Published:Updated:

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு; உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சியில் மிஸ் ஆகிறாரா கீதா ஜீவன்?!

கீதா ஜீவன்

அமைச்சர் கீதா ஜீவன், அவர் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு; உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சியில் மிஸ் ஆகிறாரா கீதா ஜீவன்?!

அமைச்சர் கீதா ஜீவன், அவர் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது.

Published:Updated:
கீதா ஜீவன்

 தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நாளை (14-ம் தேதி) அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றே வெளியாகியது. உதயநிதி, அமைச்சராகப் பொறுப்பேற்கும் நாள் தி.மு.க-வினரைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. உதயநிதி, அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சென்னையில் முகாமிட்டிருக்கின்றனர்ர். 

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் அமைச்சராகப் பதவி வகித்து வரும் கீதா ஜீவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. கீதா ஜீவனின் தந்தையும், 30 ஆண்டுக்காலம் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளராக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவருமான என்.பெரியசாமி, கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை  தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அந்த காலகட்டத்தில் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2,31,87,000 அளவுக்கு சொத்து சேர்த்ததாக, தி.மு.க ஆட்சிக்குப் பிறகான கடந்த 2002-ல் அ.தி.மு.க ஆட்சியில் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் 6 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். 2003, ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவராக என்.பெரியசாமி சேர்க்கப்பட்டார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

இரண்டாவதாக அவரின் மனைவி எபினேசர், மூன்றாவதாக  மூத்த மகன் ராஜா, நான்காவதாக இளைய மகன் ஜெகன் (தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர்), ஐந்தாவதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், ஆறாவதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தூத்துக்குடி  தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி, கடந்த 2017, மே 26-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இருப்பினும், அவரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. 

இதற்கிடையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் கீதா ஜீவன். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார் கீதா ஜீவன். ஆனால், சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான  காரணத்தை தெரிவிக்காததாலும், தன்னுடைய வருமானத்தில் சொத்துகளை வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாததைக் காரணம் காட்டியும், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க இயலாது எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்த நிலையில், நாளை (14-ம் தேதி) தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி இந்த வழக்கில் தீர்ப்பினை அளிக்கவிருக்கிறார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

இந்த நிலையில், நீதிமன்றத்தில் கீதா ஜீவன், அவரின் தாய், சகோதரர்கள், கணவர் உள்ளிட்டோருடன் ஆஜராக இருப்பதால், உதயநிதி அமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை செல்லாமல் தூத்துக்குடி, போல்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலேயே இருக்கிறார் கீதா ஜீவன். 19 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக இருப்பதால் தூத்துக்குடி தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.