அரசியல்
அலசல்
Published:Updated:

பன்வாரிலால் வீசிய குண்டு... வெடிக்கும் துணைவேந்தர் நியமன சர்ச்சை!

பன்வாரிலால் புரோஹித்
பிரீமியம் ஸ்டோரி
News
பன்வாரிலால் புரோஹித்

அரசு விதிப்படி, ஒருவரது உடல்நிலை அரசு வேலை செய்வதற்குத் தகுதி இல்லாமல் இருந்தால்தான் மருத்துவ விடுப்பு கொடுப்பார்கள்.

“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி நாற்பது முதல் ஐம்பது கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது” என்று தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குண்டு வீசியதையடுத்து, ‘நாகை மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு’ என்ற சர்ச்சை வெடித்திருக்கிறது!

இது குறித்துப் பேசுகிற நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவரப்புள்ளிகள், “துணைவேந்தர் தேர்வுக்கு மெரிட் அடிப்படையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து மூன்று பேர் இறுதிசெய்யப்படுவார்கள். அந்த மூன்று பேரை கவர்னர் நேரில் அழைத்து, பர்சனல் இன்டராக்‌ஷன் நடத்தி அதில் ஒருவரைத் துணைவேந்தராக நியமிப்பது வழக்கம்.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

2020-ல் நடந்த மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தருக்கான இறுதிப் பட்டியலில் டாக்டர் ஜெயசேகரன், டாக்டர் ஜவகர் ஆபிரகாம், தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் இருந்த டாக்டர் ஜி.சுகுமார் ஆகிய மூன்றுபேரும் இடம்பெற்றனர். இவர்களுக்கான பர்சனல் இன்டராக்‌ஷன் கடந்த 20-08-2020-ல் நடைபெற்றது. இதில் ஜெயசேகரனும், ஜவகர் ஆபிரகாமும் நேரில் கலந்துகொண்டனர். ஜி.சுகுமார் கொரோனா பாதித்து மெடிக்கல் லீவில் இருந்ததால், நேரில் செல்லவில்லை. ஆனால், ஜி.சுகுமாருக்குத்தான் துணைவேந்தர் பதவி வழங்கியுள்ளனர். கேட்டால், ஆன்லைனில் நேர்காணல் நடத்தியதாகச் சொல்கிறார்கள்.

பன்வாரிலால் வீசிய குண்டு... வெடிக்கும் துணைவேந்தர் நியமன சர்ச்சை!

அரசு விதிப்படி, ஒருவரது உடல்நிலை அரசு வேலை செய்வதற்குத் தகுதி இல்லாமல் இருந்தால்தான் மருத்துவ விடுப்பு கொடுப்பார்கள். அந்த வகையில், ‘மெடிக்கல் லீவில் இருப்பவர் களுக்கு வேலை கொடுக்கக் கூடாது, அவரைத் தொந்தரவும் செய்யக் கூடாது’ என விதி இருக்கிறது. எனவே, நேர்காண லாக இருந்தாலும் கலந்துகொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது ஆன்லைனில் எப்படித் தேர்வு நடத்தலாம்... அதற்கு முன்பும் பின்பும் ஆன்லைனில் நேர் காணல் நடத்தி துணைவேந்தர் நியமிக்கப்பட்ட நிகழ்வு நடந்ததில்லை.

இந்தச் சூழலில், கொரோனா பாதித்தவருக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கும் சமயத்தில், அவசரமாக ஆன்லைனில் நேர்காணல் நடத்தியது எதற்காக என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் உடல்நிலை சரியான பிறகு நேர்காணல் நடத்தி யிருக்கலாமே... கடந்த 20-08-2020 அன்றே ஜி.சுகுமார் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகும் 14-09-2020-ல்தான் பதவி ஏற்றுக் கொண்டார். அப்படியானால் ஏன் நேர்காணலை 14-09-2022-ல் வைத்திருக்கக் கூடாது... முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது போல், துணைவேந்தர் நியமனத்தில் பேரம் நடந்திருக்கலாம் என்றே நாங்களும் சந்தேகிக்கிறோம்” என்றனர்.

இதையடுத்து நேர்காணலில் கலந்துகொண்ட டாக்டர் ஜவகர் ஆபிரகாமிடம் இந்தப் பிரச்னை குறித்துப் பேசியபோது, “நான் கவர்னருடன் இன்டராக்‌ஷன் போயிருந்தேன். மற்றொருவரும் வந்திருந்தார். ஒருவருக்கு கொரோனா என்பதால், அவர் ஆன்லைனில் பண்ணியதாகச் சொன்னார்கள். மெரிட்படி நான் செகண்ட் பொசிஷனில் இருந்தேன். மற்றபடி உள்ளே என்ன நடந்தது என்று எனக் குத் தெரியவில்லை. எனக்கு வேறு வேலைகள் இருப்பதால், பழைய விஷயங்களிலெல்லாம் நுழைந்து தோண்ட விரும்பவில்லை” என்றவரின் பேச்சில் ஆதங்கம் வெளிப்பட்டது.

நேர்காணலில் கலந்துகொண்ட டாக்டர் ஜெயசேகரனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “கவர்னருடன் பர்சனல் இன்டராக்‌ஷனுக்கு நானும், இன்னொருத்தரும் போயிருந்தோம். இதில், மெரிட்படி நான் முதலிடத்திலும், நேரில் வந்த மற்றொருவர் இரண்டாவது இடத்திலும் இருந்தார். ஆனால், நேரில் சென்ற எங்கள் இருவருக்கும் துணைவேந்தர் பதவி கிடைக்கவில்லை. மாறாக, பர்சனல் இன்டராக்‌ஷனில் நேரில் கலந்து கொள்ளாத, மெரிட்டில் மூன்றாவதாக இருந்த ஜி.சுகுமாருக் குத்தான் துணைவேந்தர் பதவி கொடுத்திருக் கிறார்கள். இதையெல் லாம் பார்க்கும்போது கவர்னர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என்றே நினைக்கிறோம். எனவே, மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விஷயத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்றார்.

ஜி.சுகுமார்
ஜி.சுகுமார்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.சுகுமாரிடமே விளக்கம் கேட்டோம். “ஏற்கெனவே இன்டர்வியூ தேதி முடிவு செய்துவிட்டார்கள். அந்தச் சமயத்தில் கொரோனா பாதித்திருந்ததால் நான் மருத்துவமனையில் இருந்தேன். மூன்று பேருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால், எனக்கு ஆன்லைனில் இன்டர்வியூ நடத்தினார்கள். கொரோனா சமயத்தில் மாணவர்கள் படித்தது, பரீட்சை எழுதியது எல்லாம் ஆன்லைனில்தான் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில், நேர்காணலை ஆன்லைனில் நடத்தியது மட்டும் எந்தவிதத்தில் தவறாகும்... மருத்துவமனையிலிருந்து ஆன்லைன் மூலமாக கவர்னரை இம்ப்ரஸ் செய்ததால், நான் தேர்வாகியிருக்கிறேன். அவர்கள் இரண்டு பேரும் நேரில் போய் அந்த அளவுக்கு இம்ப்ரஸ் செய்ய முடியவில்லை என்பது அவர்களின் வீக்னஸ்தானே... அவர்களுக்குப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கலாம். மற்றபடி இதில் ஒரு பைசாகூட பரிவர்த்தனை நடக்கவில்லை” என்றார்.

ஆளுநர் போட்டு உடைத்துவிட்டார். தமிழக பா.ஜ.க ஏன் அடக்கிவாசிக்கிறது?!