Published:Updated:

`அமைச்சரே, இங்கே கவனியுங்கள்!' - விஜயபாஸ்கரை அலர்ட் செய்த ஆளுநர் பன்வாரிலால்

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு ( VicePresidentOfIndia Twitter Page )

"அமைச்சரே, நான் பேசுவதைக் கொஞ்சம் கவனியுங்கள், உங்களுக்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்" விஜயபாஸ்கரை அலர்ட் செய்த ஆளுநர்.

"கருணாநிதியும் ஜெயலலிதாவும் மிகச் சிறந்த நிர்வாகிகள்" என்று சென்னையில் நடந்த மருத்துவமனை தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பேசினார்.

மருத்துவமனை துவக்க விழா
மருத்துவமனை துவக்க விழா
VicePresidentOfIndia Twitter Page

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் தனியார் மருத்துவமனையைத் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு திறந்து வைத்தார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பேசுகையில், ``சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவதுபோன்ற உணர்வைத் தருகிறது. தமிழகம் எனக்கு அண்டை மாநிலமாக இருந்தாலும் தமிழகத்தில் எல்லாம் எனக்கு அத்துப்படி. அரசியலில் ஐயா கருணாநிதி முதல் அம்மா ஜெயலலிதா வரை அனைவரும் பரிச்சயம். ஜெயலலிதா பிரபல நடிகை, கருணாநிதி நல்ல எழுத்தாளர். ஆனால், இருவரும் மிகச்சிறந்த நிர்வாகிகள். சினிமாவில் எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல் மட்டுமல்ல... தற்போது உள்ள சூர்யா, விக்ரம், விஷால், குஷ்பு, சிம்பு வரை அனைத்து நடிகர்கள் பற்றியும் நான் அறிவேன். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலம். பலதுறைகளில் முன்னோடிகளாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். மருத்துவர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் எனத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனித்துவமானவர்கள். அதனால்தான் தமிழகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு
VicePresidentOfIndia Twitter Page

இந்தியா பொருளாதாரம், கல்வி, மருத்துவம் எனப் பல துறைகளில் முன்னேற்றமடைந்து வந்தாலும் நோய் பாதிப்பை குறைக்க முடியவில்லை. அதற்கு வந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. அதற்கான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோய் தலைநகரமாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிக்கிறது. புற்றுநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சராசரி மனிதனின் ஆயுட்காலம் நவீன மருத்துவ வசதியால் இன்று 69 வயதாக உயர்ந்துள்ளது. இது நம் மருத்துவத்துறைக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், அந்த வயது வரை நோயில்லாமல் வாழ்வதுதான் உண்மையான வெற்றி. தவறான உணவுப்பழக்கம், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறைதான் அதிகரித்து வரும் நோய்களுக்கு முக்கிய காரணம். இதற்கு நாம் மரபு உணவுகளையும் வாழ்க்கை முறையையும் மறந்து, மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறி இருப்பதுதான் அடிப்படை காரணம்.

எல்லா வசதிகளும் அரசு செய்யும் என்று எதிர்பாக்கக் கூடாது. இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இந்தியாவில் 65 சதவிகிதம் பேர் 35 வயதுகுட்பட்ட இளைஞர்கள்தாம் இருக்கிறார்கள். அவர்கள்தாம் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். வாழ்க்கை முறை, தொற்ற நோய்கள் பற்றியும் மருத்துவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சென்று உடல்நலம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகள் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு பணியில் ஊடகங்களுக்கும் நடிகர்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. விரிவான மருத்துவ சேவைகளை வழங்குவதில், நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையேயான வித்தியாசம் பெரும் சவாலாக உள்ளது. சுகாதார வசதிகளை வழங்குவதில் அரசின் நடவடிக்கைகளுக்குத் தனியார் துறையினரின் பங்களிப்பை மறுக்க முடியாது என்றாலும், தனியார் துறையினர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகர்ப்புறங்களில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நாட்டின் மக்கள் தொகையில், பெரும்பாலான மக்கள் வசிக்கும் கிராமப்புறங்கள் மீதும், தனியார் துறையினர் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,``நாட்டில் மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நோய் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் முன்னோடியாக விளங்குகிறது. இந்தியாவிலிருக்கும் மக்கள் தொகைக்கு 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது போதுமான அளவு மருத்துவர்களையும் மருத்துவ கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. அதனால்தான் பெரும்பாலான வெளிநாட்டினர் மருத்துவ சேவைக்காகத் தமிழகத்தை நாடி வருகின்றனர்.

மருத்துவமனை துவக்க விழா
மருத்துவமனை துவக்க விழா
VicePresidentOfIndia Twitter Page

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலத்துக்கான மத்திய அரசின் விருதை தமிழகம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகப் பெற்று வருகிறது. குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது" என்றார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக மருத்துவ சேவையைப் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர், அருகில் அமர்திருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிக்கொண்டிருந்ததார். இதைக் கவனித்த ஆளுநர், ``அமைச்சரே உங்கள் துறை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய செயல்பாட்டுக்குதான் சர்ட்டிஃபிகேட் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கவனிக்காமல் அருகில் உள்ளவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்" என்றவர், ``நான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்' என்று ஏற்கெனவே பேசியதைத் திரும்பப் பேசினார் பன்வாரிலால் புரோகித். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

பின் செல்ல