Published:Updated:

`சுறுசுறுப்பாக உழைத்தார்..!’ - நிதித்துறைக்கு மன்மோகன் சிங்கை பரிந்துரைத்த வெங்கைய நாயுடு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதிய பதவியில் நியமனம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பரிந்துரைத்துள்ளார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவரை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு புதிய பதவியில் நியமனம் செய்துள்ளார். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிவுரை அளிக்கவும் கொள்கை வடிவிலான செயல்பாடுகள் குறித்து விவாதித்து ஆலோசனை கூறவும் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் கட்சி பாகுபாடின்றி நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை மாநிலங்களவை சபாநாயகராகப் பதவி வகிப்பவர்கள் நியமிக்கலாம். அந்த வகையில்தான் தற்போது மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கைய நாயுடு மன்மோகன் சிங்கை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்க பரிந்துரைத்துள்ளார்.

இதற்கு முன் இந்தப் பதவியில் இருந்த மன்மோகனின் சகாவும் அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திக்விஜய் சிங், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் இந்தப் பதவி வகிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்குமுன்பும் இந்தப் பதவியில் இருந்துள்ளார்.

திக்விஜய் சிங்
திக்விஜய் சிங்

முந்தைய பதவிக்காலத்தின்போது பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய சிக்கல்கள் குறித்து நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முக்கியமான அறிவுரைகளை வழங்கியது. அப்போது மன்மோகன் சிங் மிகவும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். தற்போதும் நாட்டின் நிதிச்சூழல் குறித்து பல்வேறு யூகங்கள் பேசப்பட்டுவருகிறது. இதனால் இந்தச் சூழ்நிலையில் மன்மோகன் சிங் மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளது நிதி வல்லுநர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.