Published:Updated:

இந்திய - சீன போர்... 1962-ல் எல்லையில் என்ன நடந்தது? - ஒரு பிளாஷ்பேக் #IndiaChinaFaceOff #1962ThrowBack

Indo-China War 1962
News
Indo-China War 1962

`ராணுவ முறையிலின்றி அரசியல் ரீதியிலும் சீனா சூழ்ச்சி' - 1962-ம் ஆண்டு எல்லையில் நடந்தது என்ன? (பகுதி 1) #VikatanOriginals

1962-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தொடங்கிய இந்தியா - சீனா இடையிலான போர், அந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் வெளியான ஆனந்த விகடன் தலையங்கங்களும் கார்ட்டூன்களும் அப்போது நடந்த அனைத்தையும் அப்படியே பதிவு செய்தன. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில், அந்தத் தலையங்கம் பகுதிகளையும், கார்ட்டூன்களையும் இப்போது வாசகர்களின் பார்வைக்கு #VikatanOriginals பகுதி மூலம் முன்வைக்கிறோம்.

முதலில், 28.10.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான தலையங்கம் பகுதியிலிருந்து...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாட்டைக் காக்க ஒன்றுபடுவோம்!

பாரத நாடெங்கிலுமுள்ள மக்கள் உள்ளக் களிப்போடு கொண்டாடும் பண்டிகை தீபாவளி, துன்பங்கள் அகன்று இன்பங்கள் பயக்கும் திருநாளென அதைக் கருதுகிறார்கள்.

தீய சக்திகளெல்லாம் நரகாசுரன் என்ற அரக்கனாக உருவெடுத்து உலகை வாட்டி வதைத்ததாகவும், அந்த அரக்கனை அழித்து, கண்ணன் உலகைக் காப்பாற்றியதாகவும், புராணக் கதை. கொடுமை அகன்று வாழ்வில் ஒளி வீசிய அந்த நாளைத்தான் தீபங்கள் ஏற்றி, பட்டாசு வெடித்து புத்தாடை உடுத்தி, இனிய பண்டங்களை உண்டு மக்கள் தீபாவளியெனக் கொண்டாடுகின்றனர்.

சுதந்திரம் பெற்று, பதினைந்து ஆண்டுகளாக நல்வாழ்வுக்காகப் பாடுபட்டு முன்னேறிவரும் பாரத நாட்டைத் தற்போது ஓர் அரக்கன் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். பாரதத்தின் எல்லையிலேயே 12,000 சதுர மைல் மண்ணை அந்த அரக்கன் விழுங்கிவிட்டான். ஆனால், இன்னும் அவன் பசி தீரவில்லை. நாட்டை முழுவதுமே விழுங்கிடத் திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றான்.

தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொன்னால் அந்த அரக்கன் கேட்பதாக இல்லை. `உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்தே தீருவேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு' என்று விதண்டா வாதம் செய்கிறான்.

உண்மையிலேயே இன்று பாரத நாட்டின் சுதந்திரத்துக்குக் கம்யூனிஸ்டு சீனாவிடமிருந்து பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. மனித நடமாட்டமற்ற எல்லையிலே சிறு விஷமங்கள் செய்து தொல்லை கொடுப்பதோடு கம்யூனிஸ்டு சீனா நின்றுவிடுமென்று எண்ணி இனியும் நாம் ஏமாறக் கூடாது.

Indo-China War 1962
Indo-China War 1962

இதற்கு, முழுவதையும் அல்லது அதன் பெரும்பகுதியையாவது விழுங்கிட கம்யூனிஸ்டு சீனா திட்டமிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது என்பது நன்கு புலனாகிவிட்டது.

இதற்கு, ராணுவ முறையிலின்றி அரசியல் ரீதியிலும் கம்யூனிஸ்டு சீனா சூழ்ச்சி செய்கிறது. `இந்தியாவுக்கு அண்டையில் நண்பர்களோ அனுதாபிகளோ இருக்கக் கூடாது; அப்படியிருந்தால் தங்கள் முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படும்' என்று இந்தியா மீது அவற்றுக்குப் பகையை ஏற்படுத்த அது பெருமளவு முயலுகிறது.

அரசியல் கொள்கையிலே பிற்போக்கானதும், கம்யூனிஸ்ட் சீனாவின் எதிரிகளான மேற்கு வல்லரசுகளுடன் ராணுவ உறவு கொண்டுள்ளதுமான பாகிஸ்தானுடன் குலாவி, எல்லை ஒப்பந்தம் செய்துகொள்ள சீனா துணிந்திருப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. பொதுவுடமைக்கே நேர்மாறான மன்னர் ஆட்சி நடந்துவரும் நேபாளத்துடன் உறவு கொண்டு, இந்தியாவுக்கு விரோதமான கிளர்ச்சிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டி விடுவதும் இதற்காகத்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராணுவ முறையில் அது செய்து வரும் ஏற்பாடுகளும் வெறும் எல்லைச் சச்சரவோடு நிறுத்திக்கொள்ளும் நோக்கத்தைத் தெரிவிக்கவில்லை. பெரும் சாலைகளையும், விமான நிலையங்களையும், ராணுவ முகாம்களையும் அமைத்து வருவது இந்தியா மீது படையெடுப்பதற்கான திட்டமேதான்.

இதுகாறும், ``எல்லை சரியாக நிர்ணயமாகவில்லை. நாங்கள் பிடித்துக்கொண்டிருக்கும் பிரதேசம் எங்கள் பூகோளப் படத்தின்படி சீனப்பகுதிகள்தான். சரித்திர ரீதியாகப் பார்த்தாலும் அவை இந்தியப் பகுதிகள் அல்ல'' என்றெல்லாம் வாதம் செய்து கொண்டிருந்த சீனா இப்போது பகிரங்கமாகவே இந்தியாவைப் பார்த்து சவால் விடுகிறது. இந்தியா அனுப்பும் கண்டனக் குறிப்புக்களுக்கான பதில்களில் கூட நேர்மையான வாதம் இல்லை. `அப்படித்தான் செய்வோம்' என்ற ஆணவம்தான் காண்கிறது. அது மட்டுமல்ல, சீனத் தலைவர்கள் தங்கள் மக்களிடம் இந்தியாவுடனான யுத்தம் தொடுப்பதைப் பற்றிப் பகிரங்கமாகவே பிரசாரம் செய்கின்றனர்.

இவ்வாறு சீனாவின் நோக்கம் ஐயத்துக்கிடமின்றி வெளிப்பட்ட பின்னும் சிலர் `அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்' என்று சொல்வது வேடிக்கையாகவே இருக்கிறது.

28.10.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
28.10.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

ஆனால், இந்திய அரசாங்கம் இனியும் சீனாவின் சமரச மனப்பான்மையில் நம்பிக்கை கொண்டு வாளாவிருக்கத் தயாராக இல்லை. `மேலும் பொறுமை காட்டினால் அது பயத்துக்கும், பலவீனத்துக்கும் அறிகுறிகளாகவே கொள்ளப்படும். அண்டையிலுள்ள நமது நண்பர்களுக்கும் இந்தியாவிடம் நம்பிக்கை குறைந்து விடும்' என்பதை உணர்ந்துவிட்டது. எனவேதான் சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வட கிழக்குப் பகுதிகளை மீட்குமாறு ராணுவத்துக்கு இந்திய சர்க்கார் கட்டளை பிறப்பித்துள்ளது.

எப்போது எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது ராணுவத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால், `சீனாவுடன் சமரசம் பேசித் தீர்வு காண்பது இனி நடவாத காரியம், சீனாவுடன் அதன் பாஷையிலேயேதான் பேச வேண்டும்' என்று இந்திய சர்க்கார் இறுதியாக முடிவு செய்துவிட்டது.

இனி இந்தியப் பகுதிகளை நாட்டின் சுதந்திரத்தையும் கெளரவத்தையும், பாதுகாக்கும் பொறுப்பு நமது ராணுவத்தைச் சேர்ந்துவிட்டது. சீனா எளிதில் அந்த இடங்களை விட்டு வெளியேறுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. கடுமையாகப் போரிட்டுத் தான் நாம் நமது எல்லையை மீட்கவேண்டியிருக்கும். அதற்கு நமது ராணுவம் போதிய பலமும், திறமையும், உறுதியும் பெற்றுள்ளன என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், நமது ராணுவம் அத்தகைய உறுதியுடன் நின்று உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாட்டு மக்கள் அனைவரும் அதற்குப் பின்பலமாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். போர் முனையில் வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் மற்றவர்கள் உள் நாட்டில் சிறு சச்சரவுகளிலும் பூசல்களிலும் ஈடுபட்டிருந்தால் எப்படி? அதனால்தான் நமது ஜனாதிபதி அவர்கள் `இந்த அபாயத் தருணத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நமது அரசங்கத்துக்கும் ராணுவத்துக்கும் பக்க பலமாக நிற்க வேண்டும்' என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

இந்தச் சோதனையான தருணத்தில் நாட்டின் பொது நன்மையைக் கருதி சிறு வேற்றுமைகளையும் அரசியல் அபிப்பிராய பேதங்களையும் மறந்து, அனைவரும் ஒன்றுபட்டு நின்று, உறுதியுடன் எதிரியை விரட்டுவோமாக.

- தொடரும்