தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அதன் அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஒருமையில் பேசுவது, ஆங்காங்கே பொதுவெளியில் பட்டப்பகலில் நடைபெறும் கொலைகள் காரணமாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது எனத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிவரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `ஆட்சியும் கட்சியும் முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை’ என அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் மீதான எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய கருத்து குறித்து விகடன் வலைதள பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், `ஆட்சியும் கட்சியும் முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாதம்...' எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, `சரியானதே, தவறானது, கருத்து இல்லை' என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன. இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 52 சதவிகிதம் பேர் `எடப்பாடி பழனிசாமியின் வாதம் சரியானதே' என்று தெரிவித்திருக்கின்றனர்.

அதற்கடுத்த படியாக 44 சதவிகிதம் பேர் `எடப்பாடி பழனிசாமியின் வாதம் தவறானது' என்றும், 5 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.