Published:Updated:

`பங்களா வீடு; 131% அதிகரித்த சொத்து!’ - ரெய்டு வளையத்தில் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரெய்டு நடைபெறும் இளங்கோவன் வீடு
ரெய்டு நடைபெறும் இளங்கோவன் வீடு

ரெய்டில் இளங்கோவன் சிக்கியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைக்கான முதல்படியாகவே, அவருக்கு நெருக்கமான இளங்கோவன் மீது இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் எனக் கடந்த ஆட்சியிலிருந்து இன்றைக்கு வரை அதிமுக-வில் பவர்ஃபுல்லாக வலம்வருபவர் இளங்கோவன். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே சேலத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம், சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக அப்போதே இளங்கோவைச் சுற்றி சர்ச்சைகள் வலம்வர ஆரம்பித்தன.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இளங்கோவன் மீது நிச்சயமாக ரெய்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று காலையிலிருந்து இளங்கோவனுக்குச் சொந்தமான சேலம் புத்திரகவுண்டன்பாளையத்திலுள்ள வீடு, சேலம், சென்னை, திருச்சி என அவருக்குச் சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர்.

இளங்கோவன்
இளங்கோவன்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவராக 2013, 2018-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோவன், பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருடைய பேரிலும், அவருடைய மகன் மற்றும் பினாமிகள் பேரிலும் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2014 ஏப்ரலில் 30,24,000 ரூபாயாக இருந்த இளங்கோவனின் சொத்து மதிப்பு, 2020-ம் ஆண்டில் 5,61,00,000-ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், அவருடைய ஒட்டுமொத்த குடும்ப வருமானத்தை வைத்துப் பார்த்தால் சொத்து மதிப்பு ரூ.2.88 கோடி மட்டுமே இருந்திருக்க வேண்டுமாம். கிட்டத்தட்ட ரூ.3.78 கோடி ரூபாய் அளவுக்கு இளங்கோவன் மற்றும் அவருடைய குடும்பத்தார் பெயரில் கணக்கில் வராத அதிக அளவு சொத்து சேர்த்திருக்கிறது. இது அவருடைய மொத்த வருமானத்தைவிட 131 சதவிகிதம் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டில் தெரியவந்திருக்கிறது.

மேலும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த பணத்தை வைத்து, தமிழ்நாட்டில் பல இடங்களில் பல சொத்துகளை பினாமிகள் பெயரில் இளங்கோவன் வாங்கிக் குவித்ததும் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, பெருமளவு பணத்தை கல்லூரிகள் மற்றும் திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கிவரும் சுவாமி அய்யப்பன் எஜூகேஷனல் ட்ரஸ்ட்டில் முதலீடு செய்திருப்பதும் ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், சேலம் புத்திரகவுண்டம்பாளையத்தில் அரண்மனை போன்ற மிக பிரமாண்டமான வீடு ஒன்றையும் இளங்கோவன் பல கோடி மதிப்பீட்டில் கட்டியிருக்கிறார்.

ரெய்டு
ரெய்டு
ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்த இளங்கோவனுக்கு, பூர்வீகச் சொத்தாக வெறும் 4.4 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே இருந்திருக்கிறது.

ஆனால், இன்றைக்கு சொந்த ஊரான புத்திரகவுண்டன்பாளையத்தில் பிரமாண்டமான வீடு மற்றும் அவர் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகளைக் கண்டு, சோதனைக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரே ஒருகணம் ஆடிப்போயிருக்கின்றனராம். இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக இளங்கோவன், அவரின் மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர்! - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்?

இந்த ரெய்டில் இளங்கோவன் சிக்கியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைக்கான முதல்படியாகவே, அவருக்கு நெருக்கமான இளங்கோவன் மீது இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இன்னும் அதிரடியாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் ’ என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு