Published:Updated:

சண்முகத்துக்கும் பொன்முடிக்கும் இடையேதான் போட்டி!

சி.வி.சண்முகம், முத்தமிழ்செல்வன்,
பிரீமியம் ஸ்டோரி
சி.வி.சண்முகம், முத்தமிழ்செல்வன்,

விக்கிரவாண்டி விறுவிறு

சண்முகத்துக்கும் பொன்முடிக்கும் இடையேதான் போட்டி!

விக்கிரவாண்டி விறுவிறு

Published:Updated:
சி.வி.சண்முகம், முத்தமிழ்செல்வன்,
பிரீமியம் ஸ்டோரி
சி.வி.சண்முகம், முத்தமிழ்செல்வன்,

மீண்டும் ஆரம்பித்துவிட்டது இடைத்தேர்தல் சீஸன். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மனுத்தாக்கல் முடிந்த நிலையில், பொதுக்கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், தலைவர்களின் அனல்பறக்கும் பிரசாரம்... எனக் களைகட்டியிருக்கிறது தொகுதி நிலவரம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வின் ராதாமணி, கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார். இந்தத் தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, அ.தி.மு.க சார்பில் காணை ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தமிழ்செல்வனும், தி.மு.க சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தியும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சி.வி.சண்முகம், முத்தமிழ்செல்வன்,  பொன்முடி, புகழேந்தி
சி.வி.சண்முகம், முத்தமிழ்செல்வன், பொன்முடி, புகழேந்தி

அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வனைப் பொறுத்தவரை, தொகுதிக்காரர், பாரம்பர்யமான அ.தி.மு.க குடும்பம், அனைவரிடமும் எளிமையாகப் பழகுபவர் போன்றவை ப்ளஸ். அதேசமயம், ‘வேலை வாங்கித் தருவதாகக் கூறி கட்சிக்காரர்களிடமே பணம் வாங்கிக்கொண்டு சுற்றலில் விட்டுவிடுவார்’ என்ற பரவலான புகார் இவருக்கு மைனஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க வேட்பாளர் புகழேந்தியைப் பொறுத்தவரை, கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் அமைதியாக அணுகுவது, 30 ஆண்டுக்காலம் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிழலாக வலம்வருவது போன்றவை ப்ளஸ். தொகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகமான அளவுக்கு, பொதுமக்களிடம் அறிமுகமில்லாதவர் என்பது மைனஸ்.

இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்குமான நேரடிப் போட்டி என்று சொல்வதைவிட, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குமான பலப்பரீட்சை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

2,23,387 வாக்காளர்களைக்கொண்ட இந்தத் தொகுதியில், வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ராதாமணி, அ.தி.மு.க வேட்பாளர் வேலுவைவிட 6,912 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். அப்போது தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகள் வாங்கிய பா.ம.க தற்போது தங்கள் அணியில் இருப்பதால், வெற்றி உறுதி எனக் கணக்குப்போடுகிறது அ.தி.மு.க.

அதேசமயம், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் கூடுதல் வாக்குகள் வாங்கியதையும் கவனத்தில் வைத்தபடி காய் நகர்த்துகிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

பா.ம.க மற்றும் தே.மு.தி.க தரப்பு வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய நினைக்கிறார் சி.வி.சண்முகம். அதற்கேற்றார்போல், தே.மு.தி.க மற்றும் பா.ம.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அந்தக் கட்சி தொண்டர்களை குளிர்விக்கும் வகையில் வசனங்களை அள்ளிவிடுகிறார். ஆனால், வைட்டமின் ‘ப’ விஷயத்தில் அ.தி.மு.க கறாராக இருப்பதால், கூட்டணிக் கட்சியினரின் நிர்வாகிகள் தொகுதிக்குள் தலை காட்டவே தயங்குகின்றனர் என்கிறார்கள்.

தேர்தல் பொறுப்புக் குழுச் செயலாளராக, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனை களம் இறக்கியிருக்கிறது தி.மு.க. இந்தக் குழு, கிராமங்களில் இருக்கும் அடிமட்டத் தொண்டர்களின் வீடு வரை செல்வதால், உற்சாகமாக இருக்கிறார்கள் தொண்டர்கள். ‘எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படாத இந்தத் தொகுதியில், அரசு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவந்தது நாங்கள்தான்’ என்ற கோஷத்தை வைக்கும் தி.மு.க., எதிர் அணியை பி.ஜே.பி-யின் முகமாக முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. தவிர, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 78,656 வாக்குகள் பெற்று 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தங்களுடன் இருப்பதை, கூடுதல் பலமாக நினைக்கிறது தி.மு.க. அத்துடன் துரைமுருகன், திருமாவளவன், ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட தங்கள் கட்சித் தலைவர்களை தொகுதிக்குள் வரிசைகட்டி அனுப்பி பொதுக்கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் எனச் சுழலவைக்கிறது.

இந்தத் தொகுதிக்கென தனி தீயணைப்பு நிலையம் வேண்டும் என்பது, இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. அதேபோல் விக்கிரவாண்டி மற்றும் காணை ஒன்றியங்களைச் சேர்த்து சுமார் 40 கிராமங்களுக்குப் பயன்படக்கூடிய நந்தன் கால்வாய்த் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. நல்லாப்பாளையம், பனைமலைப் பேட்டையில் இருந்து விக்கிரவாண்டிக்குச் செல்வதற்கு, பேருந்து வசதிகள் இல்லை. தடையில்லா குடிநீர், தரமான சாலைகள் ஆகியவையே மக்களின் பிரதானத் தேவைகளாக உள்ளன. இவற்றை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி தரும் வேட்பாளர் மீதே மக்களின் கவனம் திரும்புவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது.