விகடன் )

மழைநீர் சேகரிப்பு பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ``வணக்கம்ங்க... நான் வேலுமணி பேசுகிறேன் !'' எனத் தொடங்கும் அந்த வீடியோ 57 விநாடிகள் ஓடுகிறது.

``இறைவன் கொடுத்த கொடை மழை. அதை அனைவரும் சேகரிக்க வேண்டும். அம்மாவின் அரசை வழிநடத்தும் அண்ணன் முதல்வர் எடப்பாடி, மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியுள்ளார். இனி பெய்கின்ற ஒரு துளி மழை நீரைக்கூட வீணாக்கக் கூடாது. சவாலாக எடுத்து இதைச் செயல்படுத்துவோம். மழைநீரை சேமிப்போம் நமக்காக நாட்டுக்காக நாளைக்காக'' என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வேலுமணி.

மழைநீர் சேகரிப்பு வீடியோவில் வேலுமணி
மழைநீர் சேகரிப்பு வீடியோவில் வேலுமணி

மழைநீர் சேகரிப்பை ஒரு இயக்கமாக ஆரம்பித்து, எல்லா கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கியவர் ஜெயலலிதா. அதைப் பற்றி வேலுமணி வீடியோவில் சொல்லவில்லை. ``ஜெயலலிதாவின் சாதனை திட்டத்தைச் சொல்லாமல், வீடியோ வெளியிட்டிருக்கிறார் வேலுமணி'' எனப் புலம்புகிறார்கள் கட்சியினர். ``ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், அவரின் சாதனையைக் குறிப்பிடாமல் வேலுமணியால் இப்படி வீடியோ வெளியிட்டிருக்க முடியுமா?'' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

ரத்தத்தின் ரத்தங்கள் நிலை இப்படியென்றால், சமூக ஆர்வலர்கள் வேறொரு கருத்தை வைக்கிறார்கள். ``வீட்டில் விழும் மழையை சேகரிக்கச் சொல்லும் வேலுமணி, வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் விழும் மழையை, மழைநீர் வடிகால் கால்வாய் மூலம் கடலுக்கு அனுப்பிவிட்டு, மழைநீரை சேகரிக்கச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது?'' எனக் கேள்வி எழுப்புகிறார்கள். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் நடக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வாசிக்கப்படுகின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
விகடன்

மழைக்கால அவசரப் பணி என்னும் பெயரில் மழைநீர் வடிகால் அமைப்பதில் 750 கோடி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்‍கம் குற்றச்சாட்டு எழுப்பியது. சிட்லப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாகக் கேள்வி எழுப்பிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் எல்லாம் நடந்தது. ``மழைநீர் சேகரிப்பு செய்யாமல் அரசு, மழைநீர் வடிகால் அமைப்பை ஏன் மேற்கொள்கிறது. மக்களுக்கு அறிவுரை சொல்லும் அரசு, ஏன் மழைநீரை சேகரிக்க ஏரிகளைத் தூர்வாரவில்லை. புதிய ஏரிகளை அமைக்க முயற்சி செய்யவில்லை'' என்றெல்லாம் கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒரு இடத்தில் முதல்வரின் பெயரை அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டாலும்கூட அவரின் போட்டோவைக்கூட வேலுமணி பேசும் வீடியோ பின்னணியில் வைக்கவில்லை.