Election bannerElection banner
Published:Updated:

'கண்ணீர்மல்க பிரசாரம்; ஒருவழியாகக் கிடைத்த வெற்றி... 'விராலிமலை' விஜயபாஸ்கர்!' #TNelections2021

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

கடந்த இருமுறை போட்டியிட்டபோது இல்லாத அளவுக்கு இந்த முறை விஜயபாஸ்கர் காட்டிய உருக்கமும், சென்டிமென்ட்டான பேச்சுமே நிலைமை எந்த அளவுக்கு சீரியஸ் என்பதைக் காட்டியது.

இந்தத் தேர்தலில் கண்ணீர், உருக்கம் என செம சென்டிமென்ட் காட்சிகள் அரங்கேறிய தொகுதியாக அமைந்தது  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதி. திமுக-வின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பதால், போட்டி கடுமையாகவே காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இந்தத் தொகுதியில், தொடர்ந்து மூன்றாவது முறையாகக் களம்கண்டார் விஜயபாஸ்கர். திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு டஃப் கொடுத்த தென்னலூர் பழனியப்பனை இந்த முறையும் களமிறக்கியது திமுக. 2016 தேர்தலில், 8,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார் விஜயபாஸ்கர். அவருக்கு 84,701 வாக்குகளும், திமுக-வின் பழனியப்பனுக்கு 76,254 வாக்குகளும் கிடைத்திருந்தன.

ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், இந்தத் தேர்தலிலும் மோதினர். தொகுதிக்குள் பல இடங்களில் பழனியப்பன் கண்ணீர்மல்க சென்டிமென்ட்டாகப் பிரசாரம் செய்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.

பதிலுக்கு விஜயபாஸ்கரும், "எனக்கு சுகர் இருக்கு, பி.பி இருக்கு. மயக்கம் வருது. மாத்திரை போடறேன். எனக்கு ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் சரி, இந்த விராலிமலைத் தொகுதியை நான் சுமந்துகொண்டிருக்கிறேன். உங்களுக்காக உழைக்கவே, வேலை பார்ப்பதற்காகவே பிறந்திருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் ஏசு என்னையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். தோற்றுவிட்டால் உயிரையே விட்டுடுவேன்" என ஏக உருக்கமாகப் பேசி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த இருமுறை போட்டியிட்டபோது இல்லாத அளவுக்கு இந்த முறை விஜயபாஸ்கர் காட்டிய உருக்கமும், சென்டிமென்ட்டான பேச்சுமே, நிலைமை எந்த அளவுக்கு சீரியஸ் என்பதைக் காட்டின.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

ஆனாலும், கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்குத் தனது சார்பில் அளிக்கப்பட்ட நிவாரண உதவிகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொங்கல் சீர், இலவசக் கண் கண்ணாடி, மூன்று சக்கர ஸ்கூட்டி, வேலைவாய்ப்பு முகாம் எனத் தேர்தலுக்கு முன்னதாகத் தான் மேற்கொண்ட உதவிகள் தனக்கு மீண்டும் வெற்றிவாய்ப்பைப் பெற்றுத்தரும் என நம்பிக்கைகொண்டிருந்தார். கூடவே காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவைத்தது, அனைத்து வகையான அரசுத்துறை அலுவலகங்களையும் தொகுதிக்குள் கொண்டு வந்தது போன்றவை அவருக்கு ப்ளஸ் பாயின்ட்டுகளாக இருந்தன. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளும், கட்சி சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அவருக்கு எதிரானவையாக பார்க்கப்பட்டன.

மேலும் விஜயபாஸ்கருக்கு எதிராக இந்த முறை முத்தரையர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியதால், அவருக்கு வழக்கமாகக் கிடைக்கும் முத்தரையர் வாக்குகளில் சரிவு ஏற்படலாம் என்றும், அமமுக வேட்பாளர் கார்த்திக், அதிமுக வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டதால் அதிமுக வட்டாரம் ஆடிப்போய்தான் இருந்தது.

இப்படிப் பலவும் முன்வைக்கப்பட்டபோதும் வாக்கு எண்ணிக்கை வேறுவிதமாக இருந்தது. நேற்று காலை தொடங்கி எண்ணப்பட்ட வாக்குகளில் தபால் வாக்குகள் தொடங்கியது முதலே முன்னிலை வகித்தார் விஜயபாஸ்கர் . சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசம் இருந்தபோதே வாக்கு எண்ணுவதில் சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து பலமுறை நிறுத்தப்பட்டு எண்ணப்பட்ட வாக்குகளில் அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலையிலேயே இருந்தார் விஜயபாஸ்கர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பனைவிட 23,642 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கண்ணீர்மல்க பிரசாரம் செய்த விஜயபாஸ்கர் வாக்கு எண்ணிக்கையின்போது தவிப்புடன் காணப்பட்டார். இறுதியில் அவருக்கு வெற்றி கிட்டியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு