தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பியனுப்பியிருக்கும் விவகாரம், அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

`இது மத்திய அரசின்கீழ் வருகிற விவகாரம், மாநில அரசு இதில் தனியாகச் சட்டம் இயற்ற முடியாது' என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தது விவாதப்பொருளாக மாறியது. அதைத் தொடர்ந்து, மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, `மீண்டும் மசோதா கொண்டுவருவோம்' என்று கூற, `ஏதோவொரு அழுத்தத்தால்தான் ஆளுநர் இப்படிச் செய்திருக்கிறார்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
அந்த வரிசையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இத்தகைய செயல் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில், வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், `ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பியனுப்பியது...' என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `சரி, தவறு, கருத்து இல்லை' என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 84 சதவிகிதம் பேர், ஆளுநர் திருப்பியனுப்பியது `தவறு' என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 12 சதவிகிதம் பேர் `சரி' என்றும், 4 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.