Published:Updated:

FactCheck: ஸ்டாலின் கார் டயரில் எலுமிச்சைப்பழம்?! - இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

விகடன் ஃபேக்ட் செக்
விகடன் ஃபேக்ட் செக்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தின்போது பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற அவரது காரின் டயரில் எலுமிச்சைப்பழம் உள்ளதாகக் குறிப்பிட்டு, `தமிழகத்தின் பகுத்தறிவு டெல்லியில் பல் இளித்துவிட்டக பாஜக-வினர் நேற்று இணையத்தில் ஒரு புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வைரலாக்கினார்கள்.

அந்தப் புகைப்படத்தில், Dl 9CT 5858 என்ற இந்தியக்கொடி பதித்த இனோவா காரின் நான்கு டயர்களுக்கு அடியிலும் எலுமிச்சைப்பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனத்தில்தான் தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்திக்கச் சென்றதாகவும், `தமிழ்நாட்டின் பகுத்தறிவு டெல்லியில் பல் இளித்துக்கொண்டிருப்பதாக’வும் வலதுசாரி ஆதரவாளர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கினார்கள். இந்தப் புகைப்படத்தை, பாஜக-வைச் சேர்ந்த கல்யாண், வலதுசாரி ஆதரவாளரான மாரிதாஸ் உள்ளிட்ட பலரும் ஷேர் செய்து ட்ரோல் செய்தனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே வைரலான புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.

வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்

தமிழக முதல்வரின் டெல்லி பயணம் குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. அதில் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திய காரின் எண்ணை கவனித்துப் பார்த்த மாத்திரத்தில், இணையத்தில் பகிரப்பட்டுவரும் அந்தப் புகைப்படம் போலியானது என்பது புலனாயிற்று.

முதற்கட்டமாக, mParivahan செயலியில் ஆராய்ந்து பார்த்ததில், டயரில் எலுமிச்சைப்பழங்கள் வைத்ததுபோல் இணையத்தில் பரவிவரும் புகைப்படத்திலிருந்த இனோவா காரின் எண் DL 9CT 5858. ஆனால், முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திய லேண்ட்க்ரூஸர் காரின் எண் DL 9CF 0900. இதற்கிடையில், தமிழகப் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் டெல்லி நிருபர்கள் பலரும் டெல்லியில் ஸ்டாலின் பயன்படுத்திய உண்மையான காரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, எலுமிச்சைப்பழம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஊடகவியலாளர்கள் நிரஞ்சன் குமார், அரவிந்த் குணசேகர் உள்ளிட்ட டெல்லி பத்திரிகையாளர்கள் பலரும் ஸ்டாலின் பயன்படுத்திய புகைப்படத்தைப் பகிர்ந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திய வாகனம்
முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திய வாகனம்

அதேபோல், இணையத்தில் பகிரப்பட்டுவந்த புகைப்படத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடமும், முதல்வர் ஸ்டாலினின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடமும் உண்மையில் வெவ்வேறு என்பதை அந்த புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் அறிய முடிந்தது. இணையத்தில் முதல்வர் ஸ்டாலினை ட்ரோல் செய்து பகிரப்பட்டுவந்த புகைப்படம் போலியானது என்பது Fact Check-ன் முடிவில் உறுதியாகியுள்ளது.

Fact Check
Fact Check

மேலும், அந்தப் புகைப்படம் போலி என்று உறுதியாகிவிட்டதை அடுத்து, திமுக-வினர் மறுமுனையில் டயரில் எலுமிச்சைப்பழங்கள் வைக்கப்பட்ட வாகனம் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனமாகத்தான் இருக்கும் என்று பதிலுக்கு ட்ரோல் செய்துவருகின்றனர்.

அதேபோல், தனியார் தொலைக்காட்சியின் டெல்லி நிருபர் நிரஞ்சன் குமார் தனது ட்விட்டரில் அந்த எலுமிச்சைப்பழம் வைக்கப்பட்ட வாகனம் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் வாகனம் இல்லையென்றும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம்தான் என்றும், கடந்த ஆட்சியில் பழனிசாமி டெல்லிக்கு வந்திருந்தபோது தான் எடுத்த புகைப்படம் என்றும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு