முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியலில் பேசுபொருளானது. அதற்கடுத்த சில நாள்களிலேயே, தமிழ்நாடு அமைச்சரவையும், பழனிவேல் தியாகராஜனின் இலாகாவும் மாற்றப்படவிருப்பதாகச் செய்திகள் உலவின. அதை உறுதிசெய்யும்விதமாக கடந்த வாரம் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தொழில்வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது.

குறிப்பாக, பழனிவேல் தியாகராஜனின் நிதித்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்துவந்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றம் அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளானது.
அதன் தொடர்ச்சியாக பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் குறித்து விகடன் இணையதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், `நிதித்துறையிலிருந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை மாற்றிய தி.மு.க அரசின் முடிவு ...' எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, `சரியானது, தவறானது, கருத்து இல்லை' என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக `78 சதவிகிதம் பேர் தி.மு.க அரசின் முடிவு தவறானது' எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 15 பேர் சரியானது என்றும், 7 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.