நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிளுக்கான பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தலைமையேற்றுப் பங்கேற்கவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் லாரன்ஸ் பள்ளியில் நடைபெறவிருக்கும் விழாவில் பங்கேற்கவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வந்தடைந்தார். ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வானிலை மாற்றம் காரணமாக பயணத்திட்டம் ஒரு நாள் தாமதமானது. அதையடுத்து, சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது. இன்று காலை கோவையிலிருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்குச் சென்ற அவர், ராணுவ பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் பேசினார்.

அப்போது, ``இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. வெளியிலும் உள்ளேயும் இருந்து சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே, எந்தவொரு சவாலையும் சமாளிக்கவும், எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலையும் உறுதியாக முறியடிக்கவும் நமது படைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். வரலாற்று ரீதியாக இந்தியா ஒருபோதும் விரிவாக்கவாதமாக இருந்ததில்லை. வாசுதேவ் குடும்பகம் என்ற சிந்தனையை தன்னுள் கொண்டு விளங்குகிறது. நமது அணுகுமுறை எப்போதும் அமைதியான மற்றும் பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. விரோத சக்திகளால் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்புப் படைகளால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தேசம் நம்புகிறது" என்று பேசினார்.
