தி.மு.க தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா உட்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநரே வைத்திருக்கிறார். அதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது.

நீட் மசோதாவில் ஆளுநர் காலம் தாழ்த்திவந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா விரைவில் கொண்டுவரப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு, மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல் வெடித்தது. சமீபத்தில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த நிலையில், உதகையில் துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று (ஏப்ரல் 25) காலை தொடங்கியது. இந்த மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவரான பேராசிரியர் ஜெகதீஷ்குமார் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதற்காக, ஏழு நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகைக்குச் சென்றார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவைக்குச் சென்று, அங்கிருந்து சாலைவழியாக நீலகிரிக்குச் சென்ற ஆளுநருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் மயிலாடுதுறை சென்றபோது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில்தான், கோவையிலிருந்து சாலைவழியாக உதகை சென்ற ஆளுநருக்கு சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.

உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த அறிக்கையில், “சட்ட மரபின்படியும், பதவிவழி முறையிலும் பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் செயல்படும் ஆளுநர், ‘வளர்ந்துவரும் உலகில் இந்தியாவின் பாத்திரம்’ மற்றும் ‘2047-ம் ஆண்டில் உலகின் தலைவராகும் இந்தியா’ என்ற பொருளில் பல்கலைக்கழகங்களின் சிறப்பு மாநாட்டைக் கூட்டியுள்ளார். தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக இருக்கிறார்.

ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் உயர்கல்வி அமைச்சரின் பங்கேற்பு குறித்து எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. பன்னாட்டு தொழில்நுட்ப தனியார் நிறுவனமான சூ ஹோ கழகத்தின் நிறுவனரும், முதன்மை நிர்வாக அலுவலருமான ஸ்ரீதர் வேம்பு முக்கிய உரையாற்றுவார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று முத்தரசன் விமர்சித்திருந்தார்.
மேலும், “அரசியலமைப்பு அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆளுநர், மாநில சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுச் செயல்படவேண்டிய கடமைப் பொறுப்பில் உள்ளவர். மக்களாட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை, அரசியலமைப்புச் சட்ட அத்துமீறலாகும். மேலும், மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிரான, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும்.

தமிழ்நாட்டில் ஓர் அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆளுநர் செயல்படுகிறார். அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கும், மக்களாட்சிக்கும் வழங்கியுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ரத்துசெய்ய வேண்டும். இந்த மாநாட்டை துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் புறக்கணிக்க வேண்டும்” என்று முத்தரசன் கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில்தான், துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று காலை தொடங்கியது. அதேவேளையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான முக்கிய மசோதா ஒன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கும் நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா தொடர்பாக சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, “தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது. கர்நாடக மாநில சட்டத்தின்படி, துணைவேந்தர்களை மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். அதன் அடிப்படையில், 1923-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகச் சட்டம் உட்பட 13 பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.
அதில், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றின் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.

இனி மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் நீதித்துறையைப் பொறுப்பில் கொண்டிருக்கும் அரசுச் செயலாளரை ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நியமிக்க வழிவகை செய்யப்படும்” என்று பொன்முடி குறிப்பிட்டார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது. மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு மக்கள் ஆட்சிக்கு விரோதமானது” என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவையே திருப்பியனுப்பிய ஆளுநர் இவர். இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டபோதும், நீட் மசோதாவை இன்னும் அவர் கிடப்பில்தான் போட்டுவைத்திருக்கிறார். அவரது அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு மட்டும் ஒப்புதல் கொடுத்துவிடுவாரா என்ன... பொறுத்திருந்து பார்ப்போம்!