பிரசார வாகனத்தில் விஜயகாந்த்; `கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து அதிமுக-விடம் கேளுங்கள்!’ - பிரேமலதா

`சசிகலாவை நான் சந்திக்கப்போகிறேன் என்ற தகவலே எனக்குச் செய்தியைப் பார்த்த பிறகுதான் தெரியும். சசிகலாவைச் சந்திக்கும் எண்ணம் இல்லை’ என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் கொடிநாள் பிப்ரவரி 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தக் கட்சியின் 21-ம் ஆண்டு கொடிநாளை முன்னிட்டு, கோயம்பேட்டிலுள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்து, 118 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார் விஜயகாந்த். பின்னர் பிரேமலதா, விஜயகாந்த் இருவரும் இணைந்து பரப்புரை வாகனத்திலிருந்தபடியே பொதுமக்களைச் சந்தித்தனர்.

வாகனத்திலிருந்தபடியே அங்கிருந்த தொண்டர்களிடம், ``அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்'’ என்று பேசினார் விஜயகாந்த். அந்தக் கூட்டத்திலிருந்த தொண்டர் ஒருவர் அவரின் பெண் குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு விஜயகாந்த்திடம் கோரினர். அந்தப் பெண் குழந்தைக்கு, `விஜயலதா', என்றும் மற்றொரு பெண் குழந்தைக்கு `ஜனனி' என்றும் விஜயகாந்த் பெயர் சூட்டினார்.
அடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``இனி தொலைக்காட்சி விவாதங்களில் தே.மு.தி.க நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். அவர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இன்றுவரை அ.தி.மு.க கூட்டணியில்தான் நீடிக்கிறோம். கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. அ.தி.மு.க. இதுவரை எந்தக் கட்சியோடும் தொகுதிப் பங்கீடு நடத்தவில்லை. பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்பதை அ.தி.மு.க-விடம்தான் கேட்க வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``சசிகலாவை நான் சந்திக்கப்போகிறேன் என்ற தகவலே எனக்குச் செய்தியைப் பார்த்த பிறகுதான் தெரியும். சசிகலாவைச் சந்திக்கும் எண்ணம் இல்லை. அது முற்றிலும் தவறான தகவல். 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவுக்கு நாங்கள் வலிமையாக இருக்கிறோம். தலைவர் உத்தரவிட்டால், தொண்டர்கள் விரும்பினால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்தத் தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை. தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார்" என்று கூறினார்.