``என் முடிவு இதுதான்; வதந்திகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!'' - விளக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ

`மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் விஜயதரணி பி.ஜே.பி-யில் இணைவார்' என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து விஜயதரணியிடம் பேசினோம்.
கோடை வெயிலுடன், தமிழக சட்டமன்றத் தேர்தல் களமும் அனல் பறக்கிறது. சில கட்சிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்ட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு முறை வெற்றி பெற்றவர் விஜயதரணி எம்.எல்.ஏ. இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், உட்கட்சிப் பூசலால் அந்தத் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

`மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் விஜயதரணி பி.ஜே.பி-யில் இணைவார்' என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து விஜயதரணியிடம் பேசினோம்.
``விளவங்கோடு தொகுதியில் கடந்த இரண்டு முறையும் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கேன். எல்லா இக்கட்டான சூழல்களிலும் தொகுதி மக்களுடன் உடன் இருந்திருக்கிறேன். அதனால், இந்த முறையும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் சீட் கேட்டிருக்கிறேன். மறைந்த வசந்தகுமார் அவர்களின் மகனுக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, விளவங்கோடு தொகுதி எனக்கு வழங்கப்படும் என உறுதியுடன் எதிர்பார்த்தேன்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் எனக்கு எதிராகச் செயல்படுவதாக தகவல் கிடைத்தது. எனக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். உட்கட்சியிலேயே நடக்கும் இதுபோன்ற செயல்களால்தான் வேட்பாளராக என் பெயர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரசாரத்தைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
என் பெயரைக் கெடுக்கும் வகையில் நடக்கும் இதுபோன்ற சில செயல்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. என்னைப் பொறுத்தவரை கட்சிக்கும் மக்களுக்கும் உண்மையுடன் உழைத்திருக்கிறேன். இது கட்சி மேலிடத்துக்கு நன்கு தெரியும். அந்த வகையில் என் தரப்பு விளக்கத்தைக் கட்சிக்கு அளித்திருக்கிறேன்.

தி.மு.க கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதில் நான்கு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பிருக்கிறது. அதில் என்னுடைய பெயர் நிச்சயம் இடம்பெறும் என உறுதியாக நம்புகிறேன். என்னைப் பற்றி எங்கள் கட்சிக்கு நன்கு தெரியும். கட்சியின் நலனுக்கு எதிரான முடிவுகளை எப்போதும் எடுக்க மாட்டேன். அதனால், என்னைப் பற்றிய வதந்திகளுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை" என்று முடித்தார்.