சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வியாழன் அன்று முதன்முறையாக வீடியோ கால் வசதியை (Video call) தமிழக சிறைத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் வசதியை சிறைத்துறை டிஜிபியும், இயக்குநருமான அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தைக் குறித்து அமரேஷ் பூஜாரி கூறுகையில், ``தற்போது புழல் மத்திய சிறைச்சாலையில் மொத்தம் 230 பெண் கைதிகள் உள்ளனர். இதற்கு முன்பு சில மாநிலங்கள் தங்கள் சிறைகளில் இதேபோன்ற வசதிகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், நாங்கள் இந்த அம்சத்தை இலவசமாக வழங்குகிறோம்.
சிறைக் கைதிகள் தங்களின் குடும்பத்தினரை ஒரு மாதத்தில் 10 முறையாவது தொடர்பு கொண்டு பேசலாம். ஒவ்வோர் அழைப்பின் போதும் 12 நிமிடங்கள் என மாதத்திற்கு ஒரு கைதி 120 நிமிடங்கள், அதாவது 2 மணிநேரம் வரை பேசலாம்.
புழல் பெண்கள் சிறப்புச் சிறையில் (Special Prison for Women), சோதனை அடிப்படையில் கைதிகளுக்கு வீடியோ கால் வசதியை வெள்ளிக்கிழமையன்று அறிமுகப்படுத்தியுள்ளது, சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தச் சேவைகள் பிரிவு.
சோதனை முயற்சியாக, பெண்களுக்கான சிறப்புச் சிறையில் இந்த வசதி மேற்கொள்ளப்படும். அதன்பின் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படும். இது ஒரு முன்னோடி திட்டம், நாங்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம்.

தங்கள் குடும்பத்தினரைக் காண முடியாத கைதிகளுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறைக் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும். இது அவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வர உதவும்" என்று தெரிவித்துள்ளார்.
பெண் சிறைக் கைதிகளுக்கு வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியதற்காகத் தமிழக சிறைத்துறைக்குப் பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.