Published:Updated:

விரைவில் அமைச்சரவை இலாகா மாற்றம்... லிஸ்ட்டில் எந்தெந்த அமைச்சர்கள்?

பழனிவேல் தியாகராஜன் குறித்துத் தன்னிடம் புகார் வாசித்த சீனியர்களிடம், 'அவர் சிறப்பாகத்தான் செயல்படுறார். அவரை ஏன் மாத்தணும்?' என்று ஒற்றைவரியில் அவர்களை ஆஃப் செய்திருக்கிறார் முதல்வர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல் அமைச்சரவை இலாகா மாற்றத்துக்குத் தயாராகிறதாம் ஸ்டாலின் அரசு. அமைச்சர்களின் செயல்பாடு, உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் இந்த மாற்றங்களுக்கு கோட்டை தயாராவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த மாற்றத்தில் எந்தெந்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படவிருக்கின்றன, புதியவர்கள் யாரேனும் அமைச்சரவையில் சேர்க்கப்படவிருக்கிறார்களா என்பது குறித்து தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தோம்.

முதல்வர்   ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த தலைவர் ஒருவர், ``ஆட்சி அமைத்தவுடனேயே அமைச்சரவையை முதல் ஆறு மாதங்களுக்குள் மாற்றியமைப்பது என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர். இந்த முடிவுக்கு எதிர்பார்த்த துறைகள் கிடைக்காத சீனியர்களின் அதிருப்தியும் ஒரு காரணம். அமைச்சர்களின் துறைரீதியிலான செயல்பாடுகள் குறித்து மாதத்துக்கு ஒருமுறை முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பிவந்தது. தவிர, கட்சியினரிடமிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டன. இதனடிப்படையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த சில நாள்களில் அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறார் முதல்வர். இந்த மாற்றத்தில் புதியவர்கள் யாரும் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், சில அமைச்சர்களிடம் கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவும், சிலர் வேறு துறைகளுக்கு மாற்றப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சேகர்பாபு: அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர்; அறநிலையத்துறை அமைச்சர்!-துறை ஒதுக்கப்பட்டதன் பின்னணி!

அமைச்சரவையில் தனக்குரிய மரியாதை தரப்படவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி மன வருத்தத்தில் இருந்தார். இதை முதல்வரிடமே நேரடியாகக் கூறிவிட்டார். இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி வசமிருக்கும் மின்சாரத்துறையை ஐ.பெரியசாமிக்குக் கூடுதல் பொறுப்பாக அளிக்கத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை மட்டும் செந்தில் பாலாஜி வசமிருக்கும். அதேபோல, அமைச்சர் துரைமுருகனும் வருத்ததில் இருக்கிறார். அவரைச் சாந்தமாக்க, அமைச்சர் எ.வ.வேலுவிடமிருக்கும் பொதுப்பணித்துறையை துரைமுருகனுக்குக் கூடுதல் பொறுப்பாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையை மட்டும் எ.வ.வேலு கவனித்தால் போதும் என்று தீர்மானித்திருக்கிறார் முதல்வர்.

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை மாற்றிவிட்டு, அவரிடத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை கொண்டுவர சீனியர்கள் சிலர் முயன்றனர். அதற்கு முதல்வர் மறுத்துவிட்டார். 'பழனிவேல் தியாகராஜன் சிறப்பாகத்தான் செயல்படுறார். அவரை ஏன் மாத்தணும்?' என்று ஒற்றைவரியில் சினியர்களை ஆஃப் செய்துவிட்டார் முதல்வர். வெள்ளை அறிக்கை வெளியிட்டு, தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை தற்சமயம் நிறைவேற்ற முடியாததற்குச் சரியான காரணத்தை பழனிவேல் தியாகராஜன் வெளிப்படுத்தியதால், அவர்மீது நல்ல அபிப்ராயம் முதல்வருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரைப்போல முதல்வர் மனதில் இடம்பிடித்திருக்கும் மற்றொருவர் இந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

தி.மு.க ஆட்சி அமைந்தவுடனேயே, கோயில் நிலங்களை மீட்பது, கோயில் சொத்துகளை இணையதளத்தில் பதிவேற்றியது, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கி பணியமர்த்தியது என சேகர் பாபு காட்டிய அதிரடியால், தி.மு.க அரசின் இமேஜ் உயர்ந்தது. 'இந்தத் துறையில் எந்தத் தப்பும் நடக்கக் கூடாது' என்று கெடுபிடி காட்டும் சேகர் பாபு, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வாகனத்தைக்கூட இதுவரை பயன்படுத்தவில்லை. இதெல்லாம் முதல்வரின் மனதைத் தொட்டிருப்பதால், சேகர் பாபுவுக்கு கூடுதல் பொறுப்பாக ஏதாவது ஒரு 'பவர்ஃபுல்' துறையை ஒதுக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீதான முதல்வரின் பாசம்; கடுப்பில் சீனியர் அமைச்சர்கள்!

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு நிகழ்வின்போது, சபாநாயகர் அப்பாவுவும் முதல்வரும் சகஜமாகப் பேசிக்கொண்டனர். அப்போது, 'திருநெல்வேலி மாவட்டத்துக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படலைனு கட்சிக்காரங்க என்கிட்ட சொல்றாங்களே. நீங்க என்ன நினைக்குறீங்க?' என்று கேட்டிருக்கிறார் முதல்வர். அதற்கு சபாநாயகர் அப்பாவு, 'அமைச்சராக இருக்கறவங்க தன் துறை சார்ந்த திட்டங்களை அவங்க அவங்க மாவட்டத்துல கொண்டு வர முடியும். திருநெல்வேலி மாவட்டத்துல இருந்து சபாநாயகரா நான் வந்திருக்கேன். என்னால என்ன செய்ய முடியுமோ, அதை என் மாவட்டத்துக்குச் செய்றேன். உங்ககிட்ட வருத்தப்பட்ட மாதிரி என்கிட்டயும் கட்சிக்காரங்க வருத்தப்பட்டது உண்மைதான்' என்றிருக்கிறார். இவர்களின் உரையாடலை வைத்து, அப்பாவு அமைச்சராகப்போகிறார் என அவரின் ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கு.பிச்சாண்டி சபாநாயகராகவும், சின்னசேலம் எம்.எல்.ஏ உதயசூரியன் துணை சபாநாயகராகவும் நியமிக்கப்படவிருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால், இதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏற்கெனவே மனோ தங்கராஜ், கீதா ஜீவன் என கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சராகியிருக்கும் நிலையில், அப்பாவுவும் அமைச்சராக வாய்ப்பு குறைவு.

அப்பாவு
அப்பாவு

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன் ஆகியோரின் துறைரீதியிலான செயல்பாடுகள் திருப்தியில்லை என உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருக்கிறது. இதனடிப்படையில், அனிதா வசமிருக்கும் மீன்வளத்துறையை மட்டும் பிரித்து வேறொருவருக்கு அளிக்க முதல்வர் தீர்மானித்திருக்கிறார். மதிவேந்தன் கையிலிருக்கும் சுற்றுலாத்துறை வேறொருவருக்கு அளிக்கப்பட்டு, மதிவேந்தன் டம்மி ஆக்கப்படலாம். போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு வேறு முக்கியமான துறைகளை மாற்றிக் கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் அமைச்சரவையைத் துடிப்புடன் செயல்படுத்த உதவும் என்று முதல்வர் கருதுகிறார். சில அமைச்சர்களின் மனவருத்தங்களும் இந்த இலாகா மாற்றத்தோடு சரியாகிவிடும் என கட்சியினரும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்படப் போகும் தகவல் லீக் ஆனதால், அமைச்சர்களிடையே இப்போதே பதற்றம் தொற்றிக்கொண்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை பலரின் தூக்கமும் பறிபோய்விடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு